பரஞ்சோதி முனிவர் இயற்றிய 'திருவிளையாடல் புராணம்' ஈசன் நிகழ்த்திய அறுபத்து நான்கு திருவிளையாடல்களை விளக்குவதாகும். இதில் நாற்பத்தி ஏழாவது படலம் 'கரிக்குருவிக்கு உபதேசம் செய்த படலம்' ஆகும்.
மதுரை மீனாட்சியம்மன் திருக்கோவிலில் ஆவணி மூலத் திருவிழாவில் கரிக்குருவிக்கு உபதேசம் செய்த திருவிளையாடல் நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடைபெறுகிறது.
இந்த திருவிளையாடல் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஏன் நடத்தப்படுகிறது. வாருங்கள் அதைப் பற்றி இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளுவோம்.
இராஜராஜ பாண்டியனுக்குப் பின்னர் அவருடைய மகனான சுகுண பாண்டியன் என்பவர் மதுரையை நல்லாட்சி செய்து வந்தார். அவருடைய ஆட்சிக் காலத்தில் முற்பிறவியில் நல்ல செயல்களைச் செய்த ஒருவன் தனது சில தீவினைகளின் காரணமாக மதுரைக்கு அருகில் ஒரு ஊரில் கரிக்குருவியாகப் பிறந்தான்.
கரிக்குருவியை காகங்கள் தலையில் கொத்தித் துன்புறுத்தி வந்தன. வலிமை இல்லாத கரிக்குருவியால் தன்னைத் தாக்கித் துன்புறுத்திய காகங்களை எதிர்க்க முடியவில்லை. இதனால் கரிக்குருவி அந்த பகுதியை விட்டு அகன்று அருகில் இருந்த ஒரு காட்டுப்பகுதியில் வசிக்கத் தொடங்கியது.
ஒருநாள் கரிக்குருவி ஒரு மரத்தின் கிளையில் அமர்ந்திருக்கையில், சிவனடியவர் ஒருவர் தன் சீடர்களுடன் அங்கே வந்து மரத்தடியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அவர் தனது சீடர்களிடம் “மூர்த்தம் தலம் தீர்த்தம் என அனைத்து சிறப்புகளையும் உடைய மதுரையம்பதியில் எழுந்தருளியுள்ள சொக்கநாதரை வழிபட்டால் அவர் தன் பக்தர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் நற்கதி அளித்து அருளுவார்” என்று சொக்கநாதரின் பெருமைகளை எடுத்து உரைத்துக் கொண்டிருந்தார்.
சிவனடியவர் கூறியதைக் கேட்ட கரிக்குருவிக்கு தானும் சொக்கநாதரை வழிபட்டு நற்கதி அடைய வேண்டும் என்ற எண்ணம் உண்டானது.
உடனே கரிக்குருவி பறந்து சென்று மதுரையை அடைந்து பொற்றாமரைக் குளத்தில் தன் உடல் படும்படியாக நனைத்து மேலெழும்பிப் பறந்து பிரகாரத்தைச் சுற்றி வந்து மீனாட்சி அம்மன் சன்னிதிக்குள்ளும் சுந்தரேஸ்வரர் சன்னிதிக்குள்ளும் இருந்த உத்திரத்தின் மீது அமர்ந்து மனமுருகி தரிசனம் செய்தது. தொடர்ந்து மூன்று நாட்கள் இவ்வாறு தரிசித்த அந்த கரிக்குருவியைப் பற்றி அம்பாள் சொக்கநாதரிடம் “இந்த கரிக்குருவி நம்மை தரிசிக்கக் காரணம் யாது?” என வினவினாள்.
“இந்த கரிக்குருவி முற்பிறவியில் செய்த தவறினால் இப்பிறவியில் கரிக்குருவியாகப் பிறந்தும் முற்பிறவியில் செய்த ஒரு நன்மையால் இப்பிறவியில் மதுரையம்பதியைப் பற்றியும் பொற்றாமரைக் குளத்தைப்பற்றியும் அறிந்தும் தனது பிறவித் துன்பத்தை நீக்கிக் கொள்ள நம்பிக்கையோடு நம்மை வழிபட்டு வருகிறது“ என்றார். மேலும் இதன் பலனாக ஈசன் அக்கரிக்குருவிக்கு ஆயுள்விருத்தியையும் பிறவித்துன்பத்தை நீக்கியருளும் மிருத்யுஞ்சய மந்திரத்தையும் உபதேசித்தார். ஞானம் பெற்ற கரிக்குருவியானது ஈசனை துதித்து வழிபட்டது.
- 525