- · 1 friends
-

மனிதனின் மகிழ்ச்சி
அரசர் தனது வழக்கமான நகர்வலத்தில் குதிரை மீதமர்ந்து மக்களைப் பார்த்தபடி சென்றுகொண்டு இருந்தார். கூட்டத்தில் ஒரு மனிதன் புன்சிரிப்போடு இருந்ததோடு அவனது முகம் மகிழ்ச்சியால் ஒளி வீசிக் கொண்டு இருந்ததை அரசர் பார்த்தார். பழைய துணிகளை அணிந்திருந்த அவனிடம் எதுவுமே இல்லை. அரசர் அவனைக் கடந்து சென்றார்.
சில நாள்களுக்குப் பிறகு அரசர் அதே வழியாகப் போகும்போது, அதே மனிதன் ஆனந்தமாகக் கண்களை மூடித் தூங்கிக் கொண்டு இருந்தான்.
அடுத்தடுத்த நாள்களில், அந்த சாலையைக் கடக்கும்போதெல்லாம் அரசர் அந்த மனிதனை கவனிக்கத் தவறுவதில்லை. எந்த நேரமும் அவன் மகிழ்ச்சியோடு காணப்பட்டான்.
அவனிடம், “உன்னுடைய மகிழ்ச்சிக்கான காரணம் என்ன? உன்னிடம் அதிக அளவு செல்வம் இருக்கின்றதா? உனக்கு அன்பான குடும்பம், நண்பர்கள் இருக்கின்றார்களா? மகிழ்ச்சி நிறைந்த வீடு இருக்கின்றதா?” என்று அரசர் வினவினார்.
“என்னிடம் எதுவுமே கிடையாது. இந்த நிமிடம் கூட, நான் பசியால் விழுந்து விடக் கூடிய நிலையில்தான் இருக்கின்றேன். நண்பர்கள், குடும்பம், வீடு இவை எதுவுமே எனக்குக் கிடையாது. இரவின் குளிர் என்னுடைய எலும்புகளைப் பாதிக்கிறது. எனது எல்லா பற்களும் விழுந்து விட்டன. எனினும் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்”
“என்னிடம் அனேகமாக எல்லாமே இருந்தாலும், நான் மகிழ்ச்சியாக இல்லை. நீ எப்படி இவ்வளவு பேரானந்தமாக இருக்கிறாய்? உனது பேரானந்த ரகசியம், என்னையும் மகிழ்ச்சி அடையச் செய்திடும்” என்றார் அரசர்.
“இயற்கை ஒருபோதும் யாருக்கும் அதிக அளவு துன்பம் கொடுப்பதில்லை. இந்த துன்பங்கள் ஒருவரை முன்னேற்றம் அடையவே உதவி செய்கின்றன. எனக்கு எது நடந்தாலும், நான் அதை நன்றியுணர்வோடும் மகிழ்ச்சியோடும் ஏற்றுக் கொள்கிறேன். இந்த நிலை எனக்கு முழுமையான மகிழ்ச்சியைக் கொடுக்கவில்லை. ஆனால் ஒரு தெளிவான தொடுவானம் எனக்கு முன்பாகத் திறக்கின்றது; மூடுபனி கலைகிறது. ஒரு விழிப்புணர்வு நிலை கிடைக்கப் பெறுகிறது” என்று அவன் விளக்கமளித்தான்.
*"எதையும் அன்போடு ஏற்றுக் கொள்ளும்போது, நம் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சமும் செழித்து ஓங்கிடும். ஏற்றுக் கொள்ளுதல் என்பது பரிணாம வளர்ச்சியின் ஒரு அடையாளம் ஆகும். நம் மனோ நிலை, என்ன வந்தாலும் அதை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்.”*