ஒரு முறை ஒரு நாட்டு அரசன் தனது மந்திரியை அழைத்து சொன்னான்:
"இதோ பார் மந்திரியாரே! நான் இவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்தின் அரசனாக இருக்கின்றேன். எனக்கு இல்லை என்று சொல்ல எதுவும் இல்லை. இருந்தும், நான் மன நிம்மதியாக இல்லை. மனக்குழப்பம் என்னை வாட்டி வதைக்கிறது. சலிப்பும் வெறுப்பும் என்னை பின்தொடர்கிறது. ஆனால், எதுவும் இல்லாத என் சேவகன் இருக்கிறானே, அவன் என்னை விட வாழ்வில் மனமகிழ்ச்சியுடன் இருக்கக் காணுகின்றேன். ஆனந்தத்தில் அவன் மிதக்கிறான். பார்க்க பொறாமையாக இருக்கிறது' என்று ஆதங்கப்பட்டான்.
உடனே அந்த மந்திரி: அரசே! அந்த
சேவகனிடம் 99 ஆட்டத்தை பரீட்சித்துப் பாருங்களேன்' என்றான்.
அதற்கு அரசன்: அது என்ன 99 ஆட்டம்? புதுமையாக இருக்கிறதே!" என்றான்.
அதற்கு மந்திரி சொன்னான்: 99 ஆட்டம் என்பது 99 பொற்காசுகளை எடுத்து ஒரு பையில் போட்டு சேவகனின் வீட்டு வாசலில் வைத்துவிடுங்கள். "100 பொற்காசுள் உங்களுக்கான அன்புப் பரிசு " என்று அதிலே எழுதி வைத்துவிட்டு வந்துவிடுங்கள்.
பின்பு என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பாருங்கள்!" என்றான். அப்படியே அரசனும் செய்துவிட்டு அவதானித்தான். பொற்காசுள் நிறைந்த பையைக் கண்ட சேவகன் ஆனந்தத்தில் மிதந்தான். பணப்பையை எடுத்து எண்ணிப்பார்த்தான். ஒரு காசு குறைவாக இருந்தது. ' கட்டாயம் ஒரு பொற்காசு வெளியில் எங்காவது விழுந்திருக்க வேண்டும்' என மனதில் நினைத்துக் கொண்டான். அதன்படி அவனும் அவனது மனைவி பிள்ளைகுட்டிகள் என அனைவரும் தவறிய அந்த ஒரு பொன்நாணயத்தை தேட ஆரம்பித்தனர். தேடித் தேடி இரவும் முடிந்து பொழுதும் விடிந்தது, தேடல் மாத்திரம் முடிந்தபாடில்லை. கோபமடைந்த சேவகன் அவர்கள் மீது எரிந்துவிழத் தொடங்கினான். அவன் மனமகிழ்ச்சி மனவருத்தமாக மாறியது.
மறுநாள் சேவகன் விரக்தியடைந்தவனாக காணப்பட்டான். புன்முறுவல் பூத்திருந்த அவனது முகம் சுடுமூஞ்சாக மாறியிருந்தது. தன்னைத்தானே திட்டிக் கொண்டிருந்தான்.
இதையெல்லாம் ஓரமாக நின்று அவதானித்துக் கொண்டிருந்த அரசனுக்கு 99 ஆட்டம் என்றால் என்னவென்று புரிந்தது போய்விட்டது.
அதுதான் ஜனங்களே!அந்த எல்லாம் வல்ல இறைவன் நமக்கு வழங்கிய 99 வகையான செளபாக்கியங்களோடு இருப்பதை நாம் மறந்துவிடுகிறோம்.
வாழ்வில் நமக்கு கிடைக்காத அந்த ஏதொ ஒரே ஒரு பாக்கியத்திற்காக நிம்மதியை இழந்து மனவருத்தத்தோடு வாழ்ந்து வருகிறோம். ஏங்கித் தவிக்கிறோம்.
கைவசம் இருக்கும் பல சுகங்களை மறந்து இல்லாத ஒரு சுகத்துக்காக ஏங்குகின்றோம், மனக்கவலையோடு நாம் வாழ்ந்து வருகின்றோம்.
- 154