இயக்குனர் மகேந்திரன் மற்றும் சசி இயக்கத்தில் வெளியான பல படங்களுக்கு துணை இயக்குனராக, சுமார் 12 வருடங்கள் பணியாற்றியவர் இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி. பின்னர் 2002 ஆம் ஆண்டு நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் சினேகா நடிப்பில் வெளியான 'ஏப்ரல் மாதத்தில்', திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.இவருடைய முதல் படமே பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடித்தது. இந்த படத்தில் ஸ்ரீகாந்த் மற்றும் சினேகாவுடன் இணைந்து காயத்ரி ஜெயராம், வெங்கட் பிரபு, தேவன், கருணாஸ், டேனியல் பாலாஜி, மயில்சாமி, பாவா லட்சுமணன், கொட்டாச்சி, உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கல்லூரி காதலை மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருந்தது.
இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் தனுஷை வைத்து புதுக்கோட்டை சரவணன் திரைப்படத்தை இயக்கினார் எஸ் எஸ் ஸ்டான்லி. 2004 ஆம் ஆண்டு இந்த திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களையும், வசூலையும் பெற்றது. மேலும் இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் அதிகம் பேசப்பட்டது. பின்னர் நடிகர் ஸ்ரீகாந்தை வைத்து மெர்குரி பூக்கள் மற்றும் கிழக்கு கடற்கரை சாலை ஆகிய படங்களை இயக்கினார். இந்த இரண்டு படங்களும் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்த நிலையில் திரைப்பட இயக்கத்தில் இருந்து விலகி நடிகராக சில படங்களில் நடிக்க தொடங்கினார்.
பெரியார், ராவணன், நினைத்தது யாரோ, ஆண்டவன் கட்டளை, ஆண் தேவதை, 6 அத்தியாயம், சர்க்கார், போன்ற சில படங்களில் நடித்தார். கடைசியாக கடந்த ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்த 'மகாராஜா' திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
நடிகர் வைபவ் மற்றும் ஆண்ட்ரியாவை வைத்து 'ஆதாம் ஆப்பிள்' என்கிற திரைப்படத்தை இயக்க ஸ்டான்லி முயற்சி செய்து வந்த நிலையில், அந்த படம் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி (57) சிறுநீரக பாதிப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தார். ஆனால் சிகிச்சை பலனிற்றி இவர் இன்று உயிரிழந்தார். இந்த சம்பவம் திரையுலகினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவருடைய இறுதிச் சடங்குகள் இன்று மாலை வளசரவாக்கத்தில் மின்மயானத்தில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.
- 763