Feed Item
·
Added a post

கரூர் செல்ல ஈரோடு பஸ் ஸ்டேண்டில் நின்ற ஒரு அரசு பேருந்தில் ஏறி அமர்ந்தேன்.

பஸ் ஓரளவு காலியாய் இருந்தது அப்போ ஒரு பெரியவர் வந்து "தம்பி பக்கத்துல ஆள் வருதா?"

" ஆமா(பொய்) வேற எங்கயாவது உக்காருங்க"

சில நிமிடம் கழித்து டிப் டாப்பாய் ஒரு ஆசாமி "சார் பக்கத்துல ஆள் வருதா?"

" ஆமா(மறுபடியும் பொய்). ஏன் சார் பஸ்ல அவ்வளவு இடம் இருக்குல்ல அங்க போய் உக்காரலாம்ல என்று நினைத்ததை அவர் உணர்ந்து வேறு இடம் சென்று அமர்ந்து கொண்டார்.

ஓரளவு பஸ் நிரம்பி விட்டது.. இப்போ ஒரு பையன் வந்தான். அழுக்கு சட்டை அழுக்கு பேண்ட் " சார் பக்கத்துல ஆள் வருதா?"

நான் இனி பொய் சொல்ல முடியாதென்றெண்ணி "இல்ல யாரும் வரல ஏன் ?'

இல்ல நான் உக்காரணும்"

" சரி உக்காரு" ஒரு வித நெருடலுடன் சொன்னேன். அவன் உடனே தான் கொண்டு வந்திருந்த கூடையை என் அருகில் வைத்து விட்டு கீழிறங்கி எங்கேயோ சென்று விட்டான்.

கூடைக்குள் அழுக்கு துணிகள்.. அதிலிருந்து துர் நாற்றம் வேறு.

என்னடா இது பிரபுவுக்கு வந்த சோதனை ?!

முதல்ல கேட்ட அந்த பெரியவர் அல்லது டிப் டாப் ஆசாமி இருவரில் யாருக்கேனும் இடம் கொடுத்திருக்கலாம். இப்படி ஆகிருச்சேன்னு கவலை பட்டுக்கொண்டே அந்த கூடையை மெல்ல அழுத்தி பார்த்தேன்.

அந்த கூடை முழுதும் அழுக்கு துணிகள். திடீரென சத்தம் எல்லோரும் பஸ்ஸை விட்டு இறங்கி ஓட துவங்கினார்கள் எனக்கு என்னென்னே புரியலை.

பின்பு தான் புரிந்தது இந்த பஸ் கிளம்பும் முன்பாக ஒரு பிரைவேட் பஸ் கிளம்ப தயாரான பொழுது அனைவரும் இறங்கி அதை நோக்கி ஓடினர். நான் வேற நடுவுல உக்காந்துருக்கேன் . நான் போறதுக்குள்ள அந்த பஸ்ல சீட் நிரம்பிடும். இந்த பஸ் கிளம்ப இன்னும் தாமதம் ஆகும்போல தெரிந்தது. இந்த கூடைக்காரன வேற காணோம்.

திடீரென்று பஸ்சுக்கு வெளிய இருந்து என் ஜன்னலோரம் அவன் வந்து

"சார் சார் அந்த கூடையை கொடுங்க கூடையை கொடுங்க" னு கத்தினான்.

நான் எதுக்கு னு கேட்டேன்.

"சார் சார் கூடையை கொடுங்க சார் நான் அந்த பஸ்ல ஏறனும்"

சரி இந்தா னு சொல்லி என் என் இரு விரல்களால் அந்த கூடையை வேண்டா வெறுப்பாய் தூக்கி அவனிடம் நீட்டினேன்.

.அவன் கூடையை வாங்கியவுடன் சொன்னான்

" சார் நீங்க மெதுவா வாங்க நான் உங்களுக்கு அந்த பஸ்ல சீட் போட்டு வைக்கிறேன்" னு

நான் யாரை அழுக்கு பையன்னு நெனச்சேனோ, யார் கூட போனா என் பயணம் இனிக்காதுன்னு நெனச்சேனோ, அவன் சொல்றான் வாங்க சார் உங்களுக்கு சீட் போட்டு வைக்கிறேன்னு.

பள்ளியிலும் கல்லூரியிலும் தான் பாடம் நடத்திட்டு பரீட்சை வைப்பாங்க.

ஆனால் வாழ்க்கையில் பரீட்சை வெச்சுட்டுத்தான் பாடம் நடத்துவாங்கனு புரிஞ்சுகிட்ட ஒரு தருணம் அது.

நாம் சந்திக்கின்ற ஒவ்வொரு மனிதனும் நமக்கு ஏதாவது ஒரு விஷயத்தை கற்றுக்கொடுக்க இறைவனால் அல்லது இயற்கையால் அனுப்பப்படுகிறான் என்பதை நான் நம்புகிறேன்.

அந்த பையன் அருகே அமர்ந்து நான் போன அந்த இரண்டு மணி நேர பயணத்தில் துர்நாற்றம் அடிக்கவில்லை. நல்ல மனத்தின் மணம்தான் வீசியது.....

  • 735