Feed Item
·
Added a news

ஈரான் ஆதரவு பெற்ற லெபனான் போராளிக் குழுவான ஹிஸ்புல்லா செவ்வாயன்று (அக். 22) இஸ்ரேலின் டெல் அவிவ் புறநகர்ப் பகுதியில் உளவுத் தளம் உட்பட இரண்டு நிலைகளை குறிவைத்து தாக்கியதாக தெரிவித்துள்ளது.

ஹிஸ்புல்லாவின் அறிக்கையை மேற்கோள் காட்டி, இராணுவ புலனாய்வுப் பிரிவின் Glilot தளத்திற்கு எதிராக ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக AFP செய்தி வெளியிட்டுள்ளது.

டெல் அவிவின் புறநகர்ப் பகுதியில் உள்ள மற்றொரு இடத்தில் ஹிஸ்புல்லா ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹைஃபாவில் உள்ள இஸ்ரேலிய கடற்படைத் தளத்தின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தோராயமாக ஐந்து எறிகணைகள் லெபனானில் இருந்து வந்ததாகவும், அவற்றில் பெரும்பான்மையானவை இடைமறிக்கப்பட்டதாகவும் இஸ்ரேலிய இராணுவம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

இதனிடையே, ஹிஸ்புல்லாவிற்கு நிதியுதவி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட வங்கியொன்றின் லெபனான் கிளைகள் மீது தாக்குதல் நடத்திய ஒரு நாளுக்கு பின்னர் இஸ்ரேல் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கடந்த திங்களன்று பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகளில் 11 இஸ்ரேலிய தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தது, அவற்றில் பல ஹிஸ்புல்லாவின் நிதி நடவடிக்கைகளுடன் தொடர்புடைய அல்-கார்ட் அல்-ஹசான் வங்கி கிளைகள் குறிவைக்கப்பட்டிருந்தன.

இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையிலான மோதல் ஒரு வருடத்திற்கு முன்பு காசா போரின் தொடக்கத்தில் பாலஸ்தீனிய போராளிகளான ஹமாஸுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதுடன் தொடங்கியது.

லெபனான் சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, தற்போதைய மோதலில் நாட்டில் 2,400 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதுடன், 11,600க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இதேவேளை, போர் பதற்றம் அதிகரித்துள்ள பின்னணியில் அமெரிக்காவின் (அமெரிக்கா) வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் திங்களன்று மேற்கு ஆசியாவிற்கு விஜயம் செய்துள்ளார்.

2023 ஒக்டோபர் மாதம் ஏழாம் திகதி காசா யுத்தம் ஆரம்பமான பின்னர், இப்பகுதிக்கு அவர் மேற்கொள்ளும் 11ஆவது பயணம் இதுவாகும்.

இஸ்ரேல் மற்றும் அண்டை நாடுகளான அரபு நாடுகளின் தலைவர்களுடன் காசாவில் போரை முடிவுக்கு கொண்டு வருவதன் முக்கியத்துவம் குறித்து இதன்போது பிளிங்கன் கலந்துரையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

000

  • 607