Feed Item
Added a post 

திருச்செந்தூருக்குச் சென்று கடவுளைத் தரிசிக்கும் முன்பு முதலில் கடலில் நீராட வேண்டும்.

பின் ஈரத்துணியுடனேயே கடற்கரையில் உள்ள நாழிக்கிணற்றில் 10 ரூபாய் கட்டணம் செலுத்தி கிணற்று படிகளில் இறங்கி அங்குள்ள ஊற்றில் 2 வாளி தண்ணீர் நம் மேலே ஊற்றுவார்கள். அதில் குளித்துவிட்டு பின்னர் உடை மாற்றுபவர் மாற்றலாம்

பின் நேரடியாகக் கோவிலுக்கு செல்லாமல் அருகிலுள்ள மூவர் (மௌன சுவாமி, காசி சுவாமி, ஆறுமுக சுவாமிகள்) சமாதிக்கு சென்று வணங்கி விட்டுத்தான் முருகரை காண செல்ல வேண்டும்.

இவர்கள் யார் என்ற கேள்வி கட்டாயம் எழும்.. சிதிலமடைந்திருந்த திருச்செந்தூர் திருக்கோயிலை புனரமைத்தவர்கள்.

மேலும், வாக்கு சொல்பவர்கள், ஜோதிடம் பார்ப்பவர்கள், பரிகாரம் செய்பவர்கள் இவர்களுக்கு ஏற்படும் தோஷங்களுக்கு மூவர் சமாதுக்கு கண்டிப்பாக செல்ல வேண்டும். சென்று விளக்கேற்றுவது நன்மை.

பின் கோயிலுக்கு வரும் வழியில் முன் பக்கமே பொருள் பாதுகாப்பு அறை உள்ளது.

அதைக் கடந்து கோயிலை நோக்கி வந்தால் காலணி பாதுகாக்க அறை உள்ளது. அங்கு தேங்காய், பழம், பூக்கள் மாலைகள் வாங்கலாம். திருச்செந்தூரில் விலை அதிகம்.

பின் முருகர் கோயிலுக்கு வந்து இலவச தரிசனம் அல்லது கட்டண தரிசனம் செய்யலாம். அர்ச்சனை செய்பவர்கள் சீட்டு வெளியில் கவுண்டரிலேயே வாங்கிக் கொள்ளவும்.

கட்டண தரிசனம் மூலம் முருகனின் கர்பகிரகம் எதிரே உட்காந்து தரிசனம் செய்ய அனுமதிப்பார்கள்.

உள்ளே சென்று மூலவரை தரிசனம் செய்து விட்டு அருகில் ஒரு குகை பாதை போல் இருக்கும்.

அங்கே கதவு திறந்திருந்தால் 5 ரூபாய் அங்கேயே டிக்கெட் எடுத்துக் குனிந்து செல்ல வேண்டும்.

மூலவரை வலமிருந்து இடமாக சுற்றுவது போல் இருக்கும்.

உள்ளே சென்றால் ஒரே ஆவுடையில் ஐந்து லிங்கங்கள் கொண்ட பஞ்சலிங்கத்தை தரிசனம் செய்யலாம்.

கூட்டமாக இருக்கும் நாட்களில் பஞ்சலிங்க தரிசனம் விடுவதில்லை.

மூலவர்கள் இரண்டு உண்டு. 2-வது வள்ளி தேவ சேனா சமேத சண்முக முருகரை காணலாம்.

தரிசனம் முடித்து பிரகாரம் வந்து வலமிருந்து இடமாகச் சென்று மேதா குரு தட்சிணாமூர்த்தியை தரிசனம் செய்ய வேண்டும்.

சூரசம்ஹார போரில் இங்கிருந்து முருகருக்கு ஆலோசனை வழங்கியதால் இது குருவின் இருப்பிடம் ஆகும்.

இன்னொரு சிறப்பு என்னவென்றால் இங்கு ஆமை வாகனத்தில் ஸ்ரீ மேதா தட்சிணாமூர்த்தி அருள்புரிகின்றார். செல்வம், ஆன்ம பலம் செழிக்க இவரை வணங்குதல் வேண்டும்.

பின் அருகில் வள்ளி சன்னதி தரிசனம் முடித்து வலமாக சுற்றி வந்து தெய்வானை சன்னதியை தரிசனம் செய்து விட்டு சண்டிகேஸ்வரர் தரிசனம் முடித்து சனீஸ்வரர் சன்னதி பைரவர் அருகருகே உள்ளது.

தரிசனம் செய்து விட்டு வெளிப்பிரகாரம் வந்து மீண்டும் வலமிருந்து இடமாகப் பிரகாரம் சுற்றினால் ராஜகோபுரம் நோக்கி விநாயகர் வீற்றிருப்பார்

அவரை தரிசித்து கடந்து சென்றால் சூரசம்ஹார மூர்த்தி சன்னதியில் அவரை தரிசித்து அருகில் சகஸ்ர லிங்கமாய் அருள்பாலிக்கும் சிவபெருமானை தரிசித்து விட்டு வந்த வழியே திரும்பி பிரகாரம் வர வேண்டும். அங்கே பெருமாள் நாராயணன் சன்னதி உண்டு.

பெருமாளை தரிசித்து விட்டு வெளியே வருகிற வழியில் கொடிமரம் அருகே கோவில் சுவரில் ஒரு துளை இருக்கும்.

அந்த ஓட்டையில் உங்கள் காதுகளை வைத்தால் வெளிப்புறத்திலிருந்து வரும் கடல் காற்று ஓம் என்று ஒலிக்கும்.

கவனித்தால் நீண்டதாய் ஓம் எனும் ப்ரணவ மந்திரம் ஒலிப்பதைக் கேட்டு அருள் பெறலாம்.

பின் கொடிமரம் வணங்கி முருகருக்கு நன்றி சொல்லி அருகில் கல்யாண விநாயகரை வணங்கி தரிசனத்தை முடிக்கலாம்.

  • 141