Feed Item
Added a news 

2023 ஐபிஎல் பட்டத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் வெற்றிபெற்ற போது எம்.எஸ் தோனி ஓய்வு பெற்றிருக்க வேண்டும் என்றும், இப்போது ரசிகர்களின் மரியாதையை இழந்து வருவதாகவும் முன்னாள் வீரர் மனோஜ் திவாரி கூறியுள்ளார்.

சென்னை அணியில் தொடர்ந்து முக்கிய வீரராக இருக்கும் தோனி, இந்த சீசனில் சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்தத் தவறிவிட்டார், சென்னை அணி லீக்கில் தடுமாறி வருகிறது.

இதுவரை விளையாடிய 4 போட்டிகளில், தோனி 76 ஓட்டங்களை மட்டுமே எடுத்துள்ளார், இதனால், ரசிகர்களும் நிபுணர்களும் அவரது துடுப்பாட்ட நிலையை கேள்விக்குள்ளாக்கியுள்ளனர்.

டெல்லி அணிக்கு எதிராக நேற்று இடம்பெற்ற லீக் போட்டியில் சென்னை அணி படுதோல்வியை சந்தித்திருந்தது. தோனி 26 பந்துகளில் வெறும் 30 ஓட்டங்களை மட்டுமே பெற்றிருந்தார்.

இந்நிலையில், கிரிக்பஸிடம் பேசிய மனோஜ் திவாரி, 2023 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டிதான் தோனி ஓய்வு பெற சரியான நேரம் என்று கருதியதாக குறிப்பிட்டுள்ளார்.

சென்னை அணியின் ரசிகர்கள் தோனி மீது ஆதங்கப்பட தொடங்கியுள்ளனர், இது தோனியின் மாயாஜாலம் வேலை செய்யவில்லை என்பதற்கான அறிகுறி எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“அவர் ஓய்வு பெற சரியான நேரம் 2023 ஆம் ஆண்டு, அவர் ஐபிஎல் கிண்ணத்தை வென்றபோதுதான் என்று நான் நினைக்கிறேன். அப்போதே அவர் ஓய்வு பெற்றிருக்க வேண்டும்.

கிரிக்கெட்டில் அவர் சம்பாதித்த புகழ், பெயர் மற்றும் மரியாதை கடந்த இரண்டு ஆண்டுகளில் அவர் விளையாடும் விதத்தால் அது நழுவி வருவதாக நான் உணர்கிறேன்.” “ரசிகர்களால் அவரை இப்படிப் பார்ப்பதை தாங்க முடியவில்லை.

சென்னை ரசிகர்களின் இதயங்களில் அவர் உருவாக்கிய நம்பிக்கை, ரசிகர்கள் வீதிகளில் அவருக்கு எதிராக பேசும் விதம், அவரின் மாயாஜாலம் வேலை செய்யவில்லை என்பதற்கான அறிகுறியாக இருந்திருக்க வேண்டும்,” என்று திவாரி மேலும் கூறினார்.

000

  • 391