நான் தூக்கத்தில் மன்னன். பாழுங்காட்டில் துண்டை விரித்துப்படுத்தால்கூட, நான் சுலபமாகத் தூங்கிவிடுவேன். அதனால் நான் இழந்தது கொஞ்சமா? கேலிக்கு ஆளானது கொஞ்சமா?
இரவில் சாப்பிட்டுவிட்டுக் காரில் ஏறிப்படுத்தால், காலையில் திருச்சி வரும்போதுதான் விழிப்பேன்.
அதிலே சிந்தனைக்கு லாபம் இருந்ததே தவிர, வந்த லாபம் போகவும் செய்தது.
கும்பகர்ணன் மட்டும் தூக்கத்தைக் குறைத்துக் கொண்டிருந்தால்,
ஸ்ரீராமனுடைய சைன்யம் சேதுக்கடலைத் தாண்டியிருக்காது என்பார்கள்.
இரவும், பகலும் தூங்காமல் விழித்துக்கொண்டே நம்மைக் காவல் காக்கிறாள் மதுரை மீனாட்சி.
அவளுக்கு மீனாட்சி என்ற பெயர் வந்ததற்குக் காரணமே அதுதான் என்கிறார் வாரியார் சுவாமிகள்.
மீன்போல் விழித்திருந்து அவள் ஆட்சி செய்வதால் அவள் மீனாட்சி. இதை எனது குருநாதர் வாரியார் சுவாமிகள் அழகாகச் சொல்லுவார்:
“ஓடும் ரயிலில் இரண்டாயிரம் பேர் தூங்குகிறோம். இன்ஜின் டிரைவர் விழித்துக் கொண்டிருக்கிறார். அவரும் தூங்கிவிட்டால் இரண்டாயிரம் பேரும் என்ன ஆவது?”
“நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கெடுத்தவர்கள் நாட்டைக் கெடுத்ததுடன் தாமும் கேட்டார்” என்று தம்பி கல்யாணசுந்தரம் பாடியிருக்கிறார்.
தூக்கம் ஒருவகை லயம், ஒரு வகைச் சுகம் ஈடு இணையில்லாத போகம்!
நல்ல தூக்கம் ஒருவனுக்கு வருவது, அவன் செய்த தவம், அவன் பெற்ற வாரம்.. ஆனால், கடமைகளை மறக்கடிக்கும் தூக்கம் போகமல்ல – ரோகம்.
காலை ஆறு மணிக்குத் திருமணம். மாப்பிள்ளை ஏழு மணிக்கு எழுந்திருந்தால், நேரம் காத்திருக்குமா? ஆகவே எந்தப் போகமும் அளவுக்குரியது.
ஒரு குறிப்பிட்ட வயது வரையில், குழந்தைக்குத் தூக்கம்தான் வளர்ச்சி.
அந்த வயதுக்குப்பின், விழிப்புத்தான் வளர்ச்சி. நன்றாக வளர்ந்து, காக்கவேண்டியவர்களைக் காத்து, சேர்க்க வேண்டியவற்றைச் சேர்த்த பிற்பாடு தூக்கம் ஒரு யோகம்.
காக்கவேண்டிய காலத்தில் தூங்குவதே ரோகம். ஆனால், துர்ப்பாக்கியவசமாகத் தள்ளாடும் வயதில் எல்லாக் கடமைகளையும் முடித்துவிட்டுத் தூங்கப் போகிறவனுக்குத் தூக்கம் வராது.
ஒரு குறிப்பிட்ட வயதுக்குமேல் தூக்கம் குறையத் தொடங்கும்.
‘ஐயோ தூங்கமுடியவில்லையே’ என்று கவலைப்பட்டுப் பயனில்லை.
‘சுகபோகத்தை அனுபவிக்க வேண்டிய வயதில் அனுபவித்துத் தீர்த்துவிட்டோம்’ அன்று ஆறுதலடைவதைத் தவிர வேறு வழியில்லை.
திருடர் பயம் நிறைந்த இடத்தில், விழுந்து விழுந்து தூங்கினால் நஷ்டம்.
ஆபத்தான நேரங்களில், தூக்கத்தை அறவே விளக்காவிட்டால் கஷ்டம்.
தவறினால், ஒரு போகம் பல ரோகங்களுக்குக் காரணமாகிவிடும்.
ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம்தான் தூங்குவான் அடால்ஃப் ஹிட்லர். அது அவனுக்குப் ஒதுமானதாக இருந்தது. மளமளவென்று வெற்றியையும் தேடித் தந்தது.
ஒருநாள் நிம்மதியாகத் தூங்க விரும்பி, இரண்டு மாத்திரைகளைப் போட்டுக்கொண்டு தூங்கினான். அன்றைக்குத்தான், ‘நார்மண்டி முற்றுகை’ நடந்தது. ஐசன்ஹோவரும், சர்ச்சிலும் ஆயிரக்கணக்கான கப்பல்களைப் பிரஞ்சு நாட்டு ‘நார்மண்டி’ கடற்கரைக்கு அனுப்பி வெற்றி பெற்றுவிட்டார்கள்.
ஹிட்லரின் தோல்விக்கு அமெரிக்காவின் அணுகுண்டா காரணம்? இல்லை, ஹிட்லரின் தூக்கமே காரணம்! ஆகவே அனுபவத்தின் காரணமாகச் சொல்கிறேன்:
“அனுபவிப்பதை அளவோடு அனுபவியுங்கள்.
உண்பதில் நிதானம்... உறங்குவதில் நிதானம் – தீயன பழகாமல் இருத்தல் – அளவான வாழ்க்கையிலேயே அதிகமாக உற்சாகத்தைக் காணுதல் – இப்படி வாழ்ந்தால் இறைவன் ஒத்துழைப்பான்.
– கண்ணதாசனின், “போகம், ரோகம், யோகம்”
- 1254