எண்பது வயதைக் கடந்த முதியவர் ஒருவர் தம் மனைவியைத் தாம் செல்லும் இடங்களுக்கெல்லாம் கையைப்பிடித்து அழைத்துச் சென்றுகொண்டிருந்தார். ஆனால், அவரோடு சென்ற அவரின் மனைவியோ அடிக்கடி அங்குமிங்கும் வேடிக்கை பார்த்துக்கொண்டு நடக்காமல் நின்றுவிடுவதையும், அந்த முதியவர் அப்பெண்மணியின் கவனத்தைத் திருப்பித் தம்மோடு விடாமல் அழைத்துச் செல்வதையும் தொடர்ந்து கவனித்துவந்தார் அப்பகுதியைச் சேர்ந்த மனிதர் ஒருவர்.
அவர் ஒருநாள் அந்த முதியவரைப் பார்த்து, “பெரியவரே! உங்கள் மனைவி ஏன் உங்களோடு நடக்காமல் இடையிடையே நின்றுவிடுகிறார்? ஏன் அங்குமிங்கும் மிரண்டு பார்க்கிறார்?” என்று வினா எழுப்பினார். அதற்கு அந்த முதியவர், “தம்பி! என் மனைவி மறதிநோயால் (Alzheimer's disease) பாதிக்கப்பட்டிருக்கிறாள்; அதனால்தான் அவள் இப்படி நடந்துகொள்கிறாள்” என்று பதில் சொன்னார்.
அதைக்கேட்ட அந்த மனிதர், ”மறதிநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் உங்கள் மனைவிக்கு உங்களையும் அடையாளம் தெரியாதுதானே?” என்று கிண்டலாகக் கேட்கவே, அதனை ஆமோதித்த அந்த முதியவர், ”உண்மைதான்! என் மனைவி நான் அவள் கணவன் என்பதை மறந்து(ம்) பல ஆண்டுகள் ஆகிவிட்டன” என்று சொன்னார் சற்று வருத்தத்தோடு.
வினாத் தொடுத்தவர் அத்தோடு நிறுத்தவில்லை. ”அப்படியானால் நீங்கள் உங்கள் மனைவியை நடுவழியில் விட்டுச்சென்றாலும் அவர் அதைப்பற்றிக் கவலைப்படப் போவதில்லை; பின்பு ஏன் நீங்கள் செல்லுமிடமெல்லாம் அவரை விடாது அழைத்துச் செல்கின்றீர்கள்?” என்று நக்கலாகக் கேட்க, எரிச்சலூட்டும் அவ்வினாவைக்கூடச் சிறுபுன்னகையோடு எதிர்கொண்ட அந்த முதியவர், ”தம்பி! என் மனைவிக்கு வேண்டுமானால் என்னை அடையாளம் தெரியாமல் போயிருக்கலாம்; ஆனால், அவள்தான் என் மனைவி என்பதும், என் வாழ்க்கைக்கு இனிமை சேர்த்தவள் அவளே என்பதும் எனக்குத் தெரியுமே” என்று பதிலளித்தார். அதைக்கேட்டதும் வினாத்தொடுத்தவரின் முகம் தொங்கிப்போனது; தம்முடைய பண்பாடற்ற வினாவுக்காக முதியவரிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டு அங்கிருந்து நடையைக் கட்டினார் அந்த மனிதர்.
- 926