சட்டவிரோதமான முறையில் அரச காணிகளை அபகரிக்க முயன்ற அரச ஆதரவாளர் கும்பலோன்றை தடுக்க முற்பட்ட அரச அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவமொன்று கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்றுளன்ளது.
குறிப்பாக அரச அதிகாரிகளை தாக்க முற்பட்டவர்கள் தேசிய மக்கள் சக்தியின் உள்ளுர் தலைவர் தலைமையிலான குண்டர் குழுவென தெரியவந்துள்ளது.
பூநகரி முழங்காவில் பகுதியில் நாச்சிக்குடா சந்தியை அண்மித்து மன்னார் - யாழ்ப்பாணம் வீதியோரமாக நேற்றுமுன்தினமிரவு முதல் தடாலடியாக அரச காணிகளில் கடைகள் சில முளைத்துள்ளன. குறிப்பாக நிரந்தரமாக இரும்பினால் ஒட்டப்பட்டதும் தகரங்களால் வேயப்பட்டதுமானதாக அக்கடைகள் இருந்துள்ளன.
பொதுப் போக்குவரத்திற்கு அபாயத்தை தரக்கூடியதும் அனுமதியற்றதுமான கட்டுமானங்களை தயவு தாட்சணியமின்றி அகற்ற வடக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ள நிலையில் அவை தொடர்பில் பொதுமக்களால் முறைப்பாடுகள் பூநகரி பிரதேச சபைக்கு செய்யப்பட்டுள்ளது.
அதனையடுத்து செயலாளர் மற்றும் வருமான வரிபரிசோதகர் நிலைய பொறுப்பதிகாரி சகிதம் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். உரிமை கோரப்படாத நிரந்தர தகரக் கொட்டகைக்கு பகிரங்கமாக அகற்றுவதற்கான எச்சரிக்கை அறிவித்தல்களை ஒட்டிய அதிகாரிகள் அருகாக தொடர்ந்து நிர்மாண வேலையில் ஈடுபட்டிருந்த மற்றைய வர்த்தக நிலையத்தினரிடம் அனுமதியை பெற்று வேலையை முன்னெடுக்க அறிவுறுத்தியிருந்தனர்..
இந்நிலையில் சட்டவிரோத கட்டுமானங்கள் தொடர்பில் புகைப்படமெடுக்க முற்பட்டவர்களை தாக்க முற்பட்ட அங்கிருந்த கும்பலொன்று கைத்தொலைபேசியை பறிக்கவும் முற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்களை எச்சரித்த அதிகாரிகள் பொலிசாரிடம் முறையிட்டனர்.
அதனையடுத்து சம்பவ இடத்திலிருந்தவர்களை பொலிஸ் நிலையத்திற்க அழைத்த பொலிஸார் எச்சரிக்கை விடுத்ததுடன் கைது செய்ய முற்பட்டிருந்தனர். எனினும் அதனை மறுதலித்த பிரதேச சபை செயலர் சட்டவிரோத கட்டுமாணங்களை முன்னெடுக்க வேண்டாமெனவும் உரிய அனுமதியை பெற்ற பின்னர் பணிகளை முன்னெடுக்கலாமெனவும் தெரிவித்து வெளியேறியதாக தெரியவருகின்றது.
இந்நிலையில் அதிகாரிகளை தாக்க முற்பட்டவர்கள் தேசிய மக்கள் சக்தியின் உள்ளுர் தலைவர் தலைமையிலான குண்டர் குழுவென தெரியவந்துள்ளது.
அதேவேளை சட்டவிரோதமாக அரச காணிகளை இரவோடிரவாக பிடித்து கடைகளை நிர்மாணித்துவருபவர்களிற்கு எதிராக பூநகரி பிரதேசசெயலகம் சட்டநடவடிக்கைகளிற்கு தயாராவதாக பிரதேசசெயலர் தெரிவித்துள்ளார்.
இது ஒருபுறம் தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் குண்டர்களால் எடுக்கப்பட்ட கைத்தொலைபேசி வீடியோக்களை தனது முகநூலில் பகிர்ந்து அதிகாரிகள் அடாவடியென பகிர்ந்து கொள்ள மறுபுறம் தாக்குதல் நடத்த முற்பட்ட குண்டர் கும்பலோ அதிகாரிகளை தாம் நையப்புடைத்து கலைத்தாக முகநூலில் தகவல் பகிர்ந்து வருகின்றனர்.
ஒருபுறம் ஜனாதிபதி சட்டத்தின் ஆட்சியே நடப்பதாக தெரிவித்துக்கொள்ள மறுபுறம் அவரது கட்சி குண்டர்கள் ஆட்சிக்கு தயாராவதாக மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பூநகரி - முழங்காவில் பகுதியினில் சட்டவிரோதமாக அரச காணிகளை இரவோடிரவாக பிடித்து கடைகளை நிர்மாணித்து வருபவர்களிற்கு எதிராக பூநகரி பிரதேச செயலகம் சட்டநடவடிக்கைகளிற்கு தயாராகிவருவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
- 329