தோல்வியுற்ற உள்நாட்டு பொறிமுறைகளை செயற்படுத்துவதாகப் பாசாங்கு செய்வதற்குப் பதிலாக, பொறுப்பு கூறலுக்கான உறுதிப்பாட்டை அரசாங்கம் நிரூபிக்க வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்ட பின்னணியில் அறிக்கையொன்றை வெளியிட்டு மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியப் பிராந்தியத்துக்கான பிரதி பணிப்பாளர் மீனாக்ஷி கங்குலி இதனைத் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் 16 ஆண்டுகளாக நீதிக்காகப் போராடி வருகின்றனர். ஐக்கிய நாடுகள் சபையும் மனித உரிமைக் குழுக்களும் போர்க்குற்றங்கள் மற்றும் அரச பாதுகாப்புப் படையின் மனித உரிமை மீறல்கள் குறித்து பல ஆதாரங்களைச் சேகரித்தன.
எனினும், அடுத்தடுத்த அரசாங்கங்கள் நம்பகமான பொறுப்புக்கூறல் செயல்முறையை ஆரம்பிக்கத் தவறிவிட்டன. இதற்கிடையில், பாதிக்கப்பட்ட சமூகங்கள் தொடர்ந்தும் அடக்குமுறை மற்றும் பிற மீறல்களை எதிர்கொள்கின்றன.
கடந்த ஆண்டு பல தமிழ் மக்கள் அனுர குமார திசாநாயக்கவை ஜனாதிபதியாக்குவதற்கு வாக்களித்தனர்.
அவர் முந்தைய அரசாங்கங்களிலிருந்து வேறுபட்டு அடக்குமுறை மற்றும் பாகுபாட்டு மரபை நிவர்த்தி செய்வார் என்று அந்த மக்கள் நம்பிய போதிலும் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
காணாமல் போனோர் அலுவலகம், இழப்பீட்டு அலுவலகம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம் உள்ளிட்ட முந்தைய அரசாங்கங்களின் தோல்வியுற்ற முயற்சிகளை அனுர குமார திசாநாயக்க அரசாங்கம் ஆதரித்துள்ளது.
எனினும் அவை எந்தவொரு முன்னேற்றத்தையும் கொண்டுவரவில்லை. இந்த பொறிமுறைகள் பாதிக்கப்பட்ட குடும்பங்களால் நிராகரிக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில், தமிழர்களைக் குறிவைக்க நீண்ட காலமாகப் பயன்படுத்தப்படும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அரசாங்கம் தொடர்ந்தும் அமுல்படுத்தி வருகிறது.
ஜீஎஸ்பி பிளஸ் என்ற ஐரோப்பிய ஒன்றிய சந்தைக்கான வரி இல்லாத அணுகலைத் தக்கவைத்துக் கொள்வதற்கான நிபந்தனையாக இந்த கடுமையான சட்டத்தை ரத்து செய்வதாக ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அரசாங்கம் உறுதியளித்திருந்தது.
அத்துடன் பொறுப்பு கூறலை வலியுறுத்தும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் யோசனையை இந்த அரசாங்கம் நிராகரித்துள்ளது.
இதேநேரம் மதிப்பிழந்த உள்நாட்டு முயற்சிகளைச் செயற்படுத்துவதாக அரசாங்கம் பாசாங்கு செய்கிறது.
பொறுப்புக்கூறல் திட்டத்தைப் புதுப்பிப்பதற்கான தீர்மானத்தை ஆதரிப்பதன் மூலம் பொறுப்புக்கூறலுக்கான தமது உறுதிப்பாட்டை அரசாங்கம் நிரூபித்து, தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியப் பிராந்தியத்துக்கான பிரதி பணிப்பாளர் மீனாக்ஷி கங்குலி வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
- 275