Feed Item
·
Added a post

பூண்டு நம் உடலுக்கு தேவையான வைட்டமின்கள், தாதுக்களை கொண்டுள்ளது. பூண்டை சரியான முறையில் பயன்படுத்தினால் அதன் சத்துக்களை முழுமையாகப் பெற முடியும். இதனால் முழுச்சத்துக்களும் கிடைக்கும்.

பூண்டில் உள்ள ஆன்டிமைக்ரோபியல் பண்புகள் பூஞ்சை, பாக்ட்ரீயா, வைரஸிடம் இருந்து நம்மை காக்கும். இதனால் காய்ச்சல், சளி இருமல் போன்ற தொற்றுநோய்கள் அண்டாது.

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் பூண்டிற்கு உண்டு. செரிமானத்தை மேம்படுத்தும். உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு பூண்டு வரப்பிரசாதம். இது ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்க உதவும்.

குழந்தைகளுக்கு வாயு பிடிப்பு ஏற்படக் கூடாதென குழந்தைகளுக்கு பாலில் பூண்டு போட்டு கொடுக்கும் அம்மாக்கள் ஏராளம். ஆனால் பூண்டு போட்டு சமைக்கும்போது சில தவறுகளை செய்வதால் அதன் முழுபலன்கள் நமக்கு கிடைக்காமல் போய்விடுகிறது.  

பூண்டு சமைப்பவர்கள் அதிகமாக வேகவிடுவதால் அதன் சத்துக்கள் நீங்க காரணமாகிவிடுகிறது. பூண்டை ரொம்ப நேரம் எண்ணெய்யில் வறுத்தெடுக்கும் போது அதிக வெப்பத்தால் அதிலுள்ள மருத்துவ பண்புகள் வீணாகிவிடுகின்றன. பூண்டை எண்ணெயில் வதக்கும் போது பொன்னிறமாக மாறும் சமயத்தில் அதன் வாசனை நன்றாக இருக்கும்.

ஆனால் பூண்டை அந்தளவுக்கு வேகவிடும் போது அதில் இருக்கும் அல்லிசின் என்ற பொருள் நீங்கிவிடுகிறது. பூண்டை நன்றாக வதக்கும்போது அதன் சுவையும் மணமும் நன்றாக இருந்தாலும், அதில் உள்ள அல்லிசின் நீங்கிவிடும்.

பூண்டில் உள்ள மருத்துவ குணங்களையும், சத்துக்களையும் பெற வேண்டும் என்றால் அதை அதிகமாக வேகவிடக் கூடாது. முடிந்தவரை பூண்டை சமையலின் இறுதியில் சேர்ப்பது நல்லது. பூண்டை உரித்து நறுக்கிய பின்னர் பத்து நிமிடங்கள் அப்படியே வைத்திருக்க வேண்டும்.

பூண்டில் உள்ள சத்துக்கள் முழுமையாக கிடைக்க வேண்டும் என நினைத்து சிலர் அதனை மாத்திரை போல விழுங்குவார்கள். பூண்டில் காணப்படும் அல்லிசின் பூண்டை முழுமையாக சாப்பிடும் போது நமக்கு கிடைப்பதில்லை. அதை நறுக்கும்போது, அரைக்கும் போது, நசுக்கும்போது தான் பூண்டில் அல்லிசின் காணப்படும்.

பலர் தற்போது பாக்கெட்டுகளில் விற்கும் பூண்டு பேஸ்ட் வாங்கி பயன்படுத்துகிறார்கள். ஆனால் இது மாதிரி பதப்படுத்தப்பட்ட பூண்டு பேஸ்ட்களில் பல வேதிப்பொருட்களும் கலந்து இருக்கும். இதில் பூண்டில் உள்ள பொதுவான மருத்துவ குணங்கள் இருக்காது. 

பூண்டு ஏற்கனவே மூடிய தோலை கொண்டுள்ளதால் பலர் அதை உரித்து அப்படியே பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் பூண்டின் மேற்புறத்தோலில் பூச்சிக்கொல்லிகள், தூசு பாக்டீரியா போன்றவை இருக்கவும் வாய்ப்புள்ளது. அதனால் எப்போது சமைத்தாலும் பூண்டை ஓடும் நீரில் கழுவி பயன்படுத்த வேண்டும். 

பூண்டை கெட்டுப் போகாமல் நீண்ட நாள் பயன்படுத்த வேண்டும் என சிலர் பிரிட்ஜில் சேமிக்கிறார்கள். ஆனால் ப்ரிட்ஜில் வைப்பதால் அங்குள்ள ஈரப்பதத்திற்கு பூண்டு சீக்கிரம் முளைவிட வாய்ப்புள்ளது. பூண்டை எப்போதும் அதிகம் வெப்பம் அல்லது அதிக குளிர் இருக்கும் இடங்களில் சேமிக்கக்கூடாது. வெளிச்சம் இல்லாத இடத்தில் காற்றோட்டமாக பூண்டை சேமிப்பதால் அவை நீண்ட காலம் கெடாமல் இருக்கும். 

பூண்டு ஒரு உணவு பொருளாக இருந்தாலும் அதில் காணப்படும் மருத்துவ பண்புகள் உடலில் சில பக்க விளைவுகளையும் ஏற்படுத்த வாய்ப்புள்ளது. நீங்கள் அதிகமாக பச்சை பூண்டு சாப்பிடும் நபராக இருந்தாலோ, பூண்டு சப்ளிமெண்ட்ஸ் உண்பவராக இருந்தாலும் மற்ற நோய்களுக்கான மருந்துகள் எடுக்கும்போது கவனமாக இருக்கவேண்டும்.

சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் போன்ற நோய் உள்ளவர்கள் மருத்துவரிடம் இது குறித்து ஆலோசிக்க வேண்டும். ஏதேனும் அறுவை சிகிச்சை செய்ய நேர்ந்தாலும் நீங்கள் தொடர்ந்து பூண்டு உண்பவர் என்பதை முன்கூட்டியே சொல்ல வேண்டும்.

  • 677