திருச்சி செல்ல வேண்டி இருந்ததால், ஏற்கனவே முன் பதிவு செய்திரஎனது இருக்கையில் அமர்ந்திருக்க, ஒரு எழுபது வயது மதிக்க தக்க மிடுக்கான தோற்றத்தில் ஒருவர் ஏறி எனது இருக்கை அருகில் அமர்ந்தார்.
அவருக்கு நடு சீட் இருந்தாலும் எனது இருக்கை வேண்டும் என்பதுபோல பார்த்தார். அவரது பார்வையை புரிந்துகொண்டு எழுந்து இடம் கொடுத்தேன் .
ஒரு நாலு மணி நெரத்தில் திருச்சி வந்துவிடும்.
அவர் பார்வையால் நன்றி தெரிவித்து ஜன்னலோரம் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் . ஈரோடு ஜங்ஷன் வந்தபோது இரண்டு திருநங்கைகள் கை தட்டியபடி வந்தபோது, சிலர் தூங்குவது போல நடிக்க சிலர் நகர்ந்து வேறுபக்கம் சென்றனர்.
என் அருகில் இருந்த பெரியவர் அவர்களை அழைத்து இருவருக்கும் நூறு, நூறு ரூபாய் கொடுத்தார். நான் ஆச்சரியமாக அவரைப் பார்த்தேன்.
எனது ஆச்சரியத்தைப் பார்த்து மெல்ல சிரித்து,
“ அவர்கள் பிறப்பால் கல்யாணம், காட்சி, குடும்பம் அப்படி எதுவும் இல்லாம இருக்காங்க. நாம பணம் கூட கொடுத்து உதவலேனா எப்படி?” என்றார்.
எனக்கு சுருக் என்று தைத்தது.
“சார் உங்களுக்கு பேரன், பேத்திங்க இருக்காங்களா? பசங்க என்ன பண்ணறாங்க? கோயம்பத்தூரில் எங்க இருக்கீங்க?”
“நான் மும்பைல இருக்கேன். எனக்கு கல்யாணம் ஆகலை”
நான் ஆச்சரியத்தோடு அவரைப் பார்த்தேன்
என் பார்வையை புரிந்துகொண்டு மெல்ல சிரித்தார்.
“நான் என்னோட காதலியைப் பார்க்க போய் கிட்டு இருக்கேன்”
மேலும் ஒரு ஆச்சரியத்தைக் கொடுத்தார்
“காதலினு சொல்லறீங்க ஏன் கல்யாணம் பண்ணிக்கலை?:
“அவங்களுக்கு கல்யாணம் ஆயிடிச்சு நான் அவங்களை மறக்க முடியாமல் வேற கல்யாணம் பண்ணிக்கலை”
“அவங்க திருச்சில
இருக்காங்களா?”
“தெரியாது... ஆனா ஒரு நாப்பது வருஷம் கழிச்சு மீட் பண்ணிக்கலாம்னு சொல்லி வச்சுக்கிட்டோம். அவங்க இந்த விநாயகர் சதுர்த்திக்கு திருச்சி கோட்டையில் இருக்கற பிள்ளயார் கோவிலுக்கு
சாயங்காலம் வருவாங்க”
"அதெப்படி கரெக்டா கண்டு பிடிப்பீங்க?"
அவரது பர்ஸ் எடுத்து திறந்து காண்பித்தார்
சின்ன வயது பெண் கண்ணீரோடு இருக்கும் புகைப்படம். இரண்டு புருவங்களுக்கு மத்தியில் சின்னதாக பொட்டு வைத்திருந்தாள்.
அவருடை சின்ன வயது புகைப்படம் இருந்தது. . அவரும் அழுதபடி புகை படத்தில் இருந்தார்.
“நாங்க பிரிந்த நாள் எடுத்துக் கொண்ட போட்டோ... அவ மனசில இருக்கா.. கண்டிப்பா அடையாளம் கண்டு பிடித்து விடுவேன்”
இத்தனை ஆசையா இருக்கீங்க! ரெண்டு பேரும் கல்யாணம் “பண்ணிக்கிட்டு இருந்திருக்கலாமே”
“நாங்க முஸ்லீம்.
கடை வச்சிருந்தோம். வாராவாரம் கோயிலுக்கு குடும்பத்தோடு வருவாங்க. செருப்பு எங்க கடையில் தான் வாங்குவாங்க. எங்க ரெண்டு பேருக்கும் ஒருத்தரை ஒருத்தர் பிடிச்சிருந்தது.
“சார்! யாரு சார் முதல லவ் சொன்னது? நீங்க தானே?
அடக்க முடியாமல் கேட்டு விட்டேன்.
“ லவ் சொன்னது அவங்க தான்! பிரிஞ்சுடலாம்னு சொன்னதும் அவங்கதான்!”
நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க உங்களை போய் வேண்டாம்னு சொல்வாங்களா?
“தம்பி அவங்க வீட்டில விஷயம் தெரிஞ்சிடுச்சு! எல்லோரும் மிரட்டி வச்சிட்டாங்க! அவங்களை எதிர்த்துக்கிட்டு வர அவளால முடியலை. அவ என்ன செய்வா பாவம்?”
“சரி நீங்க வேற கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தானே!”
மனசு பூரா அவ இருக்காப்பா!
அவர் சிரித்தபடி சொன்னாலும் வேதனையை சிரித்தபடி மறைப்பது தெரிந்தது.
எனக்கு அவர் கூட மலைக்கு சென்று அவரது காதலியைப் பார்க்க மனசு ஆசைப்பட்டது. மெதுவாக என் விருப்பத்தை தெரிவித்தேன்.
அவர் எனது கரத்தை அழுத்தப் பற்றினார். .
திருச்சி நெருங்க, நெருங்க ஆர்வத்தோடு மலைக் கோட்டையைப் பார்த்தார். .அவரது ஆர்வம் கண்களில் தெரிந்தது. எனது வேலையை ஒத்தி வைத்து விட்டு மாலை ஐந்து மணிக்கே கிளம்பி அவர் சொன்ன இடத்துக்கு வந்து நின்று கொண்டேன். ..அவர் எனக்கு முன்பே வந்து விட்டார்.
சரியாக ஆறு மணிக்கு ஒரு பாட்டி பேத்தியுடன் கண்களில் ஆர்வத்தோடு சுற்றும் முற்றும் பார்த்தபடி வந்து கொண்டிருந்தாள்..
பேத்தியை பார்த்தவுடன் அவரது சின்ன வயது காதலி தோற்றத்தில் இருந்ததால் பாட்டிதான் அவரது காதலி என்று புரிந்து கொண்டேன்.
சிறுவயது புகைப் படத்தில் புருவங்களுக்கு மத்தியில் சின்ன கருப்பு பொட்டு இப்போது பெரிய சிவப்பு பொட்டு அப்படியே இருந்தார். அவரும் அவரை புன் சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார்.
எங்களைப் பார்த்ததும் பாட்டியின் நடையில் வேகம் தெரிந்தது.
எங்கள் அருகில் வந்தவர் முதலில் அவரது பேத்தியை அறிமுகப்படுத்தினார்.
“ இவ என்னோட பேத்தி ப்ரீத்தி “
ப்ரீத்தி எங்களுக்கு வணக்கம் தெரிவித்தாள்.
என்னைப் பார்த்து அவரிடம், “ நான் யார்? என்பதுபோல பார்த்தார்.
பெரியவர், “ இது என்னோட மகன் அப்துல்” என்றார் . எங்கள் இருவரையும் அன்போடு பார்த்து எனக்கு ஆசிர்வதித்தார் .
இருவரும் வேறு ஒன்றும் பேசத் தோன்றாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தனர்.
நான் அடக்க முடியாமல்.....அம்மா நீங்க எங்க இருக்கீங்க திருச்சிதானா?
“நாங்க டெல்லில இருக்கோம் இத்தனை வருஷம் கழிச்சு இப்பதான் வரோம் நாளைக்கு திரும்பிடுவோம் இவளுக்கு எக்ஸாம் இருக்கு” என்றார் .
“உங்க வீட்டுக்காரர் நலமா?”
“ம்ம்.. நல்லா இருக்காரு”
பேத்தி பாட்டியை நிமிர்ந்து பார்த்தாள். .
“உங்க அம்மா நல்லா இருக்காங்களா?”
“ம்ம்.. நல்லா இருக்காங்க”
நான் உடனே பதில் சொல்லி பெரியவரைப் பார்த்தேன்.
அவர் சிரித்தபடி பார்த்துக் கொண்டிருந்தார்.
அவர்கள் சொல்லிக் கொண்டு சென்றபின் திரும்பி நடக்க ஆரம்பித்தோம் .
பாட்டியிடம் செல்போன் நம்பர் வாங்காதது ஞாபகத்திற்கு வந்தது. .
அவர்கள் சென்று கொண்டிருந்தனர்.
நான் அவர்கள் பின்னே சென்று கொண்டிருந்தபோது,
“ஏன் பாட்டி? தாத்தா நல்லா இருக்காருன்னு பொய் சொன்னே?”
“ தாத்தா செத்துப் போனதைச் சொல்லி அவங்க மனசு கஷ்டபடவேண்டாமேன்னுதான் ..” .என்று பாட்டி .சொன்னது தெளிவாகக் கேட்டது........
- 973