·   ·  248 posts
  •  ·  1 friends
  • 1 followers

ஸ்நேகம் வலியதன்றோ?

இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் அன்று நான் அரவிந்தனைச் சந்தித்தேன். நாகர்கோவில் ஜெயிலின் எதிரிலுள்ள பெட்ரோல் பங்கில் வேலை செய்கிறான். அவனை நான் அடையாளம் கண்டு கொண்டேன். ஏனோ என் முகம் அவனுக்குப் பிடிகிட்டவில்லை. அந்த பெட்ரோல் பங்கின் உரிமையாளர் என்னுடைய நண்பர். அவனிடம் கொஞ்ச நேரம் பேச வேண்டும் என்று அனுமதி பெற்றுக் கொண்டு ஒரு டீக்கடைக்கு அழைத்து வந்தேன். ஒரு பெரும் தயக்கத்தோடு என் கூட வந்தான். குற்ற உணர்வாய்க் கூட இருக்கலாம்.

அப்போது நாங்கள் ஒன்பதாம் வகுப்பு படித்தோம். அரவிந்தன் மிக நன்றாகப் படிப்பவன். நானொரு தான்தோன்றி. பாடத்தை வகுப்பில் படிப்பதோடு சரி. வீட்டுக்கு வந்ததும் ஊர்மாடு மேய்ப்பதுதான் வழக்கம். வீட்டிலும் புத்தகத்தைத் திறந்ததேயில்லை. பார்டர் லைனிலாவது பாசாகி விடுவேன் என்று அப்பாவுக்கும், அம்மாவுக்கும் தெரியும். அவர்களும் நீ இந்த படிப்பைத்தான் படிக்க வேண்டும் என்று வற்புறுத்தியதெல்லாம் கிடையாது.

ஒருநாள் அப்பா என்னிடம், நீ ஒரு டாக்டர் ஆகவேண்டும் என்று கூறிய போது, நான் ஒரு பஸ் கண்டக்டராகவே ஆசை என்று கூறியதால் அவர் என்னை ஒரு சில்லறைப் பயல் என்று அடையாளம் கண்டு கொண்டு ஒதுங்கி விட்டார்.

அப்பாவின் ஒரே கண்டிஷன் என்னவென்றால், “நீ என்ன மார்க் எடுத்தாலும் உன்னுடைய பிராக்ரஸ் ரிப்போர்ட்டில் கையெழுத்திட்டுத் தருவேன். என் கையெழுத்தை மட்டும் கேவலமாக வரைந்து அசிங்கப் படுத்தாதே!” என்பதுதான். அவரது கையெழுத்து ஒரு மிகப்பெரிய முட்டையில் துவங்கி குட்டி குட்டி முட்டைகளாக எதிர்த் திசையில் போய் சோகமாக முடிவடையும். கீழே ஒரு கோடு போட்டு அன்றைய தினத்தைக் குறித்து தனது கையெழுத்தைக் கல்வெட்டாய் உருவேற்றுவார்.

பிட் எழுதுகிற நேரத்தில் அந்தப் பாடத்தைப் படித்துவிடலாம் என்ற எண்ணம் எனக்கு இருந்ததால் நான் பிட் எழுதி பரீட்சை எழுதியதில்லை. தேர்வு வேளையில் நன்றாகப் படிக்கும் மாணவர்களைச் சீண்டி தங்களது விடைத்தாளை காட்டுமாறு பல்லிளிக்கும் சக மாணவர்களை நான் மதிப்பதேயில்லை. தங்களது விடைத்தாளை ஒளித்து வைத்து எழுதும் மாணவர்களை நான் கால் காசுக்கு பெறாதவர்கள் என்று முகத்தில் துப்ப எண்ணியதுண்டு.

அரவிந்தும் அப்படிப் பட்டவன்தான். யாரைப்பார்த்தும் பிட் அடிக்க மாட்டான். அவன் என்னுடைய நெருங்கிய நண்பன். எங்கு சென்றாலும் என்னோடே கூட வருவான். கிரவுண்டுக்கு விளையாடப் போனாலும் அவனோடுதான். நாகர்கோவிலில் மொத்தம் நான்கே சாலைகள்தான். அதில் எங்கள் கால்கள் படாத மூலை முடுக்கே கிடையாது. என்னிடம் அப்போது ஒரு ஹீரோ ஜெனரேஷன் எக்ஸ் சைக்கிள் இருந்தது. நாங்கள் பெரும்பாலும் டபுள்ஸ்தான் போவோம். அவன் என்னைவிடவும் கனத்த சரீரம் உடையவன். ஆனாலும் அவனை முன்பக்கம் பாரில் உட்கார வைத்து நான் மிதிப்பேன்.

அவன் வீட்டிலிருந்து இரண்டு பஸ் ஏறி பள்ளிக்கு வருவான். சாயங்காலம் நான்தான் அவனை பஸ் ஸ்டாண்டில் கொண்டு போய் விடுவேன். அவனது வீடு பள்ளியிலிருந்து சுமார் எட்டு கிலோமீட்டர் தூரத்தில் இருந்தது. எனக்கு அவ்வளவு தூரம் வரைக்கும் பயணிக்க வீட்டில் தடை இருந்தது. ஆறு மணிக்கு முன்னால் வீட்டில் போய் உட்காரவில்லையென்றால் அடுத்த நாள் சைக்கிள் சீட்டில் உட்கார முடியாது. உட்கார்ந்தால் வலிக்கும்.

ஒரு தேர்வு நாளொன்றில் அரவிந்தன் தன்னுடைய மேதமைத் தனத்தைக் காட்ட எண்ணி சக பாவப்பட்ட மாணவன் பிட் அடிக்கவே அதை ஒரு குடிகார ஆசிரியரிடம் அரவிந்தன் காட்டிக் கொடுக்க அந்தக் குடிமகான் அவனை வெளுத்து விடைத் தாளோடு சேர்த்து வெளியில் வீசிவிட்டார். முதன் முறையாக அரவிந்தன் மீது எனக்குத் தீராத கோபம் வந்தது. எனக்குக் கோபம் வந்துவிட்டால் என்னைக் கட்டுப்படுத்தவே முடியாது என்பது அரவிந்தனுக்கு அன்றுதான் தெரிந்தது. அரவிந்தனின் வாயிலிருந்து ரத்தம் கொட்டியது. மூக்கிலும் முட்டியிலும் சிராய்ப்பு. பள்ளியின் பின்பக்கம் நின்று கொண்டு அந்தக் குடிகார ஆசிரியரின் நெஞ்சில் சரளைக் கல்லை குறிபார்த்து எறிந்ததில் குறி தவறாமல் அவரது மண்டை கீறியது.

பெரும் பஞ்சாயத்து நடந்து முடிந்தபின்பு அரவிந்தனுக்கும் எனக்கும் மிகப்பெரிய இடைவெளி. ஒரே வகுப்பில் இருந்தாலும் வேறு வேறு கிரகத்தில் அமர்ந்திருந்தோம். அவனது பிரிவை என்னால் தாங்கவே முடியவில்லை. அந்த சம்பவத்துக்குப் பின்பு அந்த ஆசிரியரை எல்லாரும் “மண்டகீறி மாணிக்கம்” என்று அழைத்தது எனக்கு வேறு இன்னொரு தலைவலியை உருவாக்கியது.

அவர் தேவையில்லாமல் என்னைச் சீண்டி எப்படியாவது என்னை டீ சி கொடுத்து வெளியில் தள்ளிவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டார். ஒருமுறை அவர் என்னை அவதூறாகப் பேசியதால் நான் மதியம் வீட்டுக்குச் சென்று தாத்தாவின் கத்தியை எடுத்து வந்து மாணிக்கத்தின் ஸ்கூட்டர் சீட்டைக் கிழித்து விட்டு, நேராக அவரிடம் சென்று, “இன்னிக்கி உம்ம வண்டிக்க சீட்டு! இனிமேலால் வம்புக்கு வந்தீருன்னா ஒமக்க நெஞ்சி! பிண்டாளுத ஒமக்கு அவ்ளதாம் மரியாத பாத்துக்காரும்!” என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன். அதன் பின் தொல்லை இல்லை.

ஆனாலும் அரவிந்தன் என்னிடம் பேசவேயில்லை. என்றாவது ஒருநாள் பேசிவிட மாட்டானா என்று ஏங்கிப் போயிருந்தேன். அவனில்லாமல் என்னிடம் யார் யாரோ பேச முயன்று தோற்றுப் போனார்கள். நானும் யாரிடமும் நெருங்கவேயில்லை. இன்னுமொரு நட்பு எனக்குத் தேவையில்லாமல் போயிருந்தது. எப்போதும் தனிமைதான் துணைவன்.

அப்படியிருக்கும் போது ஒருநாள் அரவிந்தன் என்னை அவனது வீட்டிற்கு சனிக்கிழமை வருமாறு அழைத்ததாக தகவல் சொல்லி அனுப்பினான். அன்றுதான் எனக்கு தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் எல்லாமே... அன்றிரவு முழுக்க எனக்குத் தூக்கமேயில்லை. சனிக்கிழமை வந்தது. எங்கள் வீட்டிலிருந்து கிட்டத்தட்ட பன்னிரெண்டு கிலோமீட்டர்கள் சைக்கிள் மிதித்து அவனது வீட்டிற்குச் சென்றேன்.

மனம் முழுக்க படபடப்பு, ‘என்ன சொல்வானோ? நான் என்ன பேச?’

அவனது வீட்டுக் கதவைத் தட்டினேன். அவனது அம்மா கதவைத் திறந்தாள்.

“நீதானேடே அரவிந்தனுக்க வாய அடிச்சி ஒடச்ச? அப்பொரம் எதுக்குப்போ இங்க வந்த? அவனுக்கு ஒன்னய பாக்க இஷ்டமில்லியாம்! கிளம்பு!”

நான் கெஞ்சினேன், “அம்மா! ஒரே ஒரு தடவ அவன பாத்துட்டுப் போயிர்ரென்! அவன கூப்புடுங்கம்மா!”

அவள் செவி சாய்க்கவில்லை. என் கூக்குரலை பலர் நின்று பார்த்துவிட்டுப் போனார்கள். சத்தமாகக் கத்தினேன். “அரவிந்தா இதுக்கா என்னய இவ்ளோ தூரம் வார வச்ச?”

என்னுடைய கண்ணீர் நிற்கவில்லை.

என்னுடைய சைக்கிளுக்கு என்ன துக்கமோ? அதன் டயர் வேறு மூச்சை விட்டிருந்தது. சைக்கிளைக் கையில் பிடித்துக் கொண்டு அரை டவுசரோடு சாலையில் தனிமையாக அழுது கொண்டே நடந்து வந்த பரிதாபத்துக்குரிய அந்த நாள் இன்றைக்கு நினைத்தாலும் அழுகையைத் துவங்கும். பஞ்சர் ஒட்டக் கூட அப்போது காசு இல்லை. நான் இவ்வளவு தூரம் வரும் விஷயம் வீட்டிற்குத் தெரியாது. தெரிந்தால் அனுமதி கிடைக்காது ஆகையால் எதுவும் சொல்லவில்லை. வீடு வந்து சேர மூன்று மணிநேரங்கள் ஆகிப் போயிருந்தன.

‘அரவிந்தன் ஏன் அப்படிச் செய்ய வேண்டும்? என்னைக் கேவலப் படுத்த வேண்டும் என்று எண்ணியிருந்தால் என்னை அம்மணமாக ஓட விட்டிருக்கலாமே? ஏன் இப்படி காயப் படுத்தினான்? இப்படியெல்லாமா ஒருவனைப் பழி வாங்குவார்கள்? அவனது அன்பை நாடிப் போனது தவறே இல்லை! ஆனால் அதற்காக இப்படியா?’

என்னால் துக்கத்தைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. உடைந்து அழுதபடியே சாலையில் நடந்த அந்த மூன்று மணிநேரங்கள் என்னுடைய வாழ்வில் என்றுமே மறக்காது. அன்றைக்கு அப்பாவிடம் அழுது புலம்பி நான் இனிமேல் அந்தப் பள்ளிக்குப் போகவே மாட்டேன் என்று சொல்லி அடுத்தநாள் அப்பா போய் டீசி வாங்கி வந்து என்னை வேறொரு பள்ளியில் சேர்த்தார்.

அங்கு புது நண்பர்கள், புது தோழிகள் என்று எல்லாம் மாற ஆரம்பித்தன! அரவிந்தனின் அந்தப் பழிவாங்கல் மட்டும் மனதை விட்டு அகலவேயில்லை. அன்றைக்கு என்னை சந்திக்க விரும்பாத அரவிந்தன் இதோ பாரத் பெட்ரோலியம் சீருடையில் டீக்கடையில் என் முன்பாகத் தலைகுனிந்து அமர்ந்திருக்கிறான்.

நான் ஒரு பெரும்துக்கத்தில் அவனிடம் கேட்டேன், “அரவிந்தா! நீ மட்டும் அன்றைக்கு என்னை வெளியில் வந்து பார்த்திருந்தால்?”

என் வாயிலிருந்து வார்த்தைகள் துண்டு துண்டாக வந்து விழுந்தன. எனக்கு துக்கம் நெஞ்சை அடைத்தது. அவன் தலையைக் குனிந்து கொண்டான். நான் மீண்டும் கேட்டேன்.

“என்னை ஏன் உதாசீனப் படுத்தினாய் அரவிந்தா? என் கன்னத்தில் அறைந்திருக்கலாமே?”

இம்முறை நான் கட்டுப்படுத்த முடியாமல் அழுதேன். டீக்கடையில் எல்லாரும் எங்களைப் பார்த்தார்கள். அரவிந்தன் குனிந்து உட்கார்ந்து அழுததில் அவனது ஒருசொட்டுக் கண்ணீர்த்துளி டீ கிளாசில் விழுந்தது. கொஞ்ச நேரம் அமைதி.

எழுந்து காரை நோக்கி நடந்தோம். அந்தச் சூழல் சகஜமாக கொஞ்ச நேரம் எடுத்துக் கொண்டது. அரவிந்தன் தன்னுடைய மவுனத்தைக் கலைத்து விட்டு அவனது அப்பாவின் மரணத்துக்குப் பிற்பாடு படிப்பை விட்டுவிட்டு வேலைக்கு வந்ததாகச் சொன்னான். பின்னர் என்னிடம்,

“லேய் ப்ரெவு! நீ அப்போலாம் அவ்ளோ புஸ்கு புஸ்குன்னு இருப்ப? இப்ப தாடியெல்லாம் வச்சி ஆளு சாமியார் மாறி ஆயிட்டியே மக்கா?”

“சும்மாதாம் மக்ளே... ஒரு பந்தாவுக்கு வச்சிருக்கேன்! வேற என்ன வித்தியாசம்லாம் என்கிட்ட தெரியிது அரவிந்தா?”

“அப்போ மாட்டுன டவுசர இப்பவும் கழத்தல பாத்தியா?”

அவனுக்கு சிரிப்பு வந்து விட்டது. நான் அவனைக் கட்டியணைத்துக் கொண்டு மீண்டும் அழுதேன். நட்பு ஒன்று மட்டும்தான் எல்லார் முன்பாகவும் நம்மைக் கொண்டு போய் நிறுத்தும்! மண்டியிடச் செய்யும்! மானம் கெடுத்தும்! வாழ்வைக் காப்பாற்றும்! சாகும் வரைக்கும் வாழ்வதுதான் வாழ்வு.

  • 269
  • More
Comments (0)
Login or Join to comment.