‛‛நடிகை கஸ்தூரிக்கு ஜாமீன் வழங்க வேண்டும். அவருக்கு ஆட்டிஸம் பாதிப்போடு கூடிய ஒரு மகன் இருக்கிறார். இப்பாதிப்புக்கு உள்ளான குழந்தைகளுக்கும் அவர் தம் பெற்றோருக்கும் அன்றாட வாழ்க்கை என்பதே ஒரு நித்திய சவால். நானும் கஸ்தூரியை போல ஒரு சிறப்பு அம்மா தான். எனக்கும் ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட ஒரு மகன் இருக்கிறான்'' என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜிஆர் சுவாமிநாதனின் மனைவி காமாட்சி சுவாமி நாதன் உருக்கமாக நீதிமன்றத்துக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக நடிகை கஸ்தூரி மீது சென்னை எழும்பூர் உள்பட மாநிலத்தில் உள்ள பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகை கஸ்தூரியிடம் விசாரணைக்கு ஆஜராகும்படி எழும்பூர் போலீசார் சம்மன் வழங்க சென்றனர். அப்போது வீட்டில் அவர் இல்லை. வீடு பூட்டப்பட்டு கிடந்தது.
இதையடுத்து சம்மனை வீட்டில் ஒட்டிய போலீசார், கஸ்தூரியை தேட தொடங்கினர். தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு சென்னை எழும்பூர் தனிப்படை போலீசார் கஸ்தூரியை கைது செய்தனர். ஹைதராபாத்தில் கஸ்தூரியை சுற்றிவளைத்து போலீசார் கைது செய்தனர். அதன்பிறகு அவரை சென்னைக்கு போலீசார் அழைத்து வந்தனர்.
நீதிபதி ரகுபதி ராஜா முன்பு போலீசார் ஆஜர்ப்படுத்தினர். இதையடுத்து நடிகை கஸ்தூரியை நீதிமன்ற காவலில் வரும் 29ம் தேதி வரை அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து கஸ்தூரி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நீதிபதி முன்பு ஆஜர்ப்படுத்தப்பட்டபோது நடிகை கஸ்தூரி நீதிபதியிடம் சொந்த ஜாமீனில் விடுவிக்கும்படி கோரிக்கை வைத்தார்.
முன்னதாக 2 குழந்தைகள் வீட்டில் தனியாக இருப்பாங்க.. நான் சிங்கிள் மதர் என்று கூறி வாதம் வைத்து இருந்தார் கஸ்தூரி. இருப்பினும் அவருக்கு நீதிமன்ற காவல் வழங்கப்பட்டது. ஏற்கனவே நடிகை கஸ்தூரி சார்பில் இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு செய்தார். அந்த மனு தள்ளுபடியான நிலையில் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
- 471