மாநகர சபையால் யாழ்ப்பாண நகரப் பகுதிகளில் சேகரித்த கழிவுப் பொருட்களை உழவு இயந்திரத்தில் எடுத்துச் செல்லும்போது உரிய முறையை பின்பற்றாது மக்கள் அதிகம் புழக்கத்திலுள்ள பிரதான வீதிகளால் எடுத்துச் செல்லப்படுவதால் துர்நாற்றம் உள்ளிட்ட பல்வேறு சுகாதார பாதிப்புகளால் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டுவருவதை அவதானிக்க முடிகின்றது.
குறிப்பாக உழவு இயந்திரத்தின் பெட்டிக்குள் கழிவுப் பொருட்களை ஏற்றிய பின்னர் அதனை மூடாமல் திறந்த வண்ணம், கழிவுப் பொருட்கள் சேமிக்கும் இடத்திற்கு கொண்டு செல்வதை அவதானிக்க முடிந்தது.
இதன்போது பொலுத்தீன் உள்ளிட்ட கழிவுப் பொருட்கள் காற்றில் பறந்து வீதிகளில் பரவுவதை அவதானிக்க முடிந்தது. அதுமட்டுமல்லாது திரவ வடிவிலான கழிவுகளை எடுத்துச் செல்லும்போதும் அதிகளவான துர்நாற்றம் வீசுவதை காணமுடிகின்றது.
இதேவேளை உழவு இயந்திரத்துக்கு உறுதியான இலக்க தகடுகளும் காணப்படுவதில்லை. குறிப்பாக மாநகர சபையின் கழிவக்கற்றும் பல வாகனங்களானது இவ்வாறு இலக்க தகடு இல்லாமலே பணியில் ஈடுபடுகின்றது எனவும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அதுமட்டுமல்லாது யாழ். மாநகர சபையினரே இவ்வாறு தொடர்ச்சியாக தவறிழைக்கும்போது அவர்கள் எவ்வாறு மக்களை நல்வழிப்படுத்த தகுதியுடையவர்கள் என்ற கேள்வியை மக்கள் எழுப்புகின்றனர்.
இவ்வாறான செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு யாழ். மாநகரசபை ஆணையாளர் ஏன் நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
எனவே இவ்வாறான முறைகேடுகளை சீர் செய்ய வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.
- 169