- · 1 friends
-

ராவணன் கேட்ட தட்சணை
ராமனின் பாதம் பட காத்திருந்தது அந்த புத்தம் புதிய சேது. காரியம் முடிந்த களைப்பில் ஓய்வெடுத்து கொண்டிருந்த வானர சேனையை பெருமையோடு நோக்கினான் ராமன்.
இச்சிறப்பு மிக்க சேது பாலத்தை துவக்கி வைக்க சிவ பூஜைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும், வேண்டியனவற்றை தயார் செய்ய பணித்தார்.
ராமனின் விருப்பமறிந்த ஜாம்பவான் இத்தகைய சேதுவை துவக்கி, சிவ பூஜை செய்து வைக்க மிகச்சிறந்த பண்டிதர் அவசியம் என்றுரைத்தார்.
அப்படி யாரேனும் அருகே உள்ளனரா என்ற ராமனின் கேள்விக்கு, ராவணன் ஒருவனே என்று தயக்கத்துடன் பதிலளித்தார் ஜாம்பவான். பதிலைக் கேட்ட ராமனின் இதழோரம் புன்னகை அரும்பியது!
பிறகென்ன யோசனை. நமது வேண்டுகோளுடன் அனுமனை அனுப்புங்கள். இப்பூஜையை சிறப்புற நடத்தி தர அப்பண்டிதரையே வேண்டி வரவழைத்து வாருங்கள்.
விரோதியின் தேசத்தை அடையும் வழிக்கு அவனை வைத்தே பூஜையா? இது நடக்குமா!? அதிர்ச்சியில் ஆழ்ந்தனர் சுக்ரீவனும் அவனின் சேனைகளும்!
ராமனின் விருப்பமறிந்த வாயு மைந்தனை தடுக்க முடியுமா? இமைப்பொழுதில் இலங்கை அரண்மனையில் நின்றார் அஞ்சனை மைந்தன். அரக்கர்கள் சூழ்ந்தனர், இலங்கையை தீக்கிரையாக்கியவன் திரும்பி வந்ததுள்ளானே!? அரக்கர்களே சண்டையிட வரவில்லை. சிவ பூஜை செய்து வைக்க உத்தமமான சிவ பக்தன் ராவணனை நாடி வந்துள்ளேன்.
தன் முன்னால் நிற்கும் அனுமனின் கோரிக்கையை கேட்டு வியந்தது ராவணனோடு அவனது சபையும்! இது சூழ்ச்சி என்றனர் சபையோர்.
சூழ்ச்சியால் தங்களை வெல்ல இயலுமோ? தயை கூர்ந்து எங்கள் வேண்டுகோளுக்கு செவிசாய்க்க வேண்டும் என்றார் அனுமன்.
அச்சமும் ஆவேசமும் திகைப்பும் கூடி எழுந்து நின்று அனுமனை நோக்கி கூச்சலிட்டவர்களை கையமரச்செய்து, இந்த வேள்வியை நடத்தித்தர ஒப்புக் கொண்டான் சிறந்த சிவ பக்தனான ராவணன்.
வேத சாஸ்திரங்களை கரைத்துக் குடித்த இப்பண்டிதனுக்கு எப்படி இப்படி ஒரு கீழ்த்தரமான எண்ணம் ஏற்பட்டது? என பூஜை நடத்தி தர வந்த ராவணனை பார்த்து ராமனும், சங்கு சக்கரங்கள் மட்டும் இவனது கரங்களில் இருந்தால் விஷ்ணுவாகத்தான் இவன் தோன்றுவான் என ராவணனும் எண்ணினர்.
பூஜை ஏற்பாட்டில் ஏதேனும் குறை இருந்தால் பகிரவும் என்ற ராமனின் கோரிக்கைக்கு, தசரத மைந்தா! ஏற்பாடுகள் நேர்த்தியாக உள்ளது. ஆனால் துணைவியின்று கிரஹஸ்த்தன் செய்யும் எந்தக் காரியத்தையும் சாஸ்திரங்கள் அங்கீகரிப்பதில்லை என்று பதிலளித்தார் இலங்கேஸ்வரன்.
தாங்கள்தான் வேள்வியை சிறிதும் குறைவின்றி நடத்தி தர வேண்டும் என்றார் ராமன்.
சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்த ராவணன், பூஜைக்காக சீதாவை (பூஜை முடியும் வரை உங்கள் இருவருக்கும் இடையே எந்த பேச்சுவார்த்தையும் கூடாது, மேலும் பூஜை முடிந்த மறுகணமே சீதையை அழைத்து சென்று விடுவேன் என்ற நிபந்தனையுடன்) வரவழைத்தார்.
சொல்லொனா வியப்பில் ஆழ்த்தும் இப்பூஜையை நடத்திக் கொடுத்தற்காக தட்சணையை தயைக்கூர்ந்து தெரியப்படுத்த வேண்டும் என்று கைக்கூப்பியவண்ணம் பண்டிதரான ராவணனிடம் வினவினார் ராமன்.
அதற்கு தணிந்த குரலில், ராம பிராணுக்கு மட்டுமே கேட்கும் படி, ராவணன் பதில் அளித்தான்.
"என்னை பண்டிதராய் மதித்து சிவ பூஜை செய்ததற்கு நன்றி! மேலும் சிவ பூஜைக்கு நான் தட்சணை வாங்குவதில்லை. தட்சணை தராததால் பலன் கிட்டாது என்று நீ எண்ணக்கூடும். யுத்தத்தில் ஒருவேளை நான் தோல்வியுற்று என் உயிர் பிரிய நேர்ந்தால் அத்தருணத்தில் நீ என் அருகில் இருக்க வேண்டும். இது மட்டும்தான் நான் எதிர்பார்க்கும் தட்சணை!" என்றான் சகல வேதங்களையும் சாஸ்திரங்களையும் கற்றுத் தேர்ந்த இலங்கேஸ்வரன்!?