வட்ஸ்அப் கணக்குகளை ஊடுருவி மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதால், மூன்றாம் தரப்பினருக்கு அவர்களின் தொலைபேசி இலக்கங்களில் பெறப்பட்ட இரகசிய குறியீட்டை (OTP) வழங்க வேண்டாம் என இலங்கை கணினி அவசர செயற்பாட்டு பிரிவு விடுத்துள்ளது.
ஹேக்கர்கள் வட்ஸ்அப் குழுக்களில் இணைந்து பயனர்களின் கணக்குகளைக் கண்காணிப்பதாகவும் வட்ஸ்அப் கணக்குகளை ஹேக் செய்த பின்னர், கடன் கேட்டு ஹேக் செய்யப்பட தொலைபேசியில் உள்ள ஏனைய தொலைபேசி எண்களுக்கு அவசர செய்திகளை அனுப்புவதாகவும் இலங்கை கணினி அவசர செயற்பாட்டு பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல தெரிவித்தார்.
அதன்படி, சமய நிகழ்ச்சிகள், பரிசுகளை வெல்வது அல்லது கல்வி நிகழ்ச்சிகளில் பங்கேற்பது போன்ற வாய்ப்புகளைக் குறிப்பிட்டு தொலைபேசி எண்ணில் பெறப்பட்ட இரகசிய குறியீட்டை அவர்கள் கோருவதாகக் கூறப்படுகிறது.
எனவே இப்படியான செய்திகள் வந்தால், முதலில் அந்தக் கணக்கின் உரிமையாளரைத் தொடர்பு கொண்டு, அந்தத் தகவல் உண்மையா என்பதை உறுதி செய்து, வாட்ஸ்அப் கணக்கு ஹேக் செய்யப்பட்டமை தெரிந்தால், அந்தக் கணக்கின் உரிமையாளர் உடனடியாக அவருடன் தொடர்புடைய ஏனையவர்களுக்கு அதைப் பற்றி அறிவிக்குமாறும் கோரப்பட்டுள்ளது.
மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் ஊடாக இவ்வாறான நிதி மோசடிகளை இலங்கையிலிருந்து இல்லாதொழிக்க முடியும் என இலங்கை கணினி அவசர செயற்பாட்டு பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல தெரிவித்துள்ளார்.
00
- 513