அப்பா இறந்து இன்றோடு பதினாறு நாட்கள் ஆகிவிட்டது.
விசேஷத்திற்கு வந்திருந்த உறவினர்கள் அவரவர் வீட்டுக் கதைகளை பேசிக்கொண்டு பந்தியில் பரிமாறப்பட்ட அசைவு உணவுகளை ஒரு கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
ஹாலில் போடப்பட்டிருந்த சோபாவில் உட்கார்ந்து விட்டத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த கருணாகரனால் தான் அப்பாவின் நினைவுகளில் இருந்து விடுபட முடியவில்லை.
மனதிற்குள் பேசினான்.
அவர் வாழ்ந்த காலகட்டத்தில் அவருடன் எத்தனை முறை சண்டை போட்டு இருப்பேன்?
வறுமையின் பிடியில் சிக்கி இருந்த போது கூட துருப்பிடித்த சைக்கிள் கேரியரில் உட்கார வைத்து கால் வலிக்க சைக்கிளை மிதித்து என்னை ஊரைச் சுற்றி காட்டியதை எல்லாம் மறந்து,
ஒரு டிவிஎஸ் 50 கூட வாங்க துப்பில்லாத நீ எல்லாம் என்ன மனுசன்யா..? என கேட்டு சொல்லால் அவரது நெஞ்சில் மிதித்திருக்கிறேன்..... என் கல்விக்காக கடன் வாங்கி அதை திருப்பி செலுத்த முடியாததால் கடன்காரர்கள் வீட்டு வாசலில் வைத்து அவரை அடித்து கேவலப்படுத்திய போது, உனக்கு போய் மகனாக பிறந்ததற்கு எத்தனை ஜென்மங்களில் என்னென்ன பாவம் எல்லாம் பண்ணியிருக்கிறேனோ எனக் கேட்டு சொல்லால் என் பங்கிற்கும் அவரை அடித்திருக்கிறேன்.
கூலி வேலை செய்து கிடைத்த பணத்தில் அவர் வயிற்றை பட்டினி போட்டு சாலையோர கடைகளில் எனக்காக வாங்கி வந்த உணவு பார்சலை பிரித்து சாப்பிட்டு விட்டு, ... இந்த சாப்பாட்டை நாய் திங்குமாய்யா? இந்த மாதிரி கேவலமான சாப்பாட்டை நீ சாப்பிட வேண்டியது தான். என்னை ஏன் சாப்பிட சொல்லி இம்சை பண்ணி தொலைக்கிறாய்? எனக்கேட்டு அவரது வெறும் வயிற்றை அமில வார்த்தைகளால் எரிய வைத்திருக்கிறேன்.
ஒரு வழியாக ஐஐடியில் சேர்ந்து கை நிறைய சம்பளம் வாங்கி சென்னையில் தனி வீடு எடுத்து செட்டிலாகி அவரிடமிருந்து பிரிந்த பிறகு தான் சொர்க்கத்தை அனுபவிப்பதாக இருந்தது.
யார் யார் போனில் இருந்தோ என்னை அழைப்பார். இரண்டொரு வார்த்தைகளுக்கு மேல் எதுவும் பேசாமல் தொலைபேசி அழைப்பை துண்டித்து விடுவேன். அவரை விட்டுப் பிரிந்து தனியாக வாழ்ந்த இரண்டு வருட காலம் இரண்டு நிமிடங்கள் போல் ஓடிப் போனது.
போன மாதம் தான் என்னை சந்திக்க சென்னைக்கு வந்தார்.
என்னுடன் வேலை பார்க்கும் நண்பர் ஒருவருக்கு பிறந்தநாள் விருந்து எனது வீட்டில் வைத்து நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம். விதவிதமான உணவுகள் டைனிங் டேபிளை அலங்கரித்துக் கொண்டு எங்கள் பசியை தூண்டி விட்டுக் கொண்டிருந்தது. உணவு பதார்த்தத்தை நான் எடுக்க முயன்ற போது காலிங் பெல் சத்தம் கேட்டு கதவைத் திறந்தேன்.
வாசலில் அப்பா நின்று இருந்தார். அழுக்கு பிடித்த சட்டை. கணுக்காலுக்கு மேல் ஏறி இருந்த பழுப்பு நிற வேஷ்டி . கையில் ஒரு மஞ்சள் பை . அதற்குள் எனக்கு பிடிக்கும் என ரோட்டோர கடையில் இருந்து வாங்கி வந்திருந்த தின்பண்டங்கள். பகீரென்றிருந்தது எனக்கு.
என்ன வந்தீர்கள் என கேட்டேன்.
இரண்டு நாள் உன் கூட தங்கி இருந்து வயிறா சாப்பிட்டுட்டு போகலாம்னு வந்திருக்கிறேன் என்றார்.
ஊர்ல ரெண்டு இட்லிக்கு கூட ரெண்டு இட்லி சாப்பிட்டா வயிறு நிறைஞ்சிட்டு போகுது. அதுக்கு எதுக்கு இங்க வந்திருக்க? வயசான காலத்துல கீழே விழுந்து அநாதையா செத்து கிடக்காம ஒழுங்கா ஊர் போய் சேரு.
அதிர்ந்து விட்டார். அவருக்கு உதடுகள் துடித்தே தவிர ஒரு வார்த்தை கூட வரவில்லை.
சரிப்பா நான் போறேன். உனக்குன்னு ஆசை ஆசையா வாங்கிட்டுவந்த இந்த தின்பண்டத்தையாவது...
அவர் பேசி முடிக்கும் முன் வெடுக்கென கையில் இருந்த பையை பிடுங்கி அருகில் இருந்த சாக்கடைக்குள் வீசினேன். என் தரத்துக்கு இதையெல்லாம் நான் திங்கவா? நீ வாங்கிட்டு வந்தது எங்கே போய் சேரணுமோ அங்க போய் சேர்ந்திருச்சு. நீ ஊருக்கு போய் சேரு.
சொல்லிவிட்டு பதிலுக்கு காத்திருக்காமல் வீட்டிற்கு திரும்பி கதவை பூட்டிக் கொண்டேன். அதன் பிறகு வீட்டிற்குள் நடந்த தடபுடலான விருந்தில் அவரை சுத்தமாக மறந்து போனேன்.
திடீரென அவர் மாரடைப்பால் இறந்து போனார் என கிராமத்திலிருந்து போன் வந்தது. வேண்டா வெறுப்பாக அவர் சிதைக்கு தீ மூட்டி விட்டு சுடுகாட்டில் இருந்து வீட்டிற்கு நடந்து வந்த போது என்னுடன் நடந்து வந்த நாட்டாமை சொன்னார்,
'உங்கப்பனை கொன்னுட்டியே தம்பி '
தூக்கி வாரி போட்டது எனக்கு. சனியன் பிடித்தவன். சாவதற்கு முன்பாக சென்னையில் நடந்த அத்தனை விஷயங்களையும் ஊர் முழுவதும் தம்பட்டம் அடித்திருக்கிறான். இனி எப்படி என்னால் இந்த ஊருக்குள் தலை நிமிர்ந்து நடக்க முடியும்?
அவமானம் தாங்க முடியாமல் தலை குனிந்தேன்.
நாட்டாமை தொடர்ந்து பேசினார், 'நீ என் தம்பி தலை குனியுற? தப்பெல்லாம் உங்கப்பன் மேல தான் இருக்கு. வயசாகி போச்சுன்னா சாப்பாட்டு விஷயத்தில் ஒரு கட்டுப்பாடு வேண்டாமா?
என் மகனை பார்க்க போனேன். கோழி, கறி, மீனு ன்னு விதவிதமா சமைச்சு போட்டான். வயிறு முட்ட சாப்பிட்ட சாப்பாடு தொண்டை குழி வரைக்கும் நிக்குது. இதுக்கு மேல என்னால எதுவும் சாப்பிட முடியாதுன்னு உன்னை பார்த்துட்டு வந்த நாளிலிருந்து சொல்லிக்கிட்டு திரிஞ்சான்.
அப்பன் மேல இருக்கிற பாசத்துல நீ விதவிதமா சமைச்சு போட்டு இருப்ப. ஹோட்டல்ல இருந்து வாய்க்கு ருசியா வாங்கி கொடுத்து இருப்ப. அதையெல்லாம் திங்கலாமா வேண்டாமான்ற அறிவு அவனுக்கு வேண்டாமா?
அப்புறம் ரெண்டு நாளா அவனைக் காணோம். வீட்டில போய் பார்த்தேன். அன்ன ஆகாரம் இல்லாமல் படுத்து கிடந்தான்.
என்னடா ஆச்சுன்னு கேட்டேன்.
என் மகன் சந்தோஷமா வாழுறதை பார்த்ததிலிருந்து வயிறு மனசும் நிறைஞ்ச இருக்குண்ணே....... அவனைப் பெத்து போட்டதும் செத்துப்போன அவனோட அம்மா இருந்தா கூட இவ்வளவு தூரத்துக்கு வளர்த்திருக்க முடியுமான்னு தெரியலை. வாழ்நாள் முழுக்க கஷ்டத்தை சுமந்த இந்த உடம்பாலேயும் மனசாலேயும் சந்தோஷத்தை சுமக்க முடியலை அண்ணேன்னு சொல்லி அழுதான். நீ போட்ட கறி சாப்பாட்டை அந்த உடம்பு ஏத்துக்கலை போலிருக்கு. கொழுப்பு நெஞ்சை அடைச்சு அன்னைக்கு ராத்திரியே பட்டுன்னு போய் சேர்ந்துட்டான்.
அதுக்கு நீ என்ன பண்ணுவ? நான் விளையாட்டுக்கு கேட்டது மாதிரி நீயா அவன கொன்ன?
நாட்டாமை பேச்சை நிறுத்தினார். எனக்குள் அழுகை வெடித்தது.
ஆமா நான் தான் எங்க அப்பாவை கொன்னேன். அவர் என் மேல் சிறந்த பாசத்தை கொன்னேன். அவர் எனக்காக பண்ணின தியாகத்தை கொன்னேன். பின் வாழ்க்கையிலாவது சந்தோசமா வாழலாம்னு நினைச்சிருந்த அவருடைய நினைப்பை கொன்னேன்.
அவனையும் அறியாமல் நான்தான் அவரைக் கொன்னேன் என தலையில் அடித்து அழுதான்.
திடீரென யாரும் தோளை தட்டியது போல் இருந்தது. திரும்பிப் பார்த்தான்.
தனது ஒரே பெண்ணை அவனுக்கு தர தயாராக இருப்பதாக சொல்லிவிட்ட உறவினர் ஒருவர் நின்று இருந்தார்.
'உன்கிட்டே ஒரு விஷயம் பேசணும் தம்பி. வீட்டுக்குள்ள இருக்கிற பீரோவுல உன் அப்பாவோட பழைய துணிமணிகள் எல்லாம் இருக்கு. நியாயமா உன் அப்பா இறந்த அன்னைக்கே நீ அதை ஆத்துல கொண்டு போய் போட்டோ அல்லது சுடுகாட்டுலையோ வீசி இருந்திருக்கணும். அப்படி நீ செய்யாம இருக்கிறது பெரிய தரித்திரம். உடனே வீசி ஏறி தம்பி. இல்லைனா இந்த வீட்டுக்கு வாக்கப்பட்டு வரப்போற என் பெண்ணோட வாழ்க்கையிலேயும் அந்த தரித்திரயும் பிடிச்சுக்கும்'
பெயின்ட் போயிருந்த பீரோவை திறந்தான். பொத்தென கால் மீது பீரோவிலிருந்து விழுந்தது ஒரு ஜோடி ஆடை. எடுத்துப் பார்த்தான்.
சென்னையில் கடைசியாக பார்க்க வந்திருந்த போது அணிந்திருந்த அதே சட்டை. பழுப்பேறி போயிருந்த அதே வேஷ்டி .
உனக்கு கௌரவ கொறச்சலாக இருக்கும் என்றால், வாழ்க்கை முன்னேற்றத்திற்கு இது ஒரு தரித்திர தடையாக இருக்கும் என்றால் இதை வெளியே போட்டு விடு என சொல்வது போல் இருந்தது.
பீரோவை நோட்டமிட்டான்.
உள்ளே ஐந்து கிழிந்து போன மூன்று பழைய சட்டைகள். இரண்டு வேஷ்டிகள். நூல் பிரிந்த டவுசர்கள் இருந்தன. கண்களில் நீர் வடிய பார்த்துக் கொண்டே இருந்தான்.
உறவினர் சொன்னார்,
'இப்படியே பேசாமல் இருந்தால் எப்படி தம்பி? அவரோட எச்சம்னு எதுவும் இருக்கக்கூடாது. சட்டுனு அதை அழிச்சுரு'
உடைந்த குரலில் கேட்டான்.... 'இந்த துணிமணிகளை அழிச்சிடலாம். ஆனால் அவரோட எச்சம்னு இருக்கிற என்னை என்ன பண்றது..!'
கீழ விழுந்த ஆடைகளை எடுத்து மடித்து பீரோவில் வைத்து பூட்டி அந்த உறவினரிடம் சொன்னான்.... 'என் அப்பாவோட எச்சம்னு இருக்கிற இந்த ஆடைகள் தரித்திரம் பிடிச்சது இல்லை. குப்பை மேட்டில் பிறந்த என்னை கோபுரத்தில் உட்கார வைத்த சரித்திரம் படைச்சது. என் காலம் உள்ள மட்டும் இருக்கும் இவைகள் இனி என்னோடுதான் இருக்கும். ஒரு நிஜத்தோடு தான் என்னால வாழ முடியலை. என் தந்தையின் நினைவுகளிலாவது இனி நான் வாழ்ந்து விட்டு போகிறேன். இந்த துணிமணிகள் இருந்தால் இந்த வீட்டிற்கு வாழவரும் உங்கள் மகளின் வாழ்க்கை பாழாகும் என நீங்கள் நினைத்தால் எனக்கு உங்கள் மகள் தேவையில்லை.
இதுவரையில் எனக்காக வாழ்க்கையில் எதையெதையோ தியாகம் செய்த என் தந்தைக்கு பிரதியுபகாரமாக இந்த தியாகத்தை நான் செய்து விட்டுப் போகிறேன்' என்றான்.
- 672