யாழ் போதனா வைத்தியசாலையில் இருந்து திடீரென வைத்திய நிபுணர் ஒருவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
யாழ் போதனா வைத்தியசாலையின் பல் முகம் சீராக்கல் பிரிவின் (Orthodontic) விசேட வைத்திய நிபுணர் அனந்தசயனன் காயத்ரி திடீரென மஹியங்கனை ஆதார வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவிக்கையில் -
சுகாதார பணிப்பாளர் நாயகத்தின் உத்தரவுக்கமையவே மஹியங்கனை ஆதார வைத்தியசாலைக்கு அவர் விடுவிக்கப்பட்டுள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் - குறித்த வைத்திய நிபுணருக்கு மாற்றீடாக வேரொரு வைத்திய நிபுணர் நியமிக்கப்பட்டுள்ளாரா? .என கேட்டதற்கு
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் இருக்கும் வைத்திய நிபுணர் ஒருவர் இங்கு இடமாற்றம் பெற்று வருவதாகவுள்ளது. அதனையம் என்னால் உறுதிபட தெரிவிக்க முடியாதுள்ளது.
இந்நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் மிகப்பெரும் நோயாளர்கள் எண்ணிக்கை காணப்படும் பொழுது ஒரு மாற்று வைத்திய நிபுணர் ஒருவர் கடமையை பொறுப்பேற்காது எவ்வாறு இவ் வைத்திய நிபுணரை உங்களால் விடுவிக்க முடிந்தது ? என கேட்டதற்கு –
நான் இந்த வைத்தியசாலையின் அதிகாரி மாத்திரமே. எனக்கு மேல் பல உயர் அதிகாரிகள் இருக்கின்றார்கள். அவர்களுக்கு இங்குள்ள நிலைமை தொடர்பில் தெளிவுபடுத்தியுள்ளேன். இருந்தபோதிலும் அவர்களின் உத்தரவின் பேரிலேயே நான் எனது கடமையைச் செய்ய வேண்டி இருப்பதால் குறித்த வைத்திய நிபுணரை விடுவித்ததாகவும் தெரிவித்தார்.
இது தொடர்பில் நாம் ஆராய்ந்த போது - யாழ் போதனா வைத்தியசாலையில் 2024 ஆண்டுமுதல் பல்முக சீராக்கல் (Orthodontic) வைத்திய நிபுணராக ஒரே ஒரு வைத்திய நிபுணரே கடமையாற்றி வந்துள்ளார்.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மாவட்ட மக்கள் இவ்வைத்தியசாலையின் ஊடாகவே பல்முகம் சீராக்கல்(Orthodontic) சிகிச்சையினை பெற்று வந்துள்ளார்கள்.
இதேநேரம் இங்கு பல ஆயிரக்கணக்கான நோயாளர்கள் நாளாந்தம் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவ்விடயத்தை கவனத்தில் கொள்ளாது குறித்த வைத்திய நிபுணரை இடமாற்றம் செய்தமையானது இங்கு சிகிச்சை பெற்று வருகின்ற நோயாளர்களை பெரும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது. எனவே இது தொடர்பில் சம்பந்தப்பட்டவர்கள் உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
அல்லது பாதிக்கப்பட்ட நோயாளர்கள் தனியார் மருத்துவமனையை நோக்கி தள்ளப்படுகின்ற ஒரு நிலைமையே காணப்படும். இதனூடாக நோயாளர்கள் பெரும் அசெளகரியங்களுக்கும் மன உளைச்சல்களுக்கும் நிதி நெருக்கடிக்கும் ஆளாகக் கூடிய வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.
மேலும் இவ் இடமாற்ற பின்னணியில் ஓய்வுபெற்ற முன்னாள் வைத்திய நிபுணர் ஒருவர் தொடர்புபட்டுள்ளதாகவும் அவர் தற்பொழுது தனியார் சிகிச்சை நிலையமொன்றை நடத்திவருகின்றார் என்பதுடன் அவர் வைத்தியசாலையில் கடமையாற்றிய காலப்பகுதியில் பல்வேறுபட்ட முறைகேடுகள் தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இது தொடர்பில் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் கடும் விசனம் தெரிவித்துள்ளார்கள்.
எனவே இதனை கவனத்தில் கொண்டு உடனடியாக உரிய வைத்திய நிபுணர் ஒருவரை நியமித்து சேவையினை வழங்குவதற்கு சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் வட மாகாணத்தில் உள்ள தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை மற்றும் மன்னார் பொது வைத்தியசாலை என்பவற்றில் இருக்க வேண்டிய விசேட வைத்திய நிபுணர்களுக்கான (Consultant Orthodontist)ஆளணி வெற்றிடங்கள் சுகாதார அமைச்சினால் ஏற்கனவே 2023 ஆம் ஆண்டு வெறிதாக்கப்பட்டுள்ளதுடன் அந்த சிகிச்சை நிலையங்களும் ஏலவே மூடப்பட்டுள்ளது இவ் இரண்டு சிகிச்சை நிலையங்களும் மூடப்பட்டுள்ளமைக்கான அடிப்படை காரணங்கள் என்ன என்பது தொடர்பில் இதுவரைக்கும் அறிவிக்கப்படாதுள்ளது குறிப்பிடத்தக்கது.
அத்துடன் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாண, கிளிநொச்சி மாவட்ட நோயாளர்கள் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அவர்களுக்கு மகஜர் ஒன்றை கையளித்துள்ளார்கள்.
இன்றும் வைத்திய நிபுணரால் பார்வையிட வேண்டிய நோயாளர்கள் வைத்திய நிபுணர் இன்மையினால் மறு திகதி வழங்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
- 664