Feed Item
Added a post 

கடன்கள் தீரவும், வறுமை நீங்கி சுபிட்சமான வாழ்க்கை கிடைத்திடவும் வணங்க வேண்டிய ஆலயம் "திருச்சேறை"

ஒருவர் முற்பிறவிகளில் செய்த பாவங்கள் அனைத்தும் அடுத்த்தடுத்த பிறவிகளில் தொடர்கிறது. முன்வினைப் பயன்கள் அனைத்தும் பிறவிக் கடன்களாகின்றன. முற்பிறவி தீவினைகள் நீங்கவும், இப் பிறவியின் கடன்கள் தீரவும், வறுமை நீங்கி சுபிட்சமான வாழ்க்கை கிடைத்திடவும் வணங்க வேண்டிய இறைவன், திருச்சேறையில் செந்நெறியப்பர் ஆலயத்தில், தனி சந்நதி கொண்டுள்ள " ரிண விமோஷன லிங்கேஸ்வரர் ". கும்பகோணம் - திருவாரூர் சாலையில் கும்பகோணத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது இத்தலம். ரிண விமோஷனரை 11 திங்கட்கிழமைகள் அபிஷேக, ஆராதனை செய்து வழிபட்டு, பின்னர் மகாலஷ்மியையும், ஜேஷ்டா தேவியையும், பைரவரையும் வணங்கினால் வழிபடுபவரது வறுமையும், கடன்களும் தீரும். இத் தலத்தில் துர்க்கை சிவ துர்க்கை, விஷ்ணு துர்க்கை, வைஷ்ணவி என மூன்று வடிவங்களாக அருளுகிறாள். மாசி மாதத்தில் 13,14,15 தேதிகளில் சூரியனது கிரணங்கள் இறைவன் மீதும், இறைவி மீதும் நேரடியாக விழுவது சிறப்பு.

இச்சந்நதியின் முன் நின்று கூறை உவந்தளித்த கோவேயென்று அன்பர் தொழச் சேறை உவந்திருந்த சிற்பரமே என மனமுருக 11 முறை பாராயணம் செய்தால் மிகச் சிறந்த பலன் கிடைக்கும்.

"பெருந் திரு இமவான் பெற்ற பெண் கொடி பிரிந்த பின்னை

வருந்து வான் தவங்கள் செய்ய, மா மணம் புணர்ந்து, மன்னும்

அருந் திருமேனி தன் பால் அங்கு ஒரு பாகம் ஆகத்

திருந்திட வைத்தார்-சேறைச் செந்நெறிச் செல்வனாரே."

திருச்சேறையிலுள்ள செந்நெறி என்னும் கோயிலில் உறைகின்ற செல்வராம் சிவபெருமான் தம்மைத் தாட்சாயணி பிரிந்த பிறகு, மிக்க செல்வத்தை உடைய, இமவான் பெற்ற பெண்மகளாய்த் தோன்றி மிக்க வருத்தத்தைத் தரும் தவங்களைச் செய்ய, பெருமான் அவளை திருமணம் செய்து கொண்டு, தன் உடம்பில் ஒரு பாகமாகக் கொண்டார்.

  • 801