பங்களாதேஷுக்கு எதிரான ரி20 தொடருக்கான பாகிஸ்தான் அணியில் இருந்து முன்னணி வீரர்களான ஷஹீன் ஷா அப்ரிடி, பாபர் அஸாம் மற்றும் மொஹமட் றிஸ்வான் ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.
ஆகிப் ஜாவிட்டுக்கு பதில் கடந்த வாரம் நியமிக்கப்பட்ட பாகிஸ்தான் புதிய பயிற்சியாளரான நியூசிலாந்தின் மைக் ஹேசனின் கீழ் அந்த அணி பங்களாதேஷ் அணியை எதிர்கொள்ளவுள்ளது. பாகிஸ்தான் வரும் பங்களாதேஷ் அணி ரி20 தொடரில் ஆடவுள்ளது.
எனினும் தற்போது நடைபெற்று வரும் பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இந்த ரி20 தொடரிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதற்கான போட்டி அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
எனினும் இந்த தொடருக்கு சல்மான் அலி அகா தலைமையிலான பாகிஸ்தான் ரி20 குழாம் நேற்று அறிவிக்கப்பட்டது.
இதில் வேகப்பந்து வீச்சாளர் அப்ரிடி கடைசியாக நியூசிலாந்தில் கடந்த மார்ச் மாதம் நடந்த ரி20 தொடரில் ஆடியபோதும், பாபர் அஸாம் மற்றும் ரிஸ்வான் இருவரும் தொடர்ந்து இரண்டாவது ரி20 தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மந்தமாக ஓட்டங்களை சேகரிப்பதாக விமர்சனம் உள்ளது.
நியூசிலாந்து தொடரில் இடம்பெறாத சயிம் அயூப் மற்றும் பகர் சமான் ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளனர். கடந்த ஆண்டு மே மாதம் தொடக்கம் பல்வேறு காயங்களால் அணியில் இடம்பெற தவறிய ஹசன் அலியும் அழைக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் குழாம்: சல்மான் அலி அகா (தலைவர்), ஷதாப் கான், அப்ரார் அஹமது, பஹீம் அஷ்ரப், பகர் சமான், ஹரிஸ் ரவூப், ஹசன் அலி, ஹசன் நவாஸ், ஹுசைன் தலத், குஷ்தில் ஷா, மொஹமட் ஹாரிஸ், மொஹமட் வசீம், மொஹமட் இர்பான் கான், நசீம் ஷா, ஷஹிப்சதா பர்ஹான், சயிம் அயூப்.
000
- 174