·   ·  260 posts
  •  ·  1 friends
  • 1 followers

சர்வ மங்களம் அருளும் ஸ்ரீபாலா திரிபுரசுந்தரி

முருகனை பாலமுருகன் என்றும், கிருஷ்ணனை பாலகிருஷ்ணன் என்றும் குழந்தையாக பாவித்து வழிபடுவதைப் போலவே, அம்பிகையையும் பாலாம்பிகையாக வழிபடுவது மிகவும் விசேஷம்.

ஒன்பது வயது சிறுமியாகக் காட்சி அருளும் பாலாம்பிகை, சித்தர்கள் வழிபாட்டில் வாலையாக வழிபடப்படுகிறாள். மேலும் சித்தர்கள் வாலையை மனோன்மணி என்றும் அழைக்கின்றனர். திருக்கடவூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் காலசம்ஹார மூர்த்தி சந்நிதியில் காட்சி அருளும் பாலாம்பிகையை, அபிராமிபட்டர் தம்முடைய அபிராமி அந்தாதி ஐந்தாவது பாடலில், ஞான நிலைக்கு நம்மை இட்டுச் செல்லும் மனோன்மணி என்று போற்றிப் பாடியுள்ளார்.

அழகு ஆபரணத்தில் தோன்றியவள்

ஸ்ரீலலிதாம்பிகையின் ஆபரணத்திலிருந்து வித்யை மற்றும் ஞானத்தின் வடிவமாகக் குழந்தை வடிவில் அவதரித்தவள் பாலாம்பிகை. நிகரற்ற அழகுடன் குழந்தையாகக் காட்சி தந்தாலும், தைரியம் மற்றும் வீரத்தின் உருவமாகவும் போற்றப்படுகிறாள். போர் புரிவதில் அசாத்திய ஆற்றல் பெற்றவள் பாலாம்பிகை. பாலாம்பிகையின் அவதாரமே ஒரு போரின் நிமித்தமாக ஏற்பட்டதுதான்.

சிவபெருமானின் நெற்றிக்கண்ணால் சுட்டெரிக்கப்பட்ட மன்மதனின் சாம்பலிலிருந்து தோன்றியவன் பண்டாசுரன். தன் தவத்தின் பலனாக வரங்கள் பல பெற்றவன். மேலும், பெண்ணின் கருவில் இருந்து தோன்றாத ஒரு பெண்ணால் மட்டுமே தனக்கு அழிவு நேர வேண்டும் என்ற வரம் பெற்றிருந்த பண்டாசுரன், அதன் காரணமாக யாராலும் தன்னை அழிக்க முடியாது என்ற ஆணவத்தில் தேவர்கள் உள்ளிட்ட அனைவரையும் துன்புறுத்தி மகிழ்ந்தான்.

அவனுடைய கொடுமைகள் எல்லை மீறிப் போகவும், தேவர்கள் அனைவரும் ஸ்ரீலலிதாம்பிகையைச் சரணடைந்தனர்.

பண்டாசுரனின் கொடுமைகளிலிருந்து தேவர்களைக் காப்பாற்றத் திருவுள்ளம் கொண்ட அம்பிகை, தன்னுடைய ஆபரணத்திலிருந்து ஒன்பது வயதுடைய பெண்ணைத் தோற்றுவித்தாள். அவளே ஸ்ரீபாலாம்பிகை. அவள் ஸ்ரீலலிதாம்பிகையிடம் கவசமும் ஆயுதங் களும் பெற்றுக்கொண்டு, அன்னங்கள் பூட்டிய தேரில் சென்று பண்டாசுரனையும், அவனுடைய முப்பது பிள்ளைகளையும் சம்ஹாரம் செய்து, தேவர்களைக் காப்பாற்றினாள். சிறு பெண்ணான பாலாம்பிகையின் போர்த் திறன் கண்டு, தேவர்கள் பூமாரி பொழிந்து பலவாறாகப் போற்றித் துதித்தார்கள்.

அழகிய உருவினள் பாலா!

நான்கு திருக்கரங்களில் மேலிரு திருகரங்களில் சுவடியும் ஜபமாலையும் ஏந்தி, கீழிரு திருகரங்களில் வர, அபய முத்திரை காட்டி, தாமரை மலரில் அமர்ந்த கோலத்தில் காட்சி தரும் பாலாம் பிகை, பக்தர்கள் கேட்கும் வரங்கள் அனைத்தையும் உடனுக்குடன் அருள்பவள். பாலாம்பிகையின் ஒரு திருக்கரத்தில் இருக்கும் சுவடி, வித்யை மற்றும் ஞானத்தையும், மற்றொரு திருக்கரத்தில் இருக்கும் ஜபமாலை மந்திர ஜபத்தின் ஆற்றலையும் குறிப்பிடும் என்பர்.

அருள்மிகு பாலாம்பிகையின் இந்த திருவடிவை மனதில் இருத்தி தியானிப்பது மிகவும் விசேஷம் என்பார்கள் பெரியோர்கள். பாலாம்பிகையை மனதில் தியானித்து வழி பட்டால் நினைத்தது நினைத்தபடி நிறைவேறும் என்பது ஞானநூல்களின் வழிகாட்டல்.

ஸ்ரீ பாலாம்பிகை மந்திரம் :

ஓம் ஐம் க்லீம் செளம்:'

- இதுவே அருள்மிகு பாலாம்பிகையை தியானித்து வழிபடுவதற்கான விசேஷ மந்திரம். இதில், மூன்றாவதான செளம்' என்பதை செளஹூம்' என்று உச்சரிக்க வேண்டும்.

அதியற்புதமான இந்த மந்திரத்தை குரு மூலம் உபதேசம் பெற்று மந்திரம் ஜபிக்க, மன ஒருமுகப்பாட்டுடன் அன்னை பாலாம்பிகையை வழிபட்டால், தெய்வங்கள் அனைவரையும் வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்.

  • 722
  • More
Comments (0)
Login or Join to comment.