பழம்பெரும் நடன இயக்குநர்களைத் தேடிப்பிடித்து கௌரவித்து வருகிறார் நடன இயக்குநர் ஸ்ரீதர்.
‘நாக்க முக்க’ பாடலுக்கு நடனம் அமைத்தது மூலம் தமிழ் ரசிகர்களைக் கவர்ந்தவர் ஸ்ரீதர். இவர் ஏராளமான தமிழ்ப் படங்களில் நடன உதவியாளராகப் பணியாற்றியதுடன் நடனமும் ஆடியுள்ளார்.
இந்நிலையில், பழம்பெரும் நடன இயக்குநர்கள் குறித்து இன்றைய தலைமுறையினருக்கு ஏதும் தெரியவில்லை என்பது தமக்கு வருத்தம் அளிப்பதாகச் சொல்கிறார் ஸ்ரீதர். இதையடுத்து அவர்களைப் பற்றிய தகவல்களை சேகரிக்கத் தொடங்கினாராம்.
“தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடன இயக்குநர்களை கௌரவிக்கும் விதமாக ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தேன். அதன் மூலம் கடந்த 1938ஆம் ஆண்டு முதல் இன்று வரை தமிழ் சினிமாவில் பணியாற்றிய ஏராளமான நடன இயக்குநர்களைக் கண்டறிய முடிந்தது.
“இன்று இவர்களை நாம் கவனிக்கத் தவறினால், அடுத்து நூறாண்டு கழிந்த பின்னர் இப்போது சிறந்து விளங்கும் நடனப் பயிற்சியாளர்களைப் பற்றி யாருக்கும் தெரியாமல் போகும் வாய்ப்புண்டு.
“எனவேதான் தமிழ் சினிமாவைச் சார்ந்த நடன குருநாதர்களைப் பற்றிய விவரங்களை ஆவணப்படுத்தி உள்ளேன்,” என்கிறார் ஸ்ரீதர்.
இந்த நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி உள்ளிட்ட பல பிரபலங்கள் பங்கேற்றனர். தற்போது நடனம் அமைப்பதுடன் நடிக்கவும் செய்கிறார் ஸ்ரீதர்.
“தற்போது இரண்டு படங்களில் வில்லனாக நடிக்கிறேன். நேரம் அமையும்போது எனது மகள் அக்சதாவுடன் நடனமாடும் காணொளிகளை இன்ஸ்டகிராமில் பதிவிடுகிறேன். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. “சினிமாவுக்கு வருபவர்கள் வெற்றி பெற நான் ஒற்றை வரியில் ஆலோசனைக் கூறுவேன். சினிமாவில் சாதிக்க நமக்கு தேவையானவற்றை உருவாக்கும் கற்பனைச் சக்தி வேண்டும்.
“புது விஷயங்களை அறிமுகப்படுத்துவதுடன் அவற்றைக் கற்றுக்கொள்ளும் முயற்சியும் தேவை,” என்கிறார் ஸ்ரீதர்.
- 365