Feed Item
·
Added a news

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டிய நியூஸிலாந்து அணி 36 ஆண்டுகளின் பின்னர் இந்திய மண்ணில் முதல் டெஸ்ட் வெற்றியைப் பெற்றுள்ளது.

நியூசிலாந்து அணி இந்தியாவில் பெற்ற மூன்றாவது வெற்றி இதுவென்பதோடு 1969 ஆம் அண்டு நாக்பூரில் நடந்த டெஸ்டில் முதல் முறை வெற்றியீட்டிய நியூஸிலாந்து அதற்குப் பின்னர் 1988 ஆம் ஆண்டிலேயே கடைசியாக டெஸ்ட் போட்டி ஒன்றில் வெற்றியீட்டி இருந்தது.

பெங்களூரில் மழைக்கு மத்தியில் நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் முழுவதும் மழையால் தடைப்பட்ட நிலையில் இரண்டாவது நாளில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 46 ஓட்டங்களுக்கே சுருண்டது அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.

நியூஸிலாந்து தனது முதல் இன்னிங்ஸுக்காக 402 ஓட்டங்களை பெற்றது. இந்நிலையில் 356 ஓட்டங்களால் பின்னடைவைச் சந்தித்து இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இந்திய அணிக்கு சப்ராஸ் கான் தனது கன்னி சதத்தைப் (150) பெற்றதோடு ரிஷாப் பாண்ட் (99) ஒரு ஓட்டத்தால் சதத்தை தவறவிட்டார்.

இதன்மூலம் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 462 ஓட்டங்களைப் பெற்றபோதும் அந்த அணிக்கு சவாலான வெற்றி இலக்கொன்றை நிர்ணயிக்க முடியாமல்போனது.

இதன்படி நியூஸிலாந்து அணிக்கு 107 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட நிலையில் ஆட்டத்தின் கடைசி நாளான நேற்று (20) அந்த அணி 27.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 110 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

இதன்மூலம் மூன்று போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் நியூஸிலாந்து அணி 1௲0 என முன்னிலை பெற்றிருப்பதோடு இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் ஒக்டோபர் 24 ஆம் திகதி பூனேவில் ஆரம்பமாகவுள்ளது.

அதே நாளில் (20)அந்நாட்டு மகளிர் அணியும் T20 உலகக் கிண்ணத்தை வென்றுள்ளது. பலமுறை கை நழுவிப் போன இந்தக் கோப்பையை முதன்முறையாக வென்று மகளிர் அணி வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளது. இதனால் நியூஸிலாந்து கிரிக்கெட் இரசிகர்கள் இரட்டைக் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

00

  • 1654