Feed Item
·
Added a post

மூக்கும், முலையும் அறுபட்ட வேதனை, வலி, அவமானத்தைவிட ராவணனின் வீழ்ச்சிக்கு அஸ்திவாரம் தோண்டிய திருப்தியில் இலங்கைக்கு பயணமானாள் சூர்ப்பனகை....

அண்ணா.. என்று அலறிய சூர்ப்பனகையின் குரல் இலங்கையை கலங்கடித்தது. விவரம் என்னவென கேட்ட உற்றார், உறவினர்களையெல்லாம் ஒதுக்கி ராவணனிடம் வந்து நடந்ததை சொன்னாள்.

நமக்கு சொந்தமான பஞ்சவடியில் ராமன் என்பவனும், அவன் மனைவி சீதாவும், அவன் தம்பி லக்குமனனும் வந்து தங்கி உள்ளனர். புதியதாய் வந்திருக்கும் நபர்களை பற்றி அறிய அங்கு சென்று விவரம் கேட்டேன், இலங்காபுரி மன்னனின் அருமை தங்கை என சொல்லியும் திமிராய் பதிலளித்தனர். நான் இன்னாரது தங்கை என சொல்லச்சொல்ல, இது எமது இடம் என சொல்லியும் எனக்கு மரியாதை தரவில்லை. ராமனின் மனைவி சீதையானவள் பேரழகி, அவளுக்கு ஒப்பானவர் இப்புவியில் இதுவரை பிறந்ததுமில்லை, இனி பிறக்கப்போவதுமில்லை. காட்டில் வாழும் ஒரு சாதாரண மனிதனுக்கு அந்த அழகு வசப்படக்கூடாது. மன்னாதி மன்னனாம், அசுரக்குல தலைவனான உனக்கே அவள் சொந்தமாக வேண்டியது என நினைத்து சீதையை உமக்கு பரிசாய் தர அறிவுறித்தினேன். அதற்கு கிடைத்த பதில்தான் இந்த மூக்கறுப்பும்.. முலையறுப்பும்....

ராவணனுக்கு பெண்பித்து உண்டென நன்கு அறிவாள் சூர்ப்பனகை.. தனது தம்பியான குபேரனின் மகன் நளகுபேரனை மணக்க இருந்த ரம்பையை, மருமகள் என்றும் பாராமல் கவர்ந்து வந்தவன்தானே இந்த ராவணன்? தன்னை கவர்ந்து கோபத்தில் விருப்பமில்லாத பெண்ணை தொட்டால் தலைவெடித்து இறந்து போவாய் என ரம்பை சாபமிட்டதும் சூர்ப்பனகைக்கு நினைவில் வந்தது.

இன்றைய பேஸ்புக் காதல்போல் ராவணனுக்கு சீதையை காணாமலே அவள்பால் காதல் வந்தது. தங்கையின் அவமானத்தைவிட, காமம் கொப்பளித்தது. சீதையை கவர்ந்து வந்து அசோகவனத்தில் சிறை வைத்தான். வானரப்படைகளுடன் வந்து போர் தொடுத்தான் ராமன். போரில் வீழ்ந்தான் ராவணன். மண்டோதரி, விபீஷ்ணன் உட்பட அனைவரும் துக்கத்தில் ஆழ்ந்தனர். ஆனால், ஒருத்தி மட்டும் மகிழ்ச்சியோடு இருந்தாள். அவ்வாறு மகிந்திருந்த அவள் சீதையல்ல! சூர்ப்பனகை..

சொந்த அண்ணனின் மரணத்திற்காக யாராவது மகிழ்வார்களா? அதுவும், ராமனின் மனைவி சீதையென்று தெரிந்திருந்தும், சீதை ராமனின்மேல் அளவற்ற காதல் கொண்டிருந்தாள் என்றிருந்தபோதும், அவளுக்கு காவலாய் லட்சுமணன் இருக்கிறான் என இத்தனையும் தெரிந்தும் சீதையின் அழகினை சொல்லி சிறந்த அழகி அண்ணன் வசமே இருக்கவேண்டுமென விரும்பிய சூர்ப்பனகை இப்படி மகிழ்ந்திருந்தாள்.

அப்படி அவள் மகிழ காரணம் என்னவாய் இருக்குமென யோசித்தால், அதற்கு விடையாய் அவளின் பூர்வ ஜென்மத்தில்தான் விடை கிட்டும். சூர்ப்பனகை முற்பிறப்பில் ஆனந்த குரு என்பவருக்கு மகளாகப் பிறந்தாள். முற்பிறப்பில் அவளுக்கு சுமுகி என்று பெயர். ஆனந்த குருவிடம், சத்தியவிரதன் என்ற மன்னனின் மகனான சங்கசூடணன் என்பவன் பாடம் படித்தான். சங்கசூடணனை சுமுகி விரும்பினாள். குருவின் மகள் என்று ஒதுங்கி போனான் சங்கசூடன். ஒருநாள் பாடத்தில் சந்தேகம் கேட்க குருவின் வீட்டுக்கு சங்கசூடணன் சென்றான். குரு வீட்டில் இல்லை. சுமுகி தனித்திருந்தாள். தன் காதலை மீண்டும் சங்கசூடணனிடம் வெளிப்படுத்தினாள். அதற்கு, பெண்ணே! குரு துரோகம் பொல்லாதது. குருவின் மகளான உன்னை என் தங்கையாகவே நினைக்கிறேன்,'' என சொல்லி அவளை கண்டித்து, அங்கிருந்து சென்றுவிட்டான் சங்கசூடணன். காதலில் ஏமாற்றமடைந்த சுமுகி, அவனை அடைய வேண்டி, தான் கற்பிழந்துவிட்டதாக சொன்னால், தந்தை தனக்கு அவனையே மணமுடித்து வைப்பார் என எண்ணி, தனது தந்தை வீட்டுக்கு வந்ததும் தன்னை சங்கசூடணன் கெடுத்து விட்டதாக பழி சொன்னாள். இதை நம்பிய சுமுகியின் தந்தை, மன்னனிடம் இதுபற்றி புகார் தெரிவித்தார். மன்னனும் அதை நம்பி, தன் மகனின் கை, கால்களை வெட்டிவிட்டான். சங்கசூடணன் பூமியில் விழுந்து, தர்மம் அழிந்து விட்டதா? எனக் கதறினான். உடனே பூமி பிளந்தது. உள்ளிருந்து ஆதிசேஷன் வெளிப்பட்டான். "சங்கசூடா! இப்பிறப்பில் உன்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கிய சுமுகியை மறுபிறப்பில் நானே பழிவாங்குவேன்,'' என்றான். சங்கசூடணன் மறுபிறப்பில் ராவணனின் தம்பியாக (விபீஷணன்) பிறந்தான். அவனது தங்கையாக சுமுகி பிறந்தாள். அவளே சூர்ப்பனகை எனப் பெயர்பெற்று வளர்ந்து வந்தாள்.

கைகேயி, சகுனி, வரிசையில் எதிர்மறை கதாபாத்திரமாய் சூர்ப்பனகை இருப்பதாலும், அசுரக்குல பெண் என்பதாலும் அவளை கோரைப்பற்களுடனும், உப்பிய வயிறுமாய் நாம் கற்பனை செய்து வைத்திருக்கிறோம். ஆனால், அவள்

கானின் உயர்கற்பகம் உயிர்த்த கதிர்வல்லி

மேனிநனி பெற்றுவிளை காமநெறி வாசத்

தேனின் மொழி உற்றினிய செவ்விநன் பெற்று(ஓர்)

மானின் விழிபெற்று மயில்வந்த தென வந்தாள்.

கற்பகதரு உயிர் பெற்று வந்ததுபோல, ஒளிவீசும் கொடி போன்ற மேனியுடன், மருண்ட மானின்

விழியுடனும், மயில் போன்ற அழகுடனும் நறுமணம் எங்கும் பரவுமாறு வந்து ராமனின் அருகில் நின்றாள் சூர்ப்பனகை. அவள் உடலில் இருந்த சிலம்பு, முத்தாரம், மேகலை ஒலித்து அவளது வருகையினை ராமனுக்கு அறிவிக்கின்றது. வேறு வேலையாய் இருந்த ராமன் அணிகலன்கள் எழுப்பிய ஒலிக்கேட்டு ஓசை வந்த இடத்தை பார்க்கிறான். ஏனென்றால் அவள் நடந்துவரும்போது சிறு ஒலிகூட எழும்பலியாம். அவள் உடலிருந்த ஆபரணங்கள் ஒலியை வைத்துதான் திரும்பி பார்த்ததாக கம்பன் சொல்றார். மலரினும் மெல்லிய பாதத்தினை உடையவளாம் சூர்ப்பனகை. அவள் எடுத்து வைத்த அடிகூட ஒரே சீராய் ஸ்வரங்களைப்போல் இருந்ததாய். மயில், அன்னம்கூட தோற்றுப்போகும் நடைக்கு சொந்தக்காரி என கம்பர் அவளது அழகை வர்ணிக்கிறார் கம்பர்.

” விண் அருள வந்ததொரு மெல்லமுதம் என்ன”

என சூர்ப்பனகையின் அழகை கண்டு இவள் யாரோ?! இந்த அழகுக்கும் ஈடு இணை உண்டா என ஏகபத்தினி விரதனான ராமனே வியந்து நின்றானாம். அப்பேற்பட்ட அழகுக்கு சொந்தக்காரிதான் சூர்ப்பனகை.

அருகில் வந்த சூர்ப்பனகையை வரவேற்ற ராமன், அவளை யார்.. வந்த நோக்கம் என்னவென விசாரிக்கிறான். தாடகையின் பேத்தி, கேசியின் மகள், ராவணனின் தங்கை என அறிமுகப்படுத்திக்கொண்டு தன் பெயரை காமவல்லி என சொல்கிறாள். தங்களை மணக்கவேண்டும் என்பதே என் நோக்கம் என சூர்ப்பனகை சொல்கிறாள். தனக்கு மணமாகிவிட்டதாக ராமன் சொல்கிறான்..

இருக்கட்டுமே.. பலதாரம் என்பது உலக வழக்கில் இல்லாதது ஒன்றுமில்லையே.. உமது தந்தைக்கும்கூட அறுபதாயிரம் மனைவிகளாச்சே! என்று ராமனை சூர்ப்பனகை சமாதானப்படுத்தினாள்.

தந்தையை சொன்னதும் ராமனின் முகம் வாடியது. அதை கவனித்த சூர்ப்பனகை, ஐயனே! என்னை மன்னித்து விடுங்கள். தங்களை சமாதானப்படுத்தவே தந்தையை பற்றி பேசினேன் என்றாள்

எனக்காக எதுவேண்டுமானாலும் செய்வாயா?! என்றான் ராமன்

ம்ம்ம்ம் செய்வேன், என்றாள் சூப்பனகை.

நான் உன் பாட்டி தாடகையை கொன்றவன் என தெரியுமா?

தாங்களா என் பாட்டியை கொன்றவர்.. ஏன் என்றாள்..

அது விசுவாமித்திரர் சாபத்துக்கு அஞ்சி செய்த பாவம். இனியொருமுறை அப்பாவத்தை நான் செய்யக்கூடாதென முடிவெடுத்துள்ளேன். கட்டிய மனைவியை தவிக்க விட்ட பாவம் என்னை சேரக்கூடாது. நான் ஏகப்பத்தினி விரதன் என சபதமேற்றுள்ளேன். அதனால், என் தம்பியும் இங்குதான் உள்ளான். அவன் தன் மனைவியை பிரிந்து வந்துள்ளான். நீ அவனை மணந்துக்கொள் என்றான் ராமன்.

எங்கள் நாட்டில் ஆண்களுக்கு பஞ்சம் ஒன்றும் வந்துவிடவில்லை. நான் வேசியுமில்லை. கண்டவனுடன் ஒன்றுசேர... இதே வார்த்தையை வேறு யாராவது சொல்லி இருந்தால் இந்நேரம் நடந்திருப்பதே வேறு என ராமனை எச்சரித்தாள்.

எனக்காக எதுவேண்டுமானாலும் செய்வேன் என்றாயே! என அவளது வாக்குறுதியை நினைவுப்படுத்தி, நான் சீதையோடு அவ்வப்போது கூடிக்களிக்கிறேன். ஆனால், என் தம்பியோ மனைவியை பிரிந்து வந்து விரகதாபத்தில் இருக்கிறான். அவனது தாபத்தை தணித்தால் நான் மிக்க மகிழ்வேன். அவன் என்னைவிட அழகன் என்றான் ராமன்.

அழகு முக்கியமில்லை. உங்களுக்காக எரிந்து கரிக்கட்டைப்போல் இருப்பவனுடன் கூடுவேன். எனக்கு உங்களது மனமகிழ்ச்சியே முக்கியம் என்றாள் சூர்ப்பனகை..

ராமனுக்கு அவளது காதல் புரிந்தது. இருந்தும் ஏகபத்தினி விரதன் என எடுத்த சபதம் அவனது நினைவுக்கு வந்து ஏதும் செய்ய இயலாதவனாய், லட்சுமணன் இருந்த திசையை காட்டினான்.

லட்சுமணனை நெருங்கிய சூர்ப்பனகை, தனது காதல் மொழிகளை சொல்லி, ராமனது வேண்டுகோளையும் சொன்னாள். தாய்க்கும்மேல மதிக்கும் அண்ணிக்கு போட்டியாய் வந்திருக்கும் சூர்ப்பனகை எரித்துவிடுவதுப்போல பார்த்து கண்டபடி அவளை திட்டினான். ராமனும், லட்சுமணனும் தன்னை ஏற்றுக்கொள்ள தடையாய் இருப்பது சீதை என்று உணர்ந்த சூர்ப்பனகை சீதையை கொன்றுவிட நினைத்து சீதையை நோக்கி பாய்ந்தாள். சீதை அலறியபடி அங்கும் இங்கும் ஓடினாள்.

சீதையின் அலறல் சத்தம் கேட்டு லட்சுமணன் பாய்ந்து வந்து சூர்ப்பனகையின் மூக்கினையும், முலையினையும், காதினையும் அறுத்து எறிந்தான். அழுதபடியே அங்கிருந்து சூர்ப்பனகை இலங்கை நோக்கி நடந்தாள். அதன்பின் நடந்த கதை ஊரறியும். ஆனால், அறியாத கதை ஒன்றுண்டு...

இலங்கையினை நோக்கி நடந்த சூர்ப்பனகையை, 'வலிக்கிறதா சூர்ப்பனகை?' என வானிலிருந்து வந்த ஒரு குரல் ஆறுதல் படுத்தியது. அக்குரலுக்கு சொந்தக்காரன், சூர்ப்பனகையின் கணவனான, வித்யுத்ஜிகவனின் குரல் கேட்டு, ராமன்மேல் தான் உருவாக்கிக்கொண்ட காதலும், உறுப்புகள் அறுபட்ட வலியும் மறைந்தது.

வித்யுத்ஜிகவன் அரக்க குலத்தின் பலம் வாய்ந்த ஒரு பகுதியினரின் தலைவன். அவனுக்கு சூர்ப்பனகையை திருமணம் செய்துவித்தான் ராவணன். இருவரும் மனமொத்து மிக்க மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தனர். ராவணனுக்கு மூவுலகமும் தனது ஆட்சிக்கு கொண்டுவர எண்ணினான். வித்யுத்ஜிகவனின் வம்சாவளியினர் தங்கம் போன்ற உடல் பொலிவை கொண்டவர்கள். மனிதர்களால் கொல்லமுடியாத வரம் வாங்கி வந்தவர்கள். ராவணனால் அவர்களை வெல்லமுடியாதென ராவணனுக்கும் தெரியும். இருந்தாலும், மண்ணாசை யாரை விட்டது? தங்கையின் கணவன் நாடு எனவும் பாராது, முக்கியமான தலைவர்கள் இல்லாதபோது வித்யுத்ஜிகவனின் நாட்டின்மீது போர் தொடுத்தான் ராவணன்.

வேறுவழியின்றி ராவணனுடன் நேருக்கு நேர் மோதினான் வித்யுத்ஜிகவன். பல நாட்கள் போர் நீண்டது. ராவணன் தோல்வியை சந்திக்கும் நேரம் நெருங்கியது. ராவணனின் கர்வம் அவனை சூழ்ச்சியில் ஈடுபட செய்தது. சூழ்ச்சி செய்து தங்கையின் கணவனான வித்யுத்ஜிகவனை வெட்டி கொன்று, போரில் வெற்றிப்பெற்றதாக அறிவித்தான் ராவணன்.

தங்கையின் கணவனை கொன்ற குற்ற உணர்ச்சி சிறிதுமின்றி வெற்றிக்களிப்போடு இலங்கைக்கு பயணமானான் ராவணன். கணவனின் உடலைக்காண, வந்த சூர்ப்பனகை, சுவாமி! தங்களை சூழ்ச்சி செய்து கொன்ற என் அண்ணனான கயவனை நான் கொல்வேன். என்னால், முடியாவிட்டால் அவனைப்போலவே நானும் சூழ்ச்சி செய்து அவனை வீழ்த்துவேன். என சபதமெடுத்து இலங்கைக்கு வந்து அண்ணனிடம் தஞ்சம் புகுந்தாள்.

அவளது சபதத்தினை உணராத ராவணன். தங்கையை தனது ஆளுமைக்குட்பட்ட பஞ்சவடி பகுதியை பாதுகாக்கும் பொறுப்பை அவளிடம் ஒப்படைத்தான். பஞ்சவடியில் ராவணனை வீழ்த்தும் நாளுக்காக காத்திருந்தாள். ராமன்+சீதை+லட்சுமணன் அங்கு வந்து தங்கிய செய்தி கேள்விப்பட்டாள். ராமன் தனது பாட்டியான அரக்கி தாடகியை வீழ்த்தியவன். சாதாரண மானுடன் என்ற சேதியும் அவளது காதுக்கு எட்டியது. மானுடனால் மட்டுமே தன்னை கொல்லப்படவேண்டும் என்று ராவணன் வரம் வாங்கி வந்த சேதியும் சூர்ப்பனகை அறிவாள். வித்யுத்ஜிஜவனவை தற்காலிகமாக மறந்தாள். ராமன்மேல் காதல் கொண்டாள். லட்சுமணன்பால் காமபித்து ஏற்பட்டவளாய் நடித்தாள். சீதையின்பால் பொறாமைக்கொண்டாள்.

ராவணன் வீழ்ந்த சேதி கேட்டு ராமர் லட்சுமணருக்கு மானசீகமாய் நன்றி சொல்லி, ராமசீதையை ஆத்மார்த்தமாய் வணங்கி, விபீஷ்ணன் ஆண்டபோதும், தன் கணவனை கொன்ற ராவணன் ஆண்ட நாட்டில் வாழப்பிடிக்காமல் கண்காணாத தூரம் சென்று தனது இறுதி காலத்தை கழித்து வந்தாள்.

சூர்ப்பனகையின் அழகும், பதிபக்தியும், தெய்வ பக்தியும், மதியூகமும் உலகின் பார்வைக்கு மறைந்தது. தன் வாழ்வை அழித்த ராவணனை பழிவாங்க ராமனை விரும்பியதாய் நடித்ததால் அனைவரும் அருவெறுப்பான தோற்றமும், வெறுக்கத்தக்க குணாதிசயம் கொண்ட பெண்ணாக மக்கள் மனதில் பதிய வைக்கப்பட்ட பரிதாபத்திற்குரிய ஜீவனே சூர்ப்பனகை.

காரணமில்லாமல் காரியமில்லை.. அதற்கு சூர்ப்பனகையின் திடீர் காதலும் ஒரு சாட்சி.

  • 1211