- · 1 friends
-

அதிர்ஷ்டப் போட்டி
அதிர்ஷ்டமில்லாத கார் என்று ஒரு கோடி மதிப்புள்ள பிரான்டட் காரை 10 லட்சம் ரூபாய்க்கு ஒருவர் விற்பதாய்ச் சொல்லவும், அதைத் தான் வாங்கிக் கொள்வதாய்ச் சொல்லி ஐந்து லட்சம் ரூபாயை அட்வான்ஸ் தொகையாக கொடுத்திருந்தார் குலுக்கல் சீட்டு கோவிந்தன்.
ஆனால், காரை மறுநாள் டெலிவரி செய்வதாய் சொல்லியிருந்த கார் முதலாளி, டிரைவர் காரைக் கொண்டுவரும் வழியில் ஆக்சிடென்டில் மாட்டி கார் சேதமாகிவிட்டதால், 'இப்போது கார் பழைய நிலையில் இல்லை என்பதால் தரமுடியாது' என்றார்.
"சரி.. பணத்தையாவது திருப்பிக் கொடுங்கள்.!" என்று குலுக்கல் சீட்டு கோவிந்தன் கேட்க, "என்னால் அது முடியாது. நான் ஏற்கனவே பணத்தை டிரைவரைக் காப்பாற்ற செலவழித்துவிட்டேன். நான்தான் சொன்னேனே... இந்தக் கார் ஒரு அதிர்ஷ்டம் கெட்டது என்று.." என்று அதற்கும் மறுத்தார் கார் உரிமையாளர்.
கடைசியாய், "சரி.. உடைந்த காரையாவது என்னிடம் கொண்டு வாருங்கள். அதிர்ஷ்டமில்லாத அந்தக் காரை வைத்து ஒரு அதிர்ஷ்டப் போட்டி நடத்திக் கொள்கிறேன்.!" என்றார் கோவிந்தன்.
"உடைந்த காரை வைத்து எப்படி அதிர்ஷ்டப் போட்டி நடத்துவீர்கள்.?"
என்று கார் உரிமையாளர் கேட்க, "அதெல்லாம் முடியும். நீங்கள் அனுப்பிய ஃபோட்டோ இருக்கிறது. இப்போது வேடிக்கை மட்டும் பாருங்கள்.!" என்ற கோவிந்தன், "உடைந்த காரை எப்படியாவது கொண்டு வந்து சேர்த்து விடுங்கள்.!" என்று மறுபடி கேட்டுக் கொண்டார்.
இதெல்லாம் முடிந்து, ஓரிரு மாதங்கள் கழித்து எதோ ஒரு விழாவில் கோவிந்தனைப் பார்த்த அந்த கார் உரிமையாளர், "அப்புறம் என்ன நடந்தது.? அந்தக் காரை வைத்து என்னதான் செய்தீர்கள் என்று சொல்லவேயில்லையே.!" என்று கேட்க, "உண்மையில் அது மிக அதிர்ஷ்டமான கார். நான் அதை வைத்து ஐந்து கோடி சம்பாதித்தேன்.
சரியாய்ச் சொன்னால் ஐந்து கோடிக்கு பத்து லட்சம் கம்மி.!" என்று சிரித்த கோவிந்தன் தொடர்ந்து சொன்னார்.
"ஒரு லட்சம் ரூபாய் சீட்டு வாங்கினால் அதிர்ஷ்டசாலிக்கு ஒரு கோடி ரூபாய் கார் பரிசு என்று 500 பேர் கொண்ட ஒரு குலுக்கல் போட்டி நடத்தினேன். அதில் நாலு கோடியே தொன்னூறு லட்சம் லாபமும் சம்பாதித்தேன்.!"
"யாரும் கண்டுபிடிக்கவில்லையா.?" என்று கேட்டார் கார் உரிமையாளர்.
"ஒரே ஒருவன் மட்டும் வந்து கேட்டான்... வெற்றி பெற்றவன். அவனிடம் 'உனக்கு டெலிவரி செய்ய வரும்போது ஆக்சிடென்ட் ஆகிவிட்டது' என்று உடைந்த காரைக் காட்டி எனக்கும் நஷ்டம் என்று கூறினேன். அவனது ஒரு லட்சத்திற்கு பதிலாக பத்து லட்சம் தருகிறேன் என்று சொன்னேன். சத்தமில்லாமல் வாங்கிக் கொண்டு போய்விட்டான்.!" என்று சிரித்தார் கோவிந்தன்.
ஒரு புத்திசாலி எந்த சூழ்நிலையையும் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறான்…