Feed Item
·
Added a post

திருவாசகம்’ எழுதிய மாணிக்கவாசகர் முக்கியமான நான்கு நாயன்மார்களுள் ஒருவராவார். இவர் மதுரையில் வாழ்ந்து வந்தார். 'அரிமார்த்தன பாண்டியன்' என்னும் பாண்டிய மன்னனுக்கு அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். இவர் சிவபெருமானின் கட்டளையின் பேரில் சிவன் கோவில் ஒன்றை கட்டியுள்ளார். அதைப்பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.

ஒருமுறை மாணிக்கவாசகர் மன்னரின் உத்தரவின்படி குதிரை வாங்க திருப்பெருந்துறைக்கு வருகிறார். அப்போது சிவநாமம் ஒலிக்கும் சத்தம் கேட்டு அங்கே சென்று பார்க்கிறார். அங்கே குருந்த மரத்தடியில் குரு ஒருவர் அமர்ந்து சீடர்களுக்கு உபதேசம் அளித்துக் கொண்டிருக்கிறார்.

தன்னையும் ஏற்றுக்கொண்டு உபதேசம் அளிக்கும்படி மாணிக்க வாசகர் கேட்டுக்கொள்ள குருவும் ஒப்புக்கொண்டு அவரையும் ஏற்றுக்கொள்கிறார். குருவின் உபதேசத்தை கேட்டு சிவநிஷ்டையில் ஆழ்ந்து போகிறார் மாணிக்கவாசகர்.

சிவநிஷ்டையில் இருந்து கலைந்த மாணிக்கவாசகர் குரு இல்லாததைக் கண்டு சிவபெருமான்தான் தனக்கு குருவாக வந்தது என்பதை தெரிந்துக் கொள்கிறார். உள்ளம் உருக சிவப்பெருமானை நினைத்து பாடுகிறார். குதிரை வாங்க கொண்டு வந்த பணத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருப்பெருந்துறையில் உள்ள ஆவுடையார் கோவிலை கட்டி சிவதொண்டில் ஈடுபட தொடங்கினார்.

மாணிக்கவாசகருக்கு ஈசனே குருவாக வந்து உபதேசித்த இடம் என்பதால், இக்கோவிலுக்கு சென்று வழிப்படுவோருக்கு கல்வியில் சிறந்து விளங்குவதோடு மட்டுமில்லாமல் சிறந்த ஞானம் பெற்றவர்களாகவும் திகழ்வார்கள்.

திருப்பெருந்துறையில் உள்ள ஆவுடையார் கோவில் 275 பாடல் பெற்ற ஸ்தலங்களுள் ஒன்றாகும். இக்கோவிலை ஆவுடையார் கோவில் என்று அழைத்தாலும், 'ஆத்ம நந்தசுவாமிகள்' என்பதே இக்கோவிலின் பெயராகும். இக்கோவில் சிற்பங்களின் கலைநயத்துக்கு பெயர் பெற்றதாகும். சிதம்பரம் நடராஜர் கோவிலில் தங்கத்தால் ஆன தகடுகள் வைக்கப்பட்டிருப்பதுபோல இக்கோவிலில் செம்பினாலான தகடுகள் வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

சூரிய கிரகணம், சந்திர கிரண நாட்களில் கூட ஆறுகால பூஜைகள் இக்கோவிலில் சிறப்பாக நடைப்பெறுகிறது. ‘இறைவனுக்கு ஆதியும் இல்லை அந்தமும் இல்லை’ என்று நம்பப்படுகிறது. திருமஞ்சனம், திருவாதிரை போன்ற பண்டிகைகள் இக்கோவிலில் வெகு விமர்சியாக கொண்டாடப்படுகிறது. எனவே, இத்தகைய பெருமைகளையும், சிறப்புகளையும் கொண்ட இக்கோவிலுக்கு ஒருமுறை சென்று தரிசித்துவிட்டு வருவது நன்மை பயக்கும்.

கவிச்சக்கரவர்த்தி கம்பர் பெருமகனார் பாடிவைத்தது

கடல் கிழக்கு தெற்கு கரைபெரு வெள்ளாறு

குடதிசையில் கோட்டைக் கரையாம் - வடதிசையில்

ஏனாட்டுப் பண்ணை இருபத்து நாற்காதம்

சோனாட்டிற் கெல்லையெனச் சொல்

என்றும்

வெள்ளா றதுவடக்காம் மேற்குப் பெருவெளியாய்

தெள்ளார் புனற்கன்னி தெற்காகும் - உள்ளார

ஆண்ட கடல் கிழக்காம் ஐப்பத் தறுகாதம்

பாண்டிநாட் டெல்லைப் பதி

என்றும்

கவிச்சக்கரவர்த்தி கம்பர் பெருமகனார் பாடிவைத்த தெற்கு கரை பெரு வெள்ளாறு வெள்ளாறு வடக்காம் என்று வருகின்ற சோழ நாட்டின் தெற்கு எல்லையாகவும் பாண்டிய நாட்டின் வடக்கு எல்லையாகவும் இருந்து சிறப்புப் பெற்ற அந்த வெள்ளாறு இன்றளவும் குன்றாச் சிறப்போடு விளங்குகிறது.

தமிழகத்திலுள்ள ஆலயங்கள் எல்லாவற்றிலுமே உருவ வழிபாடுதான் நடைபெற்று வருகின்றன. ஆனால் இந்த ஆத்மநாதர் ஆலயத்தில் மட்டுந்தான் அருவ வழிபாடு நடைபெற்று வருகிறது. மூலஸ்தானத்தில் எந்த விதச் சிலையும் கிடையாது. அப்படிப் பார்த்தாலும் இது மற்ற கோவில்களில் அடங்காத கோயில் என்பது சொல்லாமலே விளங்கும்.

இதே மண்டபத்தில் 10-15 வளையங்கள் கொண்ட ஒரே கல்லிலான கற்சங்கிலி செதுக்கப்பட்டு உயரத்தில் பொறுத்தித் தொங்க விடப்பட்டுள்ளது.

இதே போல இக்கோயிலின் சிறப்புக்களைக் கூறத்தலைப்பட்டால்

உருவம் இல்லை

கொடி மரம் இல்லை

பலி பீடம் இல்லை

நந்தி இல்லை

இந்தக் கோயிலிலே மற்ற சிவாலயங்களில் இருப்பது போல கொடிமரம் இல்லை. பலி பீடமும் இல்லை. நந்தியும் இல்லை. சுவாமிக்கு உருவமும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் இங்கு வருகின்ற பக்தர்களுக்கு மற்ற கோயில்களைப் போல தீப ஆராதனையினைத் தொட்டு வணங்க அனுமதிப்பதும் இல்லை. மாணிக்கவாசகர் சோதியிலே கலந்துள்ளார் என்பதாலேயே தீபம் தருவதில்லை.

இந்தக் கோயிலுக்குள் வேடுவச்சி எனப்படும் மலைக்குறத்தியின் சிலை ஒன்று அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஓலையினால் செய்யப்பட்டது போன்ற ஒரு கூடையினை இடுப்பில் வைத்து கையில் இடுக்கிக் கொண்டு குறி சொல்ல வருகின்ற குறத்தி போல அமைந்துள்ளது அச் சிலை.

இந்தச் சிலையை இந்தக் கோயிலின் செக் போஸ்ட் என்று சொன்னால் கூட பொருந்தும். இந்தச் சிலையை யார் பார்த்தாலும் பார்த்தவர்கள் அந்த இடத்தை விட்டு எளிதில் அகல மாட்டார்கள். தன்னிலை மறந்து அந்தச் சிலையையே சுற்றி வருவார்கள். தோள் கண்டார் தோளே கண்டார் என்று கம்பர் கூறியதைப் போல இந்த சிலை அழகில் மயங்கியவர்கள் ஆடைகண்டார் ஆடையே கண்டார் கூடை கண்டார் கூடையே கண்டார் என்று அச்சிலையின் ஒவ்வொரு அங்குலத்தையும் ரசிப்பதிலேயே மனம் பறிகொடுப்பார்.

1000 ஆண்டுகளுக்கு முந்திய ஓலைச்சுவடி

இந்த ஆவுடையார்கோயில் ஆத்மநாதர் ஆலயத்தில் 1000 ஆண்டுகளுக்கு முந்திய திருவாசகம் மற்றும் திருக்கோவையார் ஓலைச்சுவடிகள் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

  • 132