Feed Item
·
Added a post

சட்டங்கள் எதுவும் மக்களை மேம்படுத்துவதில்லை என்று முல்லா அரசரிடம் தெரிவித்தார்.

‘அகத்தில் உள்ள உண்மையுடன் இயைந்து போக, அவர்கள் சில விஷயங்களைப் பின்பற்ற வேண்டும். இந்த உண்மை வெளித் தெரியும் உண்மையை மிகவும் குறைவாகவே பிரதிபலிக்கிறது’ என்பதையும் பகிர்ந்தார் முல்லா.

முல்லாவின் பேச்சைக் கேட்ட அரசன், தானும் சத்தியத்தைப் பின்பற்ற வேண்டுமென்று எண்ணினான். மக்களையும் சத்தியத்தைப் பின்பற்ற வைக்க வேண்டுமென்று கருதினான்.

ஊரின் நுழைவாயிலில் ஒரு பாலம் இருந்தது. அந்தப் பாலத்தில் ஒரு தூக்குமேடையை அரசன் அமைத்தான். அங்கே சில காவலர்களையும் காவலுக்கு வைத்தான்.

’எல்லோரிடமும் ஒரு கேள்வி கேட்கப்படும். அவர் உண்மையைச் சொன்னால் அவருக்கு ஊருக்குள் நுழைய அனுமதி உண்டு. யாராவது பொய் சொன்னால் அவர் தூக்கில் ஏற்றப்படுவார்” என்ற அறிவிப்பு வெளியானது.

அடுத்த நாள் நஸ்ரூதின், அடுத்த ஊர் சந்தைக்குப் போய்விட்டுத் தனது ஊருக்குள் நுழைந்தார். அவரிடம் எங்கே போகிறீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது.

‘என்னைத் தூக்கிலிடும் வழியில் போய்க்கொண்டிருக்கிறேன்’ என்று காவலர்களிடம் பதிலளித்தார் முல்லா.

‘எங்களால் நீ சொல்வதை நம்பமுடியாது’ என்று காவலர்கள் சொன்னார்கள்.

‘சரிதான், நான் பொய் சொல்லிவிட்டதால், என்னைத் தூக்கிலிடுங்கள்’ என்றார் முல்லா.

’நாங்கள் உங்களைத் தூக்கிலிட்டால், நீங்கள் சொன்னது உண்மையாகிவிடும்.’ என்றார்கள் காவலர்கள்.

‘ஆமாம். இப்போது உண்மை என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரிந்திருக்கும் உங்கள் உண்மை!’ என்றார் முல்லா.

  • 1202