நடிகர் விஜய், கடந்த மாதம் 27ம் தேதி விக்கிரவாண்டியில் பிரம்மாண்டமாக தனது கட்சியின் முதல் மாநாட்டை நடத்தினார். மாநாட்டிற்கு தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கேரளாவில் இருந்தும் ஏராளமான தொண்டர்கள், விஜய் ரசிகர்கள் வருகை தந்தனர். த.வெ.க மாநாட்டிற்கு வேன் ஓட்டிய ஓட்டுனர்கள் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளனர்.
சென்னையை சேர்ந்த மணிகண்டன், சக்திவேல் ஆகியோர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்துள்ள அந்த புகாரில், “தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு வாகனம் ஓட்ட அபிராமபுரம் தவெக துணைச் செயலாளர் மோகன் என்பவர் எங்களை ஆக்டிங் ட்ரைவராக அழைத்தார். சம்பளத்தொகை பேசிக் கொண்டு வாகனம் ஓட்ட சென்றோம்.
மாநாட்டிற்கு செல்லும்போதே தொண்டர்கள் மது அருந்திவிட்டு ரகளை செய்தனர். ஆனாலும் அவர்களை மாநாட்டில் அழைத்து சென்று விட்டோம். ஆனால் தவெக நிர்வாகி மோகன் சொன்னபடி எங்களுக்கு சாப்பாடு கூட வாங்கி தரவில்லை. அவர்களை மீண்டும் பத்திரமாக சென்னை அழைத்து வந்தோம்.
ஆனால் நாங்கள் பேசிய சம்பளத்தை எங்களுக்கு தரவில்லை. பணத்தை கேட்டால் கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்று அதில் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து காவல் ஆணையர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
- 257