Feed Item
·
Added a post

ஓர் ஊரில் முட்டாள் ஒருவன் இருந்தான். அந்த ஊர் மக்கள் எல்லாருக்கும் விளையாட்டுப் பொருளே அவன்தான்.அவனிடம் இரண்டு துணிகளைக் கொடுத்துப் போட்டுவரச் சொன்னால், காலில் அணிய வேண்டிய துணியைச் சட்டை போல் மேலே அணிந்து இருப்பான்.மேலே அணிய வேண்டிய துணியை எப்படியாவது காலுக்குள் நுழைத்து அணிந்து வருவான். அந்தக் கோலத்தில் அவனைப் பார்ப்பவர்கள் யாராக இருந்தாலும் சிரித்து விடுவர்.

அந்த ஊருக்கு விருந்தினர் யார் வந்தாலும் முதலில் அவனை வரவழைத்து, இவனைப் போன்ற முட்டாள் உங்கள் ஊரில் உண்டா? என்று கேட்பர்.

ஒரு வீட்டிற்கு வெளியூரிலிருந்து நண்பர் ஒருவர் வந்தார். விருந்து முடிந்தது.

இந்த ஊரில் முட்டாள் ஒருவன் இருக்கிறான். அவனை வர வழைத்தால், நம் பொழுது இனிதாகப் போகும், என்று சென்ன வீட்டுக்காரன்... அவனை வரவழைக்க ஆள் அனுப்பினான்.

சிறிது நேரத்திற்குள் அந்த முட்டாள் அங்கு வந்து சேர்ந்தான். வீட்டுக்காரன் அவனிடம் தன் இரண்டு கைகளையும் நீட்டி, நன்றாகப் பார்... ஒரு கையில் ஐந்து ரூபாய் நாணயம் உள்ளது. இன்னொன்றில், ஒரு ரூபாய் நாணயம் உள்ளது.உனக்கு எது தேவையோ எடுத்துக் கொள்,என்றான்.முட்டாள் இரண்டு கைகளையும் மாறி மாறிப் பார்த்தான்.

ஆ! ஒரு ரூபாய் பெரிய காசு! என்று சொல்லிக் கொண்டே ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்துக் கொண்டான்.

இவனைப் போன்ற முட்டாளை நீங்கள் எங்கேயாவது பார்த்ததுண்டா? ஒரு ரூபாயை விட ஐந்து ரூபாய் எவ்வளவு மதிப்புள்ளது ? சின்னக்காசை எடுத்து விட்டு இவ்வளவு கூத்தாடுகின்றானே?என்று சொன்னான் வீட்டுக்காரன்.

நண்பருக்கும், முட்டாளுடன், விளையாட வேண்டும் போல இருந்தது. தன் இரண்டு கைகளையும் அவன் முன் நீட்டி, இதில், ஒன்றில் வைர மோதிரம் உள்ளது. இன்னொன்றில் வெறும் ஐம்பது காசு உள்ளது. ஏதாவது ஒன்றை எடுத்துக் கொள், என்றார் அவர்.

முட்டாள் இரண்டு கைகளையும் மாறி பார்த்துச் சிந்தித்தான். ஐம்பது காசைத்தான் கடைசியாக எடுத்தான்.

இந்த முட்டாளோடு நீங்கள் பேசிக் கொண்டு இருங்கள். எனக்கு வேலை இருக்கிறது, என்று உள்ளே சென்றார் வீட்டுக்காரர்.ஏன் முட்டாள்தனமாக நடக்கிறாய்? வைர மோதிரம் என்ன மதிப்புடையது?அதை விட்டுவிட்டு வெறும் ஐம்பது காசை எடுத்துக் கொண்டாயே... இனிமேலாவது சிந்தித்து, அறிவுள்ளவனாக நடந்து கொள், என்று அறிவுரை சொன்னார் நண்பர்.

ஐயா, நான் மிகக் குறைந்த மதிப்புடைய நாணயங்களையே எடுக்கிறேன். எல்லாரும் என்னை முட்டாள் என்று நினைத்து என்னிடம் நாணயங்கள் உள்ள கைகளை நீட்டுக்கின்றனர். இதிலேயே எனக்கு ஒரு நாளைக்கு நான்கைந்து ரூபாய் கிடைக்கிறது. நீங்கள் சொல்வது போல ஒரே ஒருநாள் விலை குறைவான நாணயத்தை எடுக்காமல், அதிக மதிப்புடைய நாணயத்தை நான் எடுத்துக் கொண்டால், அதன்பிறகு யாரும் என்னிடம் கையையே நீட்டமாட்டார்கள்,என்றான் முட்டாள்.

இதைக் கேட்ட வெளியூர்காரர் அசந்து போய்விட்டார்.

  • 1078