இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா இன்று மாலை காலமானார். அவருக்கு வயது 48.. மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து அவரது உடல் சேத்துப்பட்டில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் மிக முக்கிய இயக்குநர்களில் ஒருவர் பாரதிராஜா. ஸ்டுடியோக்களில் சிக்கியிருந்த தமிழ் சினிமாவை அதில் இருந்து கிராமங்களுக்கு அழைத்துச் சென்றவர் பாரதிராஜா. முதல் மரியாதை, கிழக்கே போகும் ரயில், வேதம் புதிது, கருத்தம்மா என இவர் எடுத்த படங்கள் ஒவ்வொன்றும் ஒரு மைல்கல்.
மனோஜ் தாஜ் மஹால் படத்தின் மூலம் அறிமுகமானார். இயக்குநர் பாரதிராஜா தனது மகனை இந்த படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார். பெரும் எதிர்பார்ப்புடன் 1999ஆம் ஆண்டு இந்தப் படம் வெளியானது. இருப்பினும், அந்த படம் பெரியளவில் வரவேற்பைப் பெறவில்லை. அதன் பிறகு சில படங்களில் நடித்த மனோஜ் பாரதிராஜா, பிறகு நடிப்பில் இருந்து சற்று விலகி இருந்தார்.
இதற்கிடையே சமீபத்தில் அவருக்கு உடல்நலக்குறைவும் ஏற்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் மனோஜ் பாரதிராஜாவுக்கு இதய அறுவை சிகிச்சை நடந்து இருக்கிறது. அப்போது முதலே வீட்டில் இருந்து அவர் சிகிச்சை எடுத்து வந்துள்ளார்.
இந்தச் சூழலில் தான் இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா (48) நேற்று (25ஆம் தேதி) மாலை காலமானார். அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. மனோஜ் பாரதிராஜாவின் திடீர் மறைவு அவரது குடும்பத்தினரையும் திரைத்துறையினரையும் ரசிகர்களையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
- 728