விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்துாரின் அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த ஒருவர், குற்றாலத்தில் இருந்த மகான் ஒருவரை, தொடர்ந்து பல நாட்கள் தரிசித்து வந்தார். தரிசிப்பது என்றால், ஏதோ நெருங்கிப் பழகி அல்ல. நாள்தோறும் வருவார்; மகான் தங்கியிருந்த மடாலயத்தின் முன் நின்று, அவரை தரிசிப்பார்; அவ்வளவு தான்.
ஒருநாள், மடாலயத்தின் உள்ளே அமர்ந்திருந்த மகான், அடிக்கடி மடாலயத்தின் முன் வந்து நிற்பவரை பற்றிய தகவலை, ஞானதிருஷ்டியில் அறிந்தார். உடனே, வெளியில் வந்து, ‘யார் நீங்கள்…’ என்று, சைகையில் கேட்டார்.
‘தங்களைத் தரிசித்து, சில தகவல்களை சொல்லும் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்தே, இவ்வளவு நாளும் காத்திருந்தேன்…’ என துவங்கி, தான் வந்த காரணத்தை விவரிக்கத் துவங்கினார்…
‘என் வீட்டில், புதையல் இருக்கிறது. அது தெரிந்த நான், அதை எடுப்பதற்கு பல வழிகளிலும் முயன்றேன். ஒவ்வொரு முறை தோண்டும்போதும், கைக்கு அகப்படும்படியாக இருக்கும், நெருங்கியதும், கீழே போய் விடுகிறது.
‘ஜோதிடர்கள் பலரிடம் ஆலோசனை கேட்டேன். ‘இந்த சொத்தை அடைய விரும்புகிறவன், திருக்குற்றாலத்தில் இருக்கும் மஹா மவுனியின் அருளைப் பெற்றால் கிடைக்கும்…’ என்ற தகவல் கிடைத்தது. அதற்காகத்தான், இங்கே வந்து போய்க் கொண்டிருக்கிறேன்.
‘தங்களை, என் ஊருக்கு அழைத்துப் போவதே, என் எண்ணம். என்னுடன் வந்து, அப்புதையலை அடைய, தாங்கள் தான் உதவ வேண்டும். அப்புதையல் எனக்கு வேண்டாம். அதை முழுவதும் தர்ம கைங்கரியங்களுக்காக, தங்களிடமே அர்ப்பணம் செய்து விடுகிறேன்.
‘தாங்களாகப் பார்த்து, ஏதோ கொஞ்சம் கொடுத்து அருள் செய்தால் போதும்…’ என்று, மகானின் திருவடிகளில் விழுந்து வணங்கினார்.
பொறுமையாகக் கேட்ட மகான், சிறிதுநேரம் நிஷ்டையில் அமர்ந்தார்; பின், ‘மூன்று மாதம் கழித்து வாருங்கள்…’ என்று, எழுதி காட்டினார்.
புதையலுக்காக வந்தவரும், ‘இவ்வளவு காலம் பொறுத்தோம். இன்னும் மூன்று மாதம் தானே…’ என்று திரும்பி விட்டார்.
அவர் போனதும், தன்னைச் சுற்றியிருந்த அடியார்களிடம், ‘புதையலை பற்றி அவர் சொன்னது உண்மை. ஆனால், அது மிகவும் கொடுமையான, பலவிதங்களில் களவுகளும், கொலைகளும் செய்து சேகரித்து, புதைக்கப்பட்ட பாவப் பொருள்…’ என, எழுதி காட்டினார், மகான்.
‘அப்படியானால், தாங்கள் ஏன் அவரை, மூன்று மாதம் கழித்து வரச் சொன்னீர்…’ எனக் கேட்டனர், அடியார்கள்.
‘எப்போதும், நடக்கப் போகும் விஷயங்களை, மறைத்து தான் சொல்ல வேண்டும். அது மட்டுமல்ல, அவருக்கு, இன்னும் மூன்று மாதத்திற்குள், ஆயுள் முடியப் போகிறது. அந்தப் புதையல் கிடைக்கும் பாக்கியம், அவருக்கு இல்லை…’ என, மீண்டும், எழுதி காட்டினார், மகான்.
அந்த மகான், திருக் குற்றாலம் ஸ்ரீ மவுனானந்த சுவாமிகள்; தீவிர மவுனம் அனுஷ்டித்து வந்தவர்.
எவ்வளவு பெரிய இருட்டாக இருந்தாலும், அதனால், நெருப்பைத் தீண்ட முடியாது; ஓடித்தான் ஆக வேண்டும். அதுபோல, இப்படிப்பட்ட மகான்களிடமெல்லாம், எந்தப் பாவமும் நெருங்க முடியாது. மேலும், எவ்வளவு திட சித்தம் இருந்தால், கெட்ட வழியில் வந்த பொருள் என ஒதுக்கினாரே… எவ்வளவு உயர்ந்தவர்.
கிடைக்கிறது என்பதற்காக, முறையற்ற வழிகளில் வந்த பொருளை, எந்த மகானும் ஏற்க மாட்டார்கள்.
நாம் தான், ‘அட போப்பா… நாய் விற்ற காசு, குரைக்கவா போகிறது…’ என்று விபரம் தெரியாமல் பேசிக் கொண்டிருக்கிறோம்.
- 127