'அபூர்வ ராகங்கள்' படப்பிடிப்புத் தளத்தில் பாடலுக்கான கலந்துரையாடலில் எம்.எஸ்.வியிடம் பாலசந்தர் பேசிக்கொண்டிருந்தார். படப்பிடிப்புத் தளத்தில் எல்லா வேலைகளையும் செய்துகொண்டிருந்த அந்தப் படத்தின் நாயகனான கமலும் உடனிருந்தார். "பாடலுக்கான ஒத்திகைக்குப் போகலாமா?" என்று பாலசந்தர் கேட்க, கையைப் பிசைந்துக்கொண்டிருந்த எம்.எஸ்.வி., "நாளை வைத்துக்கொள்ளலாமா?" என்று கேட்டார். அந்த தயக்கத்திற்குக் காரணம் பாடல்வரிகள் இன்னும் வராததுதான் என்று அறிந்த பாலசந்தர் கோபத்தில் சிவந்தார்.
என்ன பண்ணச் சொல்றீங்க? பெரிய கவிஞர் என்பதற்காக எத்தனை நாள் காத்திருப்பது?" என்று சத்தமிட்ட பாலசந்தரை எம்.எஸ்.வி., சாந்தப்படுத்த முயன்றார். மேல் தளத்தில்தான் கவிஞர் இருக்கிறார் என்றும் தாங்கள் சென்று பார்த்தபோது அவர் உறங்கிக்கொண்டிருக்கிறார் என்றும் பாலசந்தரிடம் கமலும் திரைக்கதை ஆசிரியர் அனந்துவும் சொன்னார்கள். ரொம்ப சந்தோஷம்! அப்ப ஷூட்டிங்கை கேன்சல் செய்துவிட்டு நானும் தூங்கப் போகட்டுமா?" என்று கோபத்தில் வெடித்தார்.
அரைத்தூக்கத்தில் இருந்த கண்ணதாசனும் அவர் கூறியது அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்தார். பின் எம்.எஸ்.வி.,யும் சென்றுவிட, ஒரு மணிநேரம் சென்றது. "எழுந்துவிட்டாரா என்று பாருங்கய்யா... எதையாவது எழுதிக்கொடுக்கச் சொல்லுங்கையா... எல்லாத்தையும் நானா எழுத முடியும் ... வந்தா எழுத மாட்டேனா" என்று நொந்துகொண்டார் பாலசந்தர்.
கவிஞரைக் காணச்சென்றவர்களுக்கு அவரைக் காணவில்லை என்ற அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது. கவிஞரின் உதவியாளரிடம் கேட்டதற்கு, பாடல்களை எழுதிக் கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டார் என்ற பதில் கிடைத்தது. கவிஞர் எப்போது எந்த வழியாகச் சென்றார் என்று யாருக்குமே தெரியவில்லை
''அனந்து, அவர் ஏதோ எழுதிருக்கிறாராம்.
என்னத்தை எழுதி வைத்தாரோ தெரியவில்லை" என்று எரிச்சலுடன் கூறினார் பாலசந்தர்.
காகிதத்தில் கவிதையாகப் படர்ந்திருந்த கவிஞரின் வரிகளைப் பார்த்த அனைவரும் அசந்துபோனார்கள். ஏழு வகையான பாடல்களை எழுதிவைத்திருந்தார் கவியரசு. எதை விடுப்பது, எதை எடுப்பது என்கிற குழப்பத்தில் கண்கலங்கி நின்ற அனைவருக்கும் அந்த மகிழ்ச்சியிலிருந்து திரும்ப வெகுநேரம் ஆனது.
அப்படி கண்ணதாசன் எழுதிய ஏழு பாடல்களில் ஒரு பாடல்தான் 'அபூர்வ ராகங்கள்' படத்தில் வாணி ஜெயராம் பாடிய 'ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்...' என்கிற பாடல். இந்தப் பாடலுக்காக சிறந்த பாடகி என்று தேசிய விருதும் கிடைக்கப் பெற்றார் வாணி ஜெயராம்.
- 421