Feed Item
Added article 

பல வருடங்கள் நாடக அனுபத்தோடு சினிமாவில் நடிக்க வந்தவர் என்.எஸ்.கிருஷ்ணன். மக்களுக்கு தேவையான நல்ல கருத்துக்களை, அறிவுரைகளை தனது நகைச்சுவை மூலம் சொன்னவர் இவர். இவரை மக்கள் கலைவாணர் என அழைத்தனர். யார் மனதையும் நோகடிக்காமல் எல்லோரும் ரசிக்கும்படி காமெடி செய்வது இவரின் பாணி.

மற்றவர்களுக்கு கஷ்டம் எனில் உடனே உதவ வேண்டும் என்கிற எம்.ஜி.ஆரின் எண்ணத்திற்கு வழிகாட்டி இவர்தான். ஏனெனில், தான் சம்பாதித்த பணத்தில் பெரும் பங்கு மற்றவர்களுக்கே கொடுத்தவர் என்.எஸ்.கிருஷ்ணன். சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தபோதே அவருக்கு எம்.ஜி.ஆரை தெரியும் என்பதால் அவர்தான் எம்.ஜி.ஆரை வழிநடத்தினார்.

கஷ்டம் என வருபவர்களுக்கு உதவ வேண்டும். நம்மால் முடிந்த உதவிகளை பிறருக்கு செய்ய வேண்டும் என எம்.ஜி.ஆரிடம் சொல்லி சொல்லி அவரை வளர்த்தவர்தான் என்.எஸ்.கிருஷ்ணன். எனவேதான், அவர்மீது மிகுந்த அன்பும் மரியாதையையும் எப்போதும் எம்.ஜி.ஆர் வைத்திருந்தார்.

நிறைய தானங்கள் செய்ததாலும், ஒரு கொலை வழக்கில் சிக்கி சிறை சென்றதாலும் சினிமாவில் நடிப்பதை நிறுத்தியதாலும் என்.எஸ்.கிருஷ்ணனுக்கு கடன் சுமை ஏற்பட்டது. ஒருசமயம், சென்னை ராயப்பேட்டை சண்முகமுதலி தெருவில் இருந்த தனது வீட்டை விற்பது என என்.எஸ்.கிருஷ்ணன் முடிவெடுத்தார்.

இந்த வீட்டை சிவாஜியிடம் விற்பதாக முடிவு செய்யப்பட்டு வாயளவில் ஒரு தொகையும் பேசப்பட்டது. பணம் இன்னும் கைமாறவில்லை. பத்திரமும் பதியப்படவில்லை. அப்போது மார்வாடி ஒருவர் சிவாஜி பேசிய தொகையை விட அதிகவிலைக்கு அந்த வீட்டை வாங்கிக்கொள்வதாக கூறியுள்ளார். கிருஷ்ணனுக்கு பணத்தேவை அதிகமாக இருந்ததால் ‘மார்வாடியிடமே வீட்டை விற்றுவிடுங்கள்’ என அவரின் நண்பர்கள் கூறியுள்ளனர்.

ஆனால், என்.எஸ்.கிருஷ்ணனுக்கு அதில் விருப்பமில்லை. ‘நான் பல வருடங்களாக வசிக்கும் வீடு இது. இந்த பக்கம் வரும்போது நாம வாழ்ந்த வீட்டை ஒரு மார்வாடிக்கு கொடுத்துட்டோமே என நினைத்தால் மனசு கஷ்டப்படும். ஆனா சிவாஜிக்கு விற்றால் ‘நம்ம வீட்டில் நம்ம தம்பி கணேசன்’ இருக்கார்னு மனசு சந்தோஷப்படும். வீட்டுகுள்ள போகவும் மனசு கூசாது’ என சொல்லி அந்த வீட்டை சிவாஜிக்கே விற்றாராம் என்.எஸ் கிருஷ்ணன்.

  • 144