- · 1 friends
-

ஸ்ரீராகவேந்திர லீலாமிர்தம் காஷாயம் கையில் இருந்தால்......
பதினேழாம் நூற்றாண்டின் மத்தியில் நடந்த சம்பவம்....
ஸ்ரீராகவேந்திரரின் பெருமை நாடெங்கிலும் பரவ ஆரம்பித்தது. சுவாமிகள் தஞ்சாவூரில் பல ஆண்டுகள் முகாமிட்டுவிட்டு மீண்டும் கும்பகோணத்திற்கு வந்திருந்தார்.
ஒருநாள் வெளியூரிலிருந்து வந்தசில அன்பர்கள், ‘ராகவேந்திரர் கேட்டதைக் கொடுப்பார் என்கிறார்களே, அவர் மற்றவர் மனதிலிருப்பதை அறியவல்லவரா?’ என்று பரீட்சித்து பார்க்க எண்ணினார்கள்.
காவிரிக்கரையில் நின்றிருந்த அவர்கள் அன்று மடத்தில், தமக்கு வழங்கப்படும் சாப்பாட்டில் சில பட்சணங்கள் (பலகாரங்கள்) பரிமாறப்பட வேண்டும் என விரும்பினர்.
அச்சமயம் சீடன் ஒருவன் சுவாமிகளின் காவித் துணியைத் துவைப்பதற்குப் படித்துறையில் இறங்கியவாறே, ‘சீக்கிரம் குளித்து விட்டு வாருங்கள்.
நீங்கள் விரும்பிய பட்சணங்கள் மடத்தில் தயாராகிக் கொண்டிருக்கின்றன.’ என்றான். வந்திருந்த அன்பர்கள் திகைத்துப் போனார்கள்.
காஷாயத்தைத் துவைத்து கொண்டிருந்த சீடனிடம், ‘நாங்கள் என்ன நினைத்தோம் என்று உனக்கு எப்படித் தெரியும்?’ என வினவினார்கள்.
அதே சமயம் துவைத்துக் கொண்டிருந்த காஷாயம் சீடன் கையிலிருந்து நழுவி விடவே சீடன், ‘நான் என்ன சொன்னேன்? எனக்கு ஒன்றும் தெரியாதே...’ என்றான்.
ஆனால் மறுபடி காஷாயத்தைக் கையில் எடுத்ததும் முதலில் சொன்னதையே சொன்னான். சுவாமியின் காஷாயம் கையில் இருக்கும்போது சீடனுக்கு எல்லாம் தெரிகிறது; அது இல்லாவிட்டால் தெரிவதில்லை.
காஷாயத்திற்கே இவ்வளவு மகிமை என்றால் ராகவேந்திரரது மகிமை எப்படிப்பட்டதாக இருக்கும் என வியந்தவாறே மடத்தை அடைந்தனர்.
அங்கே சாப்பாட்டில் அவர்கள் விரும்பியவை இருந்ததுமல்லாமல் ஸ்ரீராகவேந்திரரே பந்தி விசாரணையில், ‘என்ன, கேட்டது கிடைத்ததல்லவா? திருப்திதானே.’ என்று விசாரித்தார்.
அன்பர்கள் தம் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டனர். கருணைக் கடல் ஸ்ரீராகவேந்திரர், அவர்களை மன்னித்ததுமின்றி அந்த மூன்று அன்பர்களின் வழித்தோன்றல்களே பிற்காலத்தில் தனது பிருந்தா வனத்திற்குப் பூஜை செய்வார்கள்;
அவர்கள் விரும்பிய பட்சணங்களையே நைவேத்தியமா வைக்க வேண்டும் என்று அருளினார். இன்றும் மந்த்ராலயத்தில் இவர்கள் பரம்பரையினரே பூஜை செய்து வருகிறார்கள்.