Feed Item
·
Added a news

ஆழிப்பேரலை ஏற்பட்டு 20 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் உயிரிழந்த மக்களை நினைவுகூரும் வகையில் நாடு முழுவதும் இன்று முற்பகல் 9.25 முதல் 9.27 வரை இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது

முன்பதாக 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி ஏற்பட்ட ஆழிப்பேரலையில் சிக்குண்டு இலங்கைத் தீவில் 35,000 அதிகமானோர் உயிரிழந்ததுடன், ஐயாயிரத்துக்கும் அதிகமானோர் காணாமல் போயிருந்தனர். இலங்கை எதிர்கொண்ட பாரிய இயற்கை அனர்த்தமாக இது வரலாற்றில் பதிவாகியுள்ளது

அதன்படி, 2005 ஆம் ஆண்டு 26 ஆம் திகதி முதல் தேசிய பாதுகாப்பு தினம் அனுட்டிக்கப்பட்டு வருகிறது.

அத்துடன், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஆழிப்பேரலையில் உயிர் நீத்த உறவுகளை நினைவு கூர்ந்து வருகின்றனர்.

இதன்படி, காலி ஆழிப்பேரலை நினைவுத்தூபிக்கு முன்பாக தேசிய பாதுகாப்பு தினம் அனுட்டிக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்ச்சியில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் குழுவொன்றும் கலந்துகொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், சுனாமி பேபி என்றழைக்கப்படும் அபிலாஷ் கல்முனையில் உள்ள அவரது இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவுத்தூபிக்கு முன்பாக ஆழிப்பேரலையால் உயிர் நீத்த உறவுகளுக்காக தமது அஞ்சலியை செலுத்தியுள்ளார்.

இதேவேளை, மட்டக்களப்பின் பல பகுதிகளிலும் பொதுமக்கள் ஆழிப்பேரலையால் உயிரிழந்த உறவுகளின் ஆத்ம சாந்திக்காக பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டதுடன், சுடர் ஏற்றப்பட்டும் வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

மேலும் ஆழிப்பேரலையால் உயிரிழந்தவர்களை நினைவு கூறும் வகையில் இன்றைய தினம் மன்னார் மாவட்டச் செயலகத்திலும் தேசிய பாதுகாப்பு தினம் அனுட்டிக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் மாவட்ட உதவி பணிப்பாளர் கே.திலீபன் தலைமையில் இந்த நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, உடுத்துறை பகுதியிலும் ஆழிப்பேரலை நினைவேந்தல் நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, மூதூர் பிரதேச செயலக ஒருங்கிணைப்பில் பொதுமக்களின் பங்களிப்புடன் இன்று மூதூர் இறங்குதுறைமுக வாசலில் ஆழிப்பேரலை நினைவுத் தூபி திறந்து வைக்கப்பட்டது  இதன்போது, உயிர்நீத்தவர்களுக்கான அஞ்சலியும் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், ஹட்டன் உள்ளிட்ட மலையகத்தின் பல பகுதிகளிலும் ஆழிப்பேரலையினால் உயிர்நீத்தவர்களுக்கான ஆத்ம சாந்திக்காக பொதுமக்கள் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டதுடன், சுடர் ஏற்றப்பட்டும் வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதது

000

  • 533