Feed Item
Added article 

நடந்தது என்ன?

லீவு தராத மேனேஜரை ஒரு வழி பண்ண வேண்டும் என்று நினைத்து அடுத்த நாள் டவுசர் பணியனுடன் ஆபீஸ் வந்து அமர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் கலைவாணர் என்.எஸ் கிருஷ்ணனுக்கு பிறகு நகைச்சுவையில் உச்சம் தொட்டவர்கள் சந்திரபாபு மற்றும் நாகேஷ். இதில் சிறுவயதிலேயே நகைச்சுவை உணர்வுடன் இருந்த நாகேஷ் தனது வெகுளியான கேள்விகள் மூலம் பலரை கோபப்படுத்தியும் இருக்கிறார். அதே போல் சிரிக்கவும் வைத்திருக்கிறார். பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்த நாகேஷ் அலுவலகத்தில் பணியாற்றிக்கொண்டே நாடகங்களில் நடிக்க வாய்ப்பு தேடியுள்ளார்.

அப்போது ஒருநாள் நாடக ஒத்திகைக்காக லீவு வேண்டும் என்று கேட்டால் மேனேஜர் கொடுக்க மாட்டார் என்பதால் வெளியில் சொல்ல முடியாத காரணங்களால் நாளை ஒருநாள் லீவு வேண்டும் என்று கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தை படித்த அந்த மேனேஜர், நாகேஷை திட்டி லீவெல்லாம் தர முடியாது. நாளைக்கு ஆபீஸ் வந்துவிடு என்று கண்டிப்பாக சொல்லிவிட்டு போய்விட்டார்.

இதனால் கோபமாக நாகேஷ் நாளைக்கு நாடக ஒத்திகைக்கு போக முடியாது. ஆனாலும் இந்த மேனேஜரை ஒரு வழி பண்ண வேண்டும் என்று நினைத்து அடுத்த நாள் டவுசர் பணியனுடன் ஆபீஸ் வந்து அமர்ந்துள்ளார். இதை பார்த்த அனைவரும் ஆச்சரியமடைந்த நிலையில், மேனேஜர் கோபமாக என்னயா இது எதுக்காக இப்படி வந்துருக்க என்று கேட்டுள்ளார். சார் என்னிடம் இருந்தது 2 செட் பேண்ட் சார்ட். அதில் ஒன்றை நேற்று போட்டேன். மற்றொன்று மழையில் நனைந்து விட்டது.

அந்த ட்ரெஸை போட்டால் எனக்கு ஜலதோஷம் பிடித்துவிடும். அதனால் தான் வெளியில் சொல்ல முடியாத காரணங்களுக்காக லீவு வேண்டும் என்று கடிதம் எழுதினேன் என்று சொல்ல, அலுவலகத்தில் உள்ள அனைவரும் விழுந்து விழுந்து சிரித்துள்ளனர். அதன்பிறகு மீண்டும் நாடக வாய்ப்பு தேடி அலைந்து கொண்டிருந்த நாகேஷ்க்கு ஒரு நாடகத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. 

வயிற்றுவலி வந்த மாதிரி நடிக்க வேண்டும்.

இதற்காக ஒன்னறை மாதங்கள் ஒத்திகையில் கலந்துகொண்ட நாகேஷ், நாடகம் நடக்கும் நாளில் பதட்டமாக இருந்துள்ளார். ஆனாலும் அவரது காட்சி வரும்போது இயக்குனர் அடுத்து நீதான் போ என்று சொல்ல, இருங்க சார் நான் என்ன சாதாரண ஆளா வயிற்றுவலி பேஷண்ட் மெதுவாத்தான் போவேன் என்று சொல்லி சென்ற நாகேஷ் இயக்குனர் சொல்லிக்கொடுத்ததை பண்ணாமல், தனக்கே உரிய பாணியில் ஒரு நிமிடத்தில் முடிய வேண்டிய சீனை சில நிமிடங்கள் தாமதமாக முடித்துள்ளார்.

இந்த காட்சி அங்கு நாடகம் பார்த்துக்கொண்டிருந்தவர்கள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்திய நிலையில், நாடகத்தை முதல் வரிசையில் பார்த்துக்கொண்டிருந்த பிரபலம் ஒருவர் நாகேஷ்க்கு பரிசு வழங்கியுள்ளார். அதேபோல் திட்டுவார் என்று நினைத்த இயக்குனர் நாகேஷை கட்டி பிடித்து பாராட்டியுள்ளார். அதன்பிறகு நாகேஷ் அந்த இயக்குனரிடம் எனக்கு பரிசு கொடுத்தவர் யார் என்று கேட்க, அவர் தான் எம்.ஜி.ஆர் என்று கூறியுள்ளார்.

  • 772