Feed Item
·
Added a news

யாழ் பிரதம தபாலக சுற்றுவட்டத்தை அண்டிய தீவக பகுதிக்கான போக்குவரத்தை முன்னெடுக்கும் பிரதான வீதியாக காணப்படும் கொட்டடி மின் சந்தை மார்க்க வீதியின் அபிவிருத்தி தொடர்பில் துறைசார் அதிகாரிகள் அசமந்தமாக இருப்பதால் மக்களின் வரிப்பணம் ஒவ்வொரு தடவையும் வீணடிக்கப்பட்டு சூறையாடப்படும் துர்ப்பாக்கிய நிலை காணப்படுவதாக பொதுநல விரும்பிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

யாழ்ப்பாணம் பிரதான வீதியின் கொட்டடி சுற்றுவட்ட பகுதியில் தீவகத்திற்கான போக்குவரத்தின்  பிரதான வீதியாக இருக்கும்  குறித்த வீதி ஒவ்வொரு மழையுடனான காலத்திலும் மிக மோசமாக சிதைவடைந்து குன்றும் குழியுமாகவும் மழை நீர் நிரம்பி விபத்துக்களை ஏற்படுத்தும் களமாகவும் காட்சியளிப்பது வழமை.

அவ்வாறு சிதைவுற்ற பின்னர் மக்கள் பல்வேறு துன்ப துயரங்களை சந்தித்த பின்னர் துறைசார் திணைக்களம் அவசர அவசரமாக நிலையான திட்டமிடல் ஏதும் இல்லாது அந்த வீதியை தற்காலிகமாக சீரமைத்துக்கொள்வதுமான நடவடிக்கைகளே பல வருடங்களாக இருந்து வருகின்றது.

தற்போது சில தினங்களுக்கு முன்னர் பெய்த சிறு மழையை அடுத்து மீண்டும் யாழ் தபால் நிலையச் சந்தியில் இருந்து தொலைத்தொடர்பு நிலைய சந்தி வரையான குறித்த வீதியின் சுமார் 25 மீற்றர் வரையான தூரம் பாரியளவு சேதமடைந்து கனரக வாகனங்கள் கூட பயணிக்க முடியாத வகையில் பாரிய குன்றும் குழியும் நிறைந்ததாக காணப்படுகின்றது.

இதனால் குறித்த வீதியூடான போக்கவரத்தை மேற்கொள்வதில் பொதுமக்கள் பல்வேறு இடர்பாடுகளை சந்திக்க நேரிடுகின்றது. அத்துடன் தொடர்ந்தும் ஒவ்வொரு மழைகாலங்களிலும் சிதைவுற்று குன்றும் குழியுமாக மாறுவதும் இந்த வீதியில் பல விபத்துக்கள் ஏற்படும் சந்தர்ப்பங்கள் இருந்துள்ளன.

இவ்வாறு அடிக்கடி பாதிக்கப்படும் குறித்த வீதியை துறைசார் திணைக்களம் உரிய பொறிமுறை இன்றி ஏனோதானோ என மக்களின் பணத்தை கொட்டி ஒவ்வொரு தடவையும் சீரமைப்பதும் பின்னர் அந்த வீதி ஒரு சிறு மழை பெய்தவுடன் மீண்டும் உடைந்து குன்றும் குழியுமாக மாறும் நிலையுமாக இருக்கும் நிலைக்கு ஏன் நிரந்தர தீர்வை மேற்கொள்ள முடியாது அதிகாரிகள் அசமந்தமாக இருக்கின்றனர் என பொதுமக்களும் பயணிகளும் கேள்வி எழுப்புகின்றனர்.

எனவே இம்முறையாவது குறித்த வீதியை சீரமைக்கும்போது தூரநோக்குடன் சரியான பொறிமுறையை உள்ளடக்கிய வகையில் சீரமைத்து மக்களின் வரிப்பணத்தை பாதுகாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.

அத்துடன் குறித்த பகுதியில் யாழ் நகரின் பிரதான மீன் சந்தை, பல கடைத் தொகுதிகள், தனியார் இரவுநேர தூர இடங்களுக்கான போக்குவரத்து சேவை,  முற்றவெளி மைதானம் உள்ளிட்ட பல முக்கியத்துவம் மிக்க இடங்களாக இருப்பதும், இவ்விடங்களில் யாழ் மாநகர சபை தமக்கான வரி அறவீடுகளை செய்வதுமான நிலை இருந்தும் கூட யாழ் மாநகரசபையும் இவ் வீதியின் நலன் குறித்து அக்கறை செலுத்தாதிருப்பது வேதனையானது எனவும் சுட்டிக்காட்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

000

  • 153