தென்கொரியா என்றாலே அதன் அதிநவீன தொழில்நுட்பமும் பொருளாதார வளர்ச்சியும் தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். ஆனால், இப்போது தென் கொரியா இதுவரை இல்லாத வகையில் கருவுறுதல் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது..
அங்கு மக்கள் தொகை படுவேகமாக சரியும் நிலையில், அதைச் சரி செய்ய முடியாமல் தென்கொரிய அரசு போராடி வருகிறது. இதே நிலை தொடர்ந்தால் தென்கொரியா என்ற நாடே இல்லாத சூழல் கூட உருவாகும் என்று வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
கடந்த நூற்றாண்டில் இந்தியா, சீனா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளுக்கும் மக்கள்தொகை வளர்ச்சி தான் மிகப் பெரிய பிரச்சினையாக இருந்தது. மக்கள்தொகை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
ஆனால், இந்த நூற்றாண்டில் நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. மக்கள்தொகை சரிவு உலகின் பல நாடுகளுக்குப் பிரச்சினையாக மாறியுள்ளது. இதனால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக தென்கொரியா இருக்கிறது.
இந்த ஆபத்தை உணர்ந்து தான் தென்கொரிய அரசு மக்கள்தொகையை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதிகம் குழந்தை பெறுவோருக்கு வரி விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு ஆண்கள் கட்டாயமாக ராணுவத்தில் பணிபுரிய வேண்டும் என்ற விதி இருக்கும் நிலையில், 30 வயதுக்குள் 3 குழந்தைகளுக்குத் தந்தையானால் கட்டாய ராணுவ பயிற்சியில் இருந்து கூட விலக்கு தருவது குறித்து அந்நாட்டு அரசு ஆலோசித்து வருகிறது.
என்னதான் இவ்வளவு சலுகைகளைக் கொரியா வாரி வழங்கினாலும், அங்குள்ள அடுத்த தலைமுறையினர் குழந்தை பெற்றுக் கொள்வதில் சுத்தமாக ஆர்வம் காட்டுவது இல்லையாம். குழந்தை பெற்றெடுத்தால் தங்கள் கேரியர் பாதிக்கப்படும் என்று இளம்பெண்கள் பலரும் கருதுகிறார்கள்.
அதேபோல குழந்தை வளர்க்க ஆகும் செலவும் பெரிய சிக்கலாக இருக்கிறது. இது போன்ற பிரச்சினைகளால் தென்கொரிய நிலைதடுமாறிப் போய் இருக்கிறது. இந்த சிக்கலைச் சரி செய்ய முடியாவிட்டால் தென்கொரிய அரசு நிச்சயம் அழிவையே சந்திக்கும் என்று வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.
- 762