இரண்டாம் கட்ட போர் நிறுத்தம் தோல்வியடைந்தால், ஹமாஸுக்கு எதிரான போரை மீண்டும் ஆரம்பிப்பதற்கு தமது நாடு தயார் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காசா போர் நிறுத்த ஒப்பந்தம் அந்த நாட்டு நேரப்படி இன்று காலை 8.30 இற்கு ஆரம்பமானது. இந்த நிலையிலேயே, ஊடகங்களுக்கு கருத்துரைத்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்த விடயத்தைத் தெரிவித்ததாகச் சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
போர் நிறுத்தம் தற்காலிகமானது எனவும், காசா மீதான தாக்குதல்களை மீண்டும் தொடருவதற்கான உரிமையை இஸ்ரேல் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஹமாஸால் விடுவிக்கப்பட வேண்டிய பணயக் கைதிகளின் பெயர் பட்டியலைப் பெறும் வரை ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது எனவும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், ஒப்பந்த மீறல்களை இஸ்ரேல் பொறுத்துக் கொள்ளாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஹமாஸால் விடுவிக்கப்படவுள்ள 33 பணயக் கைதிகளின் பெயர் பட்டியல் ஏற்கனவே இஸ்ரேலிய ஊடகங்களால் வெளியிடப்பட்டுள்ள போதிலும் குறித்த பட்டியல் அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்படவில்லை.
அதேநேரம் இன்றைய தினம் விடுவிக்கப்படவுள்ள மூன்று பணயக் கைதிகளின் பெயர்கள் இதுவரை தங்களுக்குக் கிடைக்கவில்லை என இஸ்ரேலிய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
000
- 617