Feed Item
·
Added a post

'மாடு மாதிரி வளர்ந்து இருக்கிறியே தவிர மண்டையில மசால் கொஞ்சம் கூட இல்லையே! உன்னை வச்சு வேலை வாங்குறதுக்குள்ள என் உசுரு போயிரும் போலிருக்கு. இனி நீ வேலைக்கு வர வேணாம். ஒழுங்கா வீட்டுக்கு ஓடிப் போயிரு'

பலசரக்கு கடை முதலாளி விரட்டி விட்டதில் முகத்தில் டன் கணக்காக சோகத்தை சுமந்து வீட்டிற்கு வந்தான் நாகேந்திரன்.

அவனைப் பார்த்ததுமே அவனது மனைவிக்கு புரிந்து போனது. இந்த முறையும் வேலை காலி.

ஒரு மாதத்திற்குள் ஒன்பது இடத்திற்கு வேலைக்கு போன ஒரே நபர் இவனாகத்தான் இருக்கும். வேலைக்கு வைத்திருப்பவர்கள் ஏதாவது ஒரு வேலை செய்யச் சொன்னால் அதற்கு எதிர்மாறான வேலையை செய்யச் சொல்லி இவனது மூளை கட்டளையிடும்.

விளைவு..?

வேலைக்கு சேர்ந்த வேகத்தோடு வீட்டிற்கு அனுப்பி விடுவார்கள். வேலையில்லாமல் இவன் திரும்பி வருவது ஒன்றும் புதிதல்ல.

தவிர அவனது கூட்டாளிகள் எல்லோரும் பிக்பாக்கெட் மன்னர்கள். அவர்களோடு சுத்துவது தான் இவனது பொழுது போக்கே. வேலைக்கு செல்லாத நாட்களில் நண்பர்களோடு எங்கு போவான் என்பது கடவுளுக்கு தான் வெளிச்சம். அவனை வேலைக்கு சேர்ப்பதற்கும் கடைக்காரர்கள் தயங்கினார்கள்.

அதனால் எதைப் பற்றியும் கவலைப்படாமல் காய்கறி நறுக்கி கொண்டிருந்தவள் கண்களில் அந்த பேப்பர் விளம்பரம் பட்டது.

அதில் பேங்க் செக்யூரிட்டிக்கு ஆள் தேவை என்று இருந்தது. அந்த பேப்பரை எடுத்துக் கொண்டு நாகேந்திரனிடம் சென்று பேசினாள்,

'பேங்க் வேலைக்கு ஆள் தேவைன்னு விளம்பரம் வந்திருக்கு. அதனால உடனே பேங்குக்கு போயி அந்த வேலை சம்பந்தமாக விசாரிச்சிட்டு வாங்க'

பேப்பர் கட்டிங்கை எடுத்துக் கொண்டு பேங்கிற்கு கிளம்பினான் நாகேந்திரன். மேனேஜரை சந்தித்து பேசினான்.

மேனேஜர் சொன்னார்,

'ஆள் பார்க்க வாட்டசாட்டமா தான் இருக்கே. எங்க பேங்க் செக்யூரிட்டி வேலைக்கு உன்ன மாதிரியான ஆளு தான் தேவை. உன்ன நாங்க வேலைக்கு சேர்த்துக்கிறோம். இந்த ஃபார்மை ஃபில்லப் பண்ணி கொடு'

விண்ணப்பத்தை வாங்கியவன் வங்கி மேனேஜரிடம் சொன்னான்,

'சார் எனக்கு சரியா எழுத வராது. தப்பு தப்பா எழுதுவேன். அதனால நீங்க கேள்வி கேட்டுகிட்டே வாங்க . நான் பதில் சொல்றேன். நீங்களே அந்த பதிலை விண்ணப்பத்துல எழுதுங்க'

சரி என தலையசைத்து ஒவ்வொரு கேள்வியாக கேட்க ஆரம்பித்தார் மேனேஜர்.

ஒவ்வொரு கேள்விக்கான பதில் அளித்து கொண்டு வந்தவனின் காதுகளில் மேனேஜர் கேட்ட அந்த கேள்வி பட்டது.

'நீங்கள் இதற்கு முன் சிறை சென்ற அனுபவம் உண்டா?'

'இல்லை' என பதில் சொன்னான். மேனேஜர் எழுதினார்.

'என்ன காரணம்?' என அடுத்த கேள்வி கேட்டார்.

மிகுந்த சந்தோஷத்தோடு உற்சாகமாய் பதில் சொன்னான்,

'காரணம் என்னன்னா... போலீசால ஒரு தடவை கூட என்னைப் பிடிக்க முடியலை'

  • 594