பதவி இடைநீக்கம் செய்யப்பட்ட ஜனாதிபதி யூன் சுக் யோல் (Yoon Suk Yeol) தனது தோல்வியுற்ற இராணுவச் சட்ட முயற்சியை விசாரிக்க வார இறுதிக்குள் முன்னிலையாகுமாறு தென் கொரிய வழக்கறிஞர்கள் செவ்வாயன்று (17) உத்தரவிட்டனர்.
உத்தரவுக்கு இணங்கத் தவறினால் யூன் கைது செய்யப்படுவார் என்று எச்சரிக்கப்பட்டதாகவும் தென்கொரியாவின் யோன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சனிக்கிழமையன்று (14) நாடாளுமன்றத்தால் குற்றஞ்சாட்டப்பட்டு பதவி நீக்கப்பட்ட யூன், இராணுவச் சட்ட முயற்சி தோல்வியடைந்த சிறிது நேரத்திலேயே, கிளர்ச்சியின் குற்றச்சாட்டில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
இது குறித்து சட்டத்தரணிகள் மற்றும் காவல்துறை, பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் மற்றும் ஊழல் தடுப்பு புலனாய்வாளர்களின் கூட்டுக் குழு விசாரணையில் ஈடுபட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், யூனும் அவரது நெருங்கிய கூட்டாளிகளும் ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனையை சந்திக்க நேரிடும்.
சிக்கலுக்கு உள்ளான யூன் இந்த வாரம் இருமுறை விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை (15) ஒரு செய்தி வெளியீட்டில், கிளர்ச்சி குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரிக்க யூனை அழைத்ததாக அரசுத் தரப்பு வெளிப்படுத்தியது. எனினும் இதற்கு அவர் இணங்கத் தவறிவிட்டார்.
இப்போது, வழக்கறிஞர்கள் விசாரணைக்காக எதிர்வரும் சனிக்கிழமைக்குள் முன்னிலையாகுமாறும், இணங்கத் தவறினால் பியைாணை பிறப்பிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
இதற்கிடையில், நாட்டின் அரசியலமைப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை (16) அவரது பதவி நீக்கத்தை மறுபரிசீலனை செய்யத் தொடங்கியது.
மேலும் அவர் பதவியில் இருந்து நீக்கப்படுவதை உறுதிசெய்ய ஆறு மாதங்கள் (180 நாட்கள்) வரை கால அவகாசம் உள்ளது.
நாடாளுமன்றத்தின் தீர்ப்பை நீதிமன்றம் உறுதி செய்தால், இரண்டு மாதங்களுக்குள் புதிய தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
தற்சமயம் இடைக்கால ஜனாதிபதியாக பிரதமர் ஹான் டக்-சூ பதவி வகித்து வருகிறார்.
அதேநேரம், விசாரணை நடைபெற்று வரும் நிலையில், பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜனாதிபதி பயணத் தடையின் கீழ் இருக்கிறார்.
டிசம்பர் 3 அன்று, யூன் ஒரு இராணுவச் சட்ட ஆணையை வெளியிட்டார், இது குறுகிய காலத்திற்கு மட்டுமே நீடித்தாலும், பல ஆண்டுகளில் நாட்டை அதன் ஆழ்ந்த அரசியல் கொந்தளிப்பில் ஆழ்த்தியது.
இந்த நடவடிக்கை நாடு முழுவதும் பரவலான கண்டனத்தையும் வெகுஜன எதிர்ப்புகளையும் தூண்டியமை குறிப்பிடத்தக்கது.
000
- 979