உதய்ப்பூரைத் தலைநகராகக் கொண்டு *பூநாயகன் என்னும் மன்னன் ஆட்சி செய்து வந்தார். *தூதாராவ் என்றும் இவரைச் சொல்வதுண்டு. அவருடைய மனைவி *சந்திரமுகி. கிருஷ்ணபக்தியில் சிறந்த அவர்களுக்கு ராதையின் அம்சமாகப் பிறந்தவளே #மீராபாய். கிருஷ்ணரின் கதைகளையும் அவரது குழந்தைப் பருவத்தையும் கதைகளாகக் கேட்டறிந்த மீராபாயின் உள்ளத்தில் கிருஷ்ணரின் நினைப்பே எந்நேரமும் மனதை ஆக்கிரமித்திருந்தது.
மிகச் சிறு குழந்தையாக இருந்தபொழுதே தீவிர பக்தையாக விளங்கினாள் மீராபாய். எந்நேரமும் கிருஷ்ணரின் சிலையை அணைத்துக்கொண்டே விளையாடுவாள் மீராபாய். தூங்கும்போது கூட கிருஷ்ண விக்ரகத்தை அருகில் வைத்திருப்பாள் மீராபாய். கிருஷ்ணரை விட்டு கணநேரம் கூடப் பிரிய அவளுக்கு மனமில்லை.
நந்தா, முகுந்தா, நந்தலாலா, கிரிதாரி என்று கண்ணனின் பெயர்களை அவளது நா எந்நேரமும் உச்சரித்துக் கொண்டே இருக்கும். தன்னை ஆட்கொள்ள கண்ணனே கணவராக வருவார் என்று மீரா தீர்மானமாக இருந்தாள். இளமையில் சங்கீத ஞானம் பெற்றிருந்த மீராபாய், கிருஷ்ணர் மீது கீர்த்தனைகளைப் பாடினாள். தோழியர் சூழ்ந்திருக்கும் கன்னிமாடம் கிருஷ்ணரின் பஜனை மடமாகவே எந்நேரமும் காட்சியளித்தது.
எவ்வளவு தான் இறைவனின் மீது அளவற்ற பக்தி மீராபாய் கொண்டிருந்தாலும் பெண் என்பதால் அவளும் ஊர்மக்களின் பழிச்சொல்லுக்கு ஆளானாள். அவளது கிருஷ்ணபக்தியை உலகம் பழிக்கத் தொடங்கியது. இதனால் மகளுக்கு அறிவுரை கூறுமாறு கூறினார் மன்னர். தாயும், தந்தையும் எத்தனை அறிவுரைகளைக் கூறியும் மீராபாய் கிருஷ்ண பக்தியை விடவில்லை.
கிருஷ்ணரின் விக்கிரகங்களை வைத்துக் கொண்டிருப்பதையும், எந்நேரமும் அதை ஆராதிப்பதையும் அவளால் நிறுத்த முடியவில்லை. இதனால் மனம் வெறுப்படைந்த மன்னர், இப்படி நமக்கு ஒரு பெண் இருப்பதைவிட அவளைக் கொன்று விடுவதே நல்லது! என நினைக்கத் தொடங்கினார். எனவே மகளுக்கு விஷம் கொடுத்து கொல்லத் துணிந்தார். தாயிடம் விஷத்தைக் கொடுத்து மகளுக்கு கொடுக்கும்படி கூறினார் மன்னர் பூநாயகன்.
ஊராரின் பழிச்சொல்லுக்கு பயந்த அன்னையும் வேறு வழியின்றி விஷத்தை மீராபாய்க்குக் கொடுத்தாள். அது விஷம் என தெரிந்தும் மீராபாய் அதைச் சற்றும் தயக்கமின்றி கிருஷ்ணரின் விக்கிரகத்தை அணைத்தவாறே அந்த விஷத்தைப் பருகினாள்; பளிங்கு விக்ரகமான கிருஷ்ண விக்ரஹம் நீலநிறமாக மாறியது! ஆனால் மீராபாய்க்கு உடலில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இந்த அதிசயத்துக்குப் பிறகு தான் மீராவின் பக்தியை அனைவரும் எண்ணி வியந்தனர்.
மீராவின் பக்தி பற்றி அறிந்த மேவார் மன்னர் கும்பராணா, அவளைத் திருமணம் செய்து கொள்ள விரும்பினார். திருமணமே செய்யக்கூடாது என்று நினைத்திருந்த மீராபாய் எவ்வளவு தான் பெற்றோரின் வற்புறுத்தினாலும் திருமணத்திற்கு உடனே சம்மதிக்கவில்லை. திருமணத்திற்கு பிறகும் நீ கிருஷ்ணரை வழிபட யாதொரு தடையும் விதிக்க மாட்டேன்! என்று. வாக்குறுதி கொடுத்தார் #கும்பராணா. அவரது வாக்குறுதியின் பேரில் மீராபாய், கும்பராணாவை மணம் செய்து கொள்ள சம்மதித்தாள்.
இராஜபுதன மன்னரான மேவார் மன்னர் கும்பராணாவுக்கும், பக்த மீராபாய்க்கும் திருமணம் நடைபெற்றது. மனைவிக்கு கொடுத்த வாக்கின்படி அரண்மனை அந்தப்புரத்தில் கிருஷ்ணருக்குக் கோயில் கட்டிக் கொடுத்தார் மன்னர் கும்பராணா.
அன்னதான சத்திரங்கள், பஜனை மடங்கள் போன்றவற்றையும் மன்னர் கட்டினார்.
மீராபாய் திருமணத்திற்கு பிறகும் எந்நேரமும் கையில் சிப்ளா சட்டைகளோடும், பக்தர் கூட்டத்தோடும் எந்நேரமும் கண்ணன் மீது. பாடல்களைப் பாடித் துதித்தக் கொண்டிருந்தாள்.
பக்தியில் சிறந்த அவன், கீதகோவிந்த மகா காவியத்திற்கு #ரஸிகப்ரியா என்னும் உரையும், #சங்கீதராஜம் என்னும் லட்சண கிரந்தத்தையும் எழுதினாள்.
மீராவின் தெய்வீக வாழ்க்கை பற்றிய தகவல் நாடு முழுவதும் பரவியது. மிகவும் இனிய குரலில் தாள லயத்தோடு எந்நேரமும் கிருஷ்ணரின் பாடல்களைப் பாடும் மீராபாயைப் பற்றிய தகவல் முகலாய மன்னர் அக்பரின் காதுகளுக்கும் சென்றது. இராஜபுதன ராணியான மீராபாயின் தெய்வீக அழகும், பக்தியும், இனிய பாடல்களும் மொகலாய அரசர் அக்பரைக் கவர்ந்தது. அவளைப் பார்த்தே ஆக வேண்டும்! என்று நினைத்த அக்பர், மேவாருக்கு கிளம்பினார்.
மீராபாய் நாட்டு மக்களோடு சேர்ந்து கிருஷ்ணரின் மீது தெய்வீகக் கானங்களைப் பாடிக் கொண்டிருந்தாள். இசைமேதையான #தான்சேன் என்பவருடன், மாறுவேடத்தில் அக்பரும் அந்தப் பஜனையில் கலந்து கொண்டார். அன்று #ஏகாதசி_திதி என்பதால், மீரா நாள்முழுவதும் கிருஷ்ணரின் சந்நிதியில் பாடியபடியே இருந்தாள்.
நாட்டின் ராணி என்பதை மறந்து கீர்த்தனைகளைப் பாடிக் கொண்டே மக்களோடு மக்களாக மீராபாய் கிருஷ்ண பக்தியில் ஆழ்ந்து இருந்தாள். கிருஷ்ணரின் மீது தெய்வீக பாடல்களை மனம் உருகிப் பாடிக்கொண்டிருந்த மீராபாய் வெளி உலகத்தையே மறந்து கிருஷ்ணரோடு பக்தியில் ஒன்றியிருக்க, இவளது தெய்வீக கானத்தைக் கேட்டு மெய்மறந்த அக்பரும் விலை உயர்ந்த முத்துமாலை ஒன்றை பாடிக் கொண்டிருந்த மீராபாயின் முன் வைத்துவிட்டு கிளம்பினார்.
அக்பர், மீராபாயின் பஜனையில் கலந்து கொண்ட சம்பவம் மேவார் நாடு முழுக்கப் பரவி விட்டது. அவளது கணவர். கும்பராணாவுக்கும் இத் தகவல் எட்டியது. இதனால் கடும் கோபமடைந்த கும்பராணா, மீராபாயிடம் இதைப் பற்றி விசாரித்தார். அக்பரும், தான்சேனும் மேவார் வந்தது பற்றியும், காணிக்கையாக முத்துமாலை கொடுத்ததும் பற்றி என்னிடம் ஏன் சொல்லவில்லை? என்று ஆத்திரப்பட்டார் மன்னர்.
சுவாமி! உண்மையில் அவ்விருவர் மேவார் வந்ததும், முத்துமாலையைக் காணிக்கையாகத் தந்ததும் எனக்குத் தெரியாது. என் மனம் முழுக்க கிருஷ்ணபகவானே வியாபித்திருந்தான்! என்றாள் மீராபாய். தங்களோடு இருக்கும் நேரம் தவிர, எப்போதும் நான் கிருஷ்ண சேவையிலேயே பொழுதைக் கழிக்கிறேன் என்று மனம் கலங்கி பதிலளித்தாள்! மீராபாய்.
கணவன் தன் மீது சந்தேகப்பட்டு கேள்வி கேட்டு விட்டாரே? என்ற வேதனை மீராவை வாட்டியது. எனவே அன்று மாலை மீரா வழக்கம்போல், பஜனையில் கலந்து கொண்டு கிருஷ்ணரைப் பற்றி பாடி முடிந்ததும் கிருஷ்ணர் வாழ்ந்த பிருந்தாவனத்திற்குப் புறப்பட்டாள்! பக்த மீராபாய். மீரா! உன் பக்தியை உணராமல் பேசிவிட்டேன்! என்னை விட்டுப் போகாதே! அரண்மனைக்கு வந்துவிடு! என்று கணவர் அழைக்க, அரண்மனை வாழ்வை வெறுத்த மீரா, பிருந்தாவனத்திற்குச் சென்று விட்டாள்.
பிருந்தாவனத்தில் கிருஷ்ணர் சந்நிதியில் பெண்களை ஏறெடுத்தும் பார்க்காத #ரூபகோஸ்வாமி என்ற சிறந்த கிருஷ்ண பக்தரான மகாயோகி ஒருவர் இருந்தார். மீராபாய் அவரைச் சந்திக்க விரும்பினாள். ஆனால், கோஸ்வாமியின் சீடர்கள் அதற்கு அனுமதிக்கவில்லை. அவர்களிடம், கிருஷ்ணர் ஒருவரே புருஷோத்தமர்; நாமெல்லாம் பெண்களே. அவன் ஒருவனே பதி (#பரமாத்மா)நாமெல்லாம் பசுக்கள்(ஜீவாத்மா). கிருஷ்ணர் என்ற உத்தமனைத் தவிர வேறு யாரும் புருஷர்(ஆண்) இல்லை! என்று குருவிடம் சொல்லுங்கள், என்று பதிலளித்தாள்! பக்த மீராபாய்..
"பரமாத்மாவும், ஜீவாத்மாவும் ஒன்றே! உலக உயிர்கள் அனைத்தும் பசுக்களே! பரம்பொருளான ஸ்ரீகிருஷ்ணன் மட்டுமே பதி! அவரை அடைவதே நம் வாழ்வின் இலட்சியம்" என்பதை மிக அழகாக எடுத்துரைத்த மீராபாயின் தெய்வீகச் செய்தியை அறிந்த ரூபகோஸ்வாமி கண்ணனே நேரில் வந்து கீதையைச் சொன்னதைப்போல உணர்ந்து, மனம் தெளிந்து பக்த மீராவை வணங்கினார்.
மொகலாய அக்பரின் தேவையற்ற வருகையால் தங்கள் வாழ்வில் சிக்கல் ஏற்பட்டதை நினைத்து மேவார் மன்னர் எந்நேரமும் மனம் வருந்திக் கொண்டிருந்தார். எனவே அரண்மனை வாழ்வைத் துறந்த மீராபாயை எப்படியாவது மீண்டும் அரண்மனைக்கு அழைத்து வர நினைத்தார்
#மன்னர்_கும்பராணா. எனவே ராணாவும், ரகுநாத பட்டர் என்ற மந்திரியும் #பிருந்தாவனம் சென்று மீராவைச் சந்தித்து மேவாருக்கு அழைத்தனர்.
எனக்கு இனி உற்ற துணை கிரிதரகோபாலனாகிய கிருஷ்ணன் மட்டுமே. #ஶ்ரீகிருஷ்ணபக்தி மட்டுமே என் முழுநேரப்பணி; அரச வாழ்வில் எனக்கு ஒருநாளும் விருப்பம் இருந்ததில்லை. அரசியாக வாழ்வதை நான் விரும்பவில்லை! சாதாரணமான ஒரு கோபிகைப் பெண்ணைப் போல எந்நேரமும் கிருஷ்ணரை வழிபட்டுக் கொண்டிருப்பதே என் வாழ்வின் நோக்கம்! அப்படி வாழ அனுமதித்தால் மேவாருக்கு வருகிறேன்! என்று பதிலளித்தாள் பக்த மீராபாய்.
மன்னர் கும்பராணாவும் அதை ஏற்று அவளை அழைத்துச் சென்றார். ஒரு #கிருஷ்ணஜெயந்தியன்று, அவள் சிப்ளாக் கட்டைகளைக் கொண்டு தாளம் போட்டுக் கொண்டே வலக்கையால் தம்புராவை மீட்டியவாறு பஜனை பாடல்களை பாடிக் கொண்டிருந்தாள்.
தன்னை மறந்து கிருஷ்ணபக்தியில் மெய்மறந்து கிருஷ்ணரை நினைத்தவாறே உதடுகள் கிருஷ்ணநாமத்தைத் துதித்துக் கொண்டிருக்கக் கிருஷ்ண விக்ரகத்தை அணைத்தவாறே, கிருஷ்ணபரமாத்மாவோடு ஜோதி ரூபமாகக் கலந்தாள் பக்த மீராபாய்.
எத்தனையோ கிருஷ்ண பக்தர்கள் இருக்க, ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்த வடமதுராவில் கிருஷ்ணருக்கு எழுப்பப்பட்ட ஆலயத்தின் வெளிப்புறத்தில் மேலே பக்த மீராபாய் கையில் தம்புராவோடு பாடிக் கொண்டிருப்பது போன்ற சிலை அமைக்கப்பட்டுள்ளது. எத்தனையோ கிருஷ்ண பக்தர்கள் இருக்க, மீராபாய்க்கு மட்டுமே ஆலயத்தில் சிலை வைத்துள்ளனர் என்றால், அவளது கிருஷ்ண பக்தியின் மேன்மை நமக்குப் புலனாகும்.
கிருஷ்ண_பக்தி என்றால் முதலில் அனைவருக்கும் நினைவில் வருவது பக்த மீராபாய் மட்டுமே. கிருஷ்ணர் மட்டுமே பதி! உலக உயிர்கள் அனைத்தும் பசுக்களே! என்ற அரிய உபநிஷதக் கருத்தின் விளக்கமாக வாழ்ந்தவள் பக்த மீராபாய்.
- 421