Feed Item
·
Added a post

பாண்டியர் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட 700 ஆண்டுகள் பழமையான 'பொந்தன்புளி மரம்'. ராமேஸ்வரத்தில் நிற்கும் இதன் வரலாறு தெரியுமா?

ராமநாதபுரம் மாவட்டத்தில் பல தலைமுறைகளை கண்ட மரமாக 700 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வரலாற்று சிறப்பு மிக்க பொந்தன்புளி மரமானது ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகில் உள்ளது. அந்த மரத்தின் சிறப்புகள் மற்றும் மரம் வளர்ப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

ராமேஸ்வரத்தில் 25 ஆண்டுகளுக்கு முன்னர் வரையிலும் பல்வேறு இடங்களில் இந்த பொந்தன்புளி மரங்கள் இருந்தன. ஆனால் மக்களின் அறியாமையாலும் மரத்தின் அருமை தெரியாததாலும் இவை அழிக்கப்பட்டுவிட்டன.

ஆங்கிலத்தில் இந்த மரம், பாஃப்போ என்றழைக்கப்படுகிறது. ஐந்து விரல் போன்று இந்த மரத்தின் இலைகள் இருக்கும். தற்போது, ராமேஸ்வரப் பகுதியில் ஆறு மரங்கள் இருப்பதாகவும் அதில் நான்கு மரங்கள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் இரண்டு மரங்கள் பெரிதாகவும் உள்ளது.

ராமநாதபுரத்தில் மாவட்டத்தில் ராமேஸ்வரம், பாம்பன், ராமநாதபுரம், தேவிபட்டினம், பனைக்குளம், உள்ளிட்ட இடங்களில் 10-திற்கும் குறைவாக இந்த பொந்தன்புளி மரங்கள் உள்ளன. மேலும் பல ஊர்களில் இந்த பொந்தன்புளி மரங்கள் சுத்தமாக அழிந்து விட்டன.

சுமார் 10,000 லிட்டருக்கு மேலாக தண்ணீரை வேரின் மூலம் உறிஞ்சி சேமித்து வைத்துக் கொள்ளும் தன்மை உடையது இந்த மரத்தின் சிறப்பாகப் பார்க்கப்படுகிறது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த பொந்தன்புளி மரத்தின் பிறப்பிடம் ஆப்பிரிக்கா நாடு, அரேபியா தீபகற்பம் மற்றும் மடகாஸ்கர் நாடுகள் ஆகும்.

பாண்டிய மன்னர்கள் அரேபியா தீபகற்பத்தில் இருந்து குதிரைகளை இறக்குமதி செய்து அக்குதிரைகள் போர் பயிற்சிக்கு வழங்கப்பட்டது. வாணிபத்திற்காக ராமேஸ்வரத்திற்கு வந்த அரேபியர்களை குதிரைப்படை தலைவர்களாக பாண்டிய மன்னர்கள் நியமித்தனர்.

பொந்தன்புளி மரத்தில் எட்டு இனங்கள் உள்ளன. அதில் ஆறு இனங்கள் மடகாஸ்கரை சேர்ந்தவை. ஒரு இனம் ஆப்ரிக்காவிற்கும், மற்றொன்று இனம் அரேபியா தீபகற்பத்திற்கும் சொந்தமானது.

பொந்தன்புளி மரங்களின் இலைகள், கனிகள், காய்கள் ஆகியவை இக்குதிரைகளின் தீவனமாகும். இதற்காக அரேபியா தீபகற்பகத்தில் இருந்து பொந்தன்புளி மரத்தின் விதைகளை கொண்டு வந்து பாண்டிய நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடப்பட்டு வளர்க்கப்பட்டன.

இம்மரங்கள் 1,500 ஆண்டுகளுக்கும்மேல் உயிர் வாழக்கூடிய தன்மை உடையது. இங்கு இருக்கும் மரமானது 15 மீட்டர் சுற்றளவு கொண்டது. ராமேஸ்வரம் கடற்கரையில் குதிரைகளை ஏற்றி வந்த மரக்கல கப்பலையும், அதில் குதிரைகளோடு அரபு வணிகர்கள் நிற்கும் காட்சி இன்று 1,100 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருநெல்வேலி மாவட்டம் உள்ள திருப்புடையார் கோவில் கோபுரத்தில் வரையப்பட்டுள்ள ஓவியத்தில் உள்ளது என்று கூறுகின்றனர்.

வறட்சியான மாவட்டம் ராமநாதபுரத்தில் எவ்வளவு வறட்சி வந்தாலும் தாங்கி வளரக்கூடிய பொந்தன்புளி மரத்தின் அருமையை அறிந்து இந்த மரத்தினை வளர்க்க தற்போது அதிகளவில் ஆர்வம் காட்டுகின்றனர்.

தற்போது இந்த மரத்தின் அழிவைத் தடுக்கவும் தொடர்ந்து புதியதாக இம்மரங்களை நட்டு வளர்க்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுகின்றனர் ராமேஸ்வரம் பகுதி மக்கள்.

  • 1093