முட்டை விலை குறைந்தாலும், முட்டையை பிரதான உள்ளீட்டு பொருளாக இணைத்து செய்யப்படும் “ஆம்லெட்”, முட்டை அப்பம், முட்டை ரொட்டி, கொத்து ரொட்டி ஆகியவற்றின் விலை இன்னமும் குறையாது அதிகரித்த விலையிலேயே காணப்படுவதால் வாடிக்கையாளர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
ஒரு முட்டையின் விலை 58 முதல் 60 ரூபாய் வரை இருந்தபோது, முட்டை அப்பம் 120 -140 ரூபா வரையாகவும் முட்டை ரொட்டி 130 முதல் 150 ரூபாய் வரையாகவும், ஆம்லெட் 120 - 150 ருபாவாகவும் முட்டைக் கொத்து ரொட்டி 350 ரூபாவாகவும் சடுதியாக உயர்ந்தது.
இதேநேரம் தற்போது முட்டை ஒன்றின் விலை 22 முதல் 26 வரை விற்பனை செய்யப்படுகின்றது. ஆனால் முட்டை அதிகரித்த விலை நாள்களில் காணப்பட்ட உச்ச விலைகளிலேயே “ஆம்லெட்”, முட்டை அப்பம், முட்டை ரொட்டி, கொத்து ரொட்டி ஆகியவற்றின் விலை இன்னமும் அனைத்து உணவகங்களிலும் காணப்படுகின்றது.
இதேநேரம் முட்டை விலை குறைவாக விற்பனை செய்யப்படும் போது எதற்காக இன்னமும் குறித்த உணவுப் பொருட்களின் விலை குறைக்கப்படவில்லை என்று வாடிக்கையாளர்கள் கேள்வி எழுப்புவதுடன் அது தொடர்பில் துறைாசார் அதிகாரிகள் அக்கறையீனமாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டிகின்றனர்.
அத்துடன் ஒரு பொருளின் விலை அதிகரிக்கும் நாளன்றே அது சார் உணவு பொருட்களின் விலையையும் அதிகரிக்கும் உணவகங்கள் இவ்வாறு மிக குறைவாக முட்டை விற்பனை செய்யப்படும் போது அந்த உணவு பொருட்களின் விலையை குறைக்க முன்வராது மக்களை சுரண்டுகின்றனர் என்றும் குற்றம் சுமத்தும் வாடிக்கையாளர்கள் விலைகள் குறைக்கப்படும் என்று கூறி ஆட்சியைப் பிடித்து அரியணை ஏறிய அனுர அரசும், அதன் துறைசார் அதிகாரிகளும் இவ்வாறான செயற்பாடுகளுக்கு சாமரம் வீசுவதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனவே முட்டை விலை அதிகரிக்கும் போது உணவுப் பொருட்களின் விலை உடனடியாக உயர்த்தியதை போன்று முட்டை விலை குறைக்கப்பட்டுள் இச்சந்தர்ப்பத்தில் விலையை குறைக்க உணவக உரிமையாளர்கள் முன்வர வேண்டும் என்பதுடன் இன்றைய அரசும் அதன் துறைசார் அதிகாரிகளும் அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
- 198