விநாயகர் துதி
ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம் பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே !
முருகன் துதி
முருகனே! செந்தில் முதல்வனே! மாயோன்
மருகனே! ஈசன் மகனே - ஒருகை முகன்
தம்பியே! நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும்
நம்பியே கைதொழுவேன் நான்.
- திருமுருகாற்றுப்படை
சிவன் துதி
நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க.
ஈசனடி போற்றி எந்தையடி போற்றி
தேசனடி போற்றி சிவன் சேவடி போற்றி !
- சிவபுராண வரிகள்
பெருமாள் துதி
பச்சைமா மலைபோல் மேனி
பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே
ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய்
இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே !
- தொண்டரடிப்பொடி ஆழ்வார்
அம்பாள் துதி
நன்றே வருகினும் தீதே விளைகினும் நானறிவது
ஒன்றேயும் இல்லை உனக்கே பரம் எனக்கு உள்ளவெல்லாம்
அன்றே உனதென்று அளித்து விட்டேன் அழியாத குணக்
குன்றே அருட்கடலே இமவான் பெற்ற கோமளமே.
- அபிராமி அந்தாதி
மகாலட்சுமி துதி
ஒருமால் உளமகிழ் ஒருத்தி போற்றி
திருமா மகள் நின் செவ்வி போற்றி
ஒருமா மணியா ஒளிர்வாய் போற்றி
பிரியாது அவனுளம் பேணுவாய் போற்றி
வருமாசு அகற்றுசெம் மணியே போற்றி !
சரஸ்வதி துதி
ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய உணர்விக்கும் என்னம்மை - தூய
உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தின் உள்ளே
இருப்பளிங்கு வாரா(து) இடர்.
படிகநிறமும் பவளச் செவ் வாயும்
கடி கமழ்பூந் தாமரைபோற் கையும் – துடியிடையும்
அல்லும் பகலும் அனவரதமும் துதித்தால்
கல்லும் சொல்லாதோ கவி !
- கம்பர் பெருமான்
தக்ஷிணாமூர்த்தி துதி
தெளிவு குருவின் திருவுருக் காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே!
- திருமூலர் திருமந்திரம்
அனுமன் துதி
அருள்மிகு நாமக்கல் ஆஞ்சநேயர் வடைமாலை அலங்காரத்துடன்..
அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலாரூரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் எம்மை அளித்துக் காப்பான்.
- கம்பர் பெருமான்
நவக்கிரக துதி
வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள்கங்கை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனி பாம்பு இரண்டும் உடனே
ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே.
- திருஞானசம்பந்தர்
திருவிளக்குத் துதி
அன்னையே அருந்துணையே அருகிருந்து காருமம்மா
வந்த வினையகற்றி மகாபாக்யம் தாருமம்மா
தாயாகும் உந்தன் தாளடியில் சரணம் என்றேன்
மாதாவே உந்தன் மலரடியில் நான் பணிந்தேன்.
துளசியன்னை துதி
பச்சைப் பசுமையுள்ள துளசி நமஸ்தே
பரிமளிக்கும் மூலக் கொழுந்தே நமஸ்தே
அற்பப் பிறப்பைத் தவிர்ப்பாய் நமஸ்தே
அஷ்ட ஐஸ்வர்யம் அளிப்பாய் நமஸ்தே
ஹரியுடைய தேவி அழகி நமஸ்தே
வனமாலையுடன் மகிழ்வாய் நமஸ்தே
வைகுண்ட வாசியுங்களேன் மகிழ்வாய் நமஸ்தே !
- 689