கழுகுமலை வெட்டுவான் கோயில் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? தென்னிந்தியாவின் எல்லோரா என்று போற்றப்படும் இந்த கோயிலின் சிறப்பம்சங்கள், முக்கியத்துவம் பற்றி தெரிந்து கொள்வோம்.
8ம் நூற்றாண்டில் பாண்டிய மன்னனால் கட்டப்பட்டதுதான், இந்த கழுகுமலை வெட்டுவான் குடைவரைக் கோயிலாகும். ஒரேபாறையில் வெட்டப்பட்டுள்ளதால் இது "வெட்டுவான் கோயில்" என்று அழைக்கப்படுகிறதாம்.
மாரஞ்சடையான் என்ற பாண்டிய மன்னன், இந்த கோயிலை கட்டியிருக்கலாம் என்கிறார்கள். இது தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை என்ற இடத்தில் அமைந்துள்ளது. அதாவது, கோவில்பட்டியிலிருந்து 22 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. தமிழகத்திலிருக்கும் பழமையான கோயில்களில் மிகச் சிறிய கோயில் இதுவாகும்.
ஒரு தனிக்கோயில் எப்படியெல்லாம் கருவறை, அர்த்தமண்டபம் என்று அமைக்கப்படுமோ, அதுபோலவே ஒற்றை பாறையில் இந்த கோயில் கட்டப்பட்டுள்ளது. மலையைக் குடைந்து உருவாக்கப்பட்டிருக்கும் இந்த கோயிலை, அங்கிருக்கும் மலையிலிருந்து பார்த்தால்கூட தெரியாதாம். ஏனென்றால், பெரிய மலையை "ப" வடிவில் உடைத்து, அதற்குள் உளி வைத்து மேலிருந்து கீழாக குடைந்து கட்டியிருக்கிறார்கள்.
தலைகீழாக கட்டப்பட்டுள்ளதுதான் இந்த கழுகுமலை வெட்டுவான் கோயிலின் சிறப்பம்சமாகும். முதலில் கோபுரம், அதற்கு பிறகு சிற்பங்கள், கருவறை, அடித்தளம் என ஒவ்வொன்றாக அடுத்தடுத்து கட்டப்பட்டுள்ளது.. இங்கு பிரம்மா, விஷ்ணு, சிவன், தேவ கன்னியர், பூத கணங்கள் என ஏராளமான சிற்பங்கள் அழகியல் நுணுக்கங்களுடன் செதுக்கப்பட்டுள்ளன.
இந்த கோயிலில் மிக நேர்த்தியாக செதுக்கப்பட்டிருக்கும் சிற்பங்கள் காண்போரை சுண்டியிழுக்கின்றன. கோயில் முகப்பில் சிவபெருமானும், உமையவளும் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் சிற்பத்தின் அழகில் மயங்காதவர்களே இருக்க முடியாது.
அதுமட்டுமல்ல, இந்த கோபுரத்தில் அமைந்திருக்கும் சிலைகள் அனைத்துமே ஒரே பாறையில் செதுக்கப்பட்டவை. வேறு எந்தவித செதுக்கப்பட்ட சிற்பங்களும் இதில் பொருத்தப்படவில்லையாம்.
ஆனால், கோயிலின் ஒரு பகுதி நிறைவடையாமல் இருக்கிறது. இதற்கு என்ன காரணம் என்று உறுதியாக தெரியவில்லை.. ஒருவேளை கோயில் கட்டுமான பணியின்போது, பாறைகள் வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் அல்லது போரில் மன்னன் இறந்துவிட்டதால், கோயிலை கட்டி முடிக்காமல் விட்டிருக்கலாம் என்கிறார்கள்.. ஆனால், பாறையிலுள்ள உளி தடங்களை இன்றும்கூட காண முடிகிறது. விமானம், கோவில் கோபுரங்களில் சிற்பங்கள் செதுக்கப்படாமலும், கோவில் முழுமைபெறாமலும் உள்ளது,
- 1027