கிழக்கு வங்காள விரிகுடாவில் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு அருகில் எதிர்வரும் 23 ஆம் திகதி தாழமுக்கம் ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளதாக யாழ் பல்கலைக்கழக புவியியற்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் -
இது எதிர்வரும் 25 ஆம் திகதி அன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற்றம் பெறும் அதேவேளை 26 ஆம் திகதி தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற்றம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலையின் படி இது ஒரு புயலாக மாற்றம் பெறும் வாய்ப்புள்ளது.
தற்போதைய நிலையின் படி இதன் நகர்வு பாதை கிழக்கு மாகாணத்திற்கு அருகாக நகர்ந்து, பின்னர் வடக்கு மாகாணத்தை அண்மித்து (தற்போதுள்ள நிலையில் இது கரையைக் கடக்கும் போது இதன் உள் வளையத்திற்குள் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களும், வெளிவளையத்துக்குள், முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மாவட்டங்களும் அடங்குகின்றன) தமிழ்நாட்டின் கடலூர் புதுச்சேரிக்கிடையில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிகக் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
குறிப்பாக எதிர்வரும் 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் மிக மிக கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் 26 மற்றும் 27 ஆம் திகதிகளை உள்ளடக்கிய 48 மணி நேரத்தில் 350 மி. மீ. இனை விட கூடுதலாக மழைவீழ்ச்சி கிடைக்கும் வாய்ப்புள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளிலும் தற்போது கிடைத்து வரும் தொடர்ச்சியான மழை காரணமாக நிலம் நிரம்பு நிலையை எட்டியுள்ளது.
சில பகுதிகளில் வெள்ள அனர்த்த நிலமைகள் ஏற்பட்டுள்ளன. எனவே கிடைக்கவுள்ள கனமழை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளிலும் வெள்ள அனர்த்தத்தை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் மிகவும் அவதானமாக இருப்பது அவசியம்.
விவசாயிகளும் இக்கனமழையை கருத்தில் கொண்டு தங்களுடைய விவசாய நடவடிக்கைகளில் குறிப்பாக நெற் செய்கை நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவது அவசியம்.
எதிர்வரும் 26 மற்றும் 27ம் திகதிகளில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கரையோரப் பகுதிகளில் காற்று மணிக்கு 60 தொடக்கம் 80 கி.மீ. வரையான வேகத்தில் வீசும் வாய்ப்புள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் உள் நிலப்பகுதிகளில் காற்று 50 தொடக்கம் 70 கி.மீ. வேகத்தில் வீசும் வாய்ப்புள்ளது.
எனவே கடுமையான காற்று வேகத்தினால் பாதிக்கப்படக் கூடிய மரங்கள் மற்றும் பழைய கட்டிடங்கள் தொடர்பில் அவதானமாக இருப்பது அவசியம்.
இதன் காரணமாக எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை இலங்கையின் வடக்கு, கிழக்கு, தென்கிழக்கு மற்றும் தெற்கு கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்ப்பது சிறந்தது.
இத்தாழமுக்கம் புயலாக மாறாது விட்டாலும் மேலுள்ள அதி தீவிர வானிலை நிகழ்வுகள் மற்றும் கடற் கொந்தளிப்பான நிலைமைகள் நிகழும்.
எனவே முன்கூட்டிய பாதுகாப்பு தயார்ப்படுத்தல் முறைமைகளைப் பின்பற்றுவது எமக்கு ஏற்படும் பாதிப்புக்களை கணிசமாகக் குறைக்கும்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் நிர்வாக அதிகாரிகள் இந்த தாழமுக்கம்/புயல் தொடர்பாக அவதானம் செலுத்துவது சிறந்தது. எனத் தெரிவித்தார்.
00
- 581